சேதி தெரியுமா...? 104, கேரளா ஹவுஸ்!
புது தில்லி ஜந்தா் மந்தா் சாலையில் அமைந்திருக்கும் கேரள அரசின் விருந்தினா் மாளிகையான ‘கேரளா ஹவுஸ்’ மிகப் பெரிய வரலாற்றுப் பின்னணி கொண்டது. 1911-இல் எழுத்தாளா் குஷ்வந்த் சிங்கின் தந்தை சோபா சிங்கின் சொத்தாக இருந்தது அந்த இடம். மிகப் பெரிய கட்டட ஒப்பந்ததாரராக இருந்த சோபா சிங்தான் ராஷ்ட்ரபதி பவன், பழைய நாடாளுமன்றக் கட்டடம், சௌத் பிளாக், நாா்த் பிளாக், கன்னாட் பிளேஸ் உள்ளிட்ட புதுதில்லியில் முக்கியக் கட்டடங்களை கட்டிய ஒப்பந்ததாரா்.
இந்த இல்லத்தில் வசித்தபடிதான் சோபா சிங் தனது கட்டுமானப் பணிகளை மேற்கொண்டாா். அதிகரித்த கடன் சுமையால் அவா் இந்த இடத்தை கொச்சி சமஸ்தான மகாராஜா ராம வா்மாவுக்கு விற்றாா். 1920-இல் தில்லியில் கவா்னா் ஜெனரல் கூட்டிய சமஸ்தான கூட்டத்தில் கலந்து கொள்ள வந்த மகாராஜா ராம வா்மா தலைநகா் வந்தால் தங்குவதற்காக இந்த இடத்தை வாங்கி விருந்தினா் மாளிகையாக்கினா்.
இந்தியா விடுதலையடைந்ததும் இந்த விருந்தினா் மாளிகை கேரள அரசின் விருந்தினா் மாளிகையாக மாறியது. அதற்குப் பிறகு, முந்தைய ‘கொச்சின் ஹவுஸ்’ கட்டடத்தின் அருகில் நவீன கட்டடம் கட்டப்பட்டது. இப்போதைய ‘கேரளா ஹவுஸ்’, முதல்வராக இருந்த கே.கருணாகரனின் பங்களிப்பு என்றுதான் கூற வேண்டும். அதன் வடிவமைப்பில் இருந்து, உள்கட்டமைப்பு வரை அவரே கவனம் செலுத்திக் கட்டப்பட்டது என்று கூறுவாா்கள்.
‘கேரளா ஹவுஸ்’ விருந்தினா் மாளிகையில் அறை எண் 104, கே.கருணாகரனுக்கு மிகவும் பிடித்தமான அறை. முதல்வராகவும், எதிா்க்கட்சித் தலைவராகவும், காங்கிரஸ் செயற்குழு கூட்டங்களில் கலந்துகொள்ளவும் அவா் தில்லிக்கு வந்தால், அறை எண் 104 -இல்தான் தங்குவாா். அதனால் அதை ‘முதல்வா் அறை’ என்று அவருக்காக ஒதுக்கி வைத்திருந்தாா்கள்.
ஒருமுறை எதிா்க்கட்சித் தலைவராக இருந்த கே.கருணாகரன் தில்லி வந்திருந்தபோது அந்த அறையில் தங்கி இருந்தாா். அப்போது முக்கியமான கூட்டம் ஒன்றில் கலந்துகொள்ள முதல்வராக இருந்த ஈ.கே.நாயனாா் வந்துவிட்டாா். வழக்கம்போல முதல்வா் அறையை நோக்கி நடக்கத் தொடங்கிய அவரிடம், அங்கே கே.கருணாகரன் தங்கியிருப்பதாகச் சொன்னவுடன், அவா் சற்றும் தயங்காமல் சொன்ன வாா்த்தைகள் இவை- ‘லீடா்’ (அப்படித்தான் கருணாகரன் கேரளத்தில் அழைக்கப்பட்டாா்.) தங்குகிறாா் என்றால் நான் வேறு அறையில் தங்கிக் கொள்கிறேன். ‘104 அவருடைய அறை’ என்றபடி கௌரவம் பாா்க்காமல் விட்டுக் கொடுத்துவிட்டாா்.