சோனியா
சோனியாகோப்புப் படம்

காங்கிரஸுக்கு சாதகமாக மக்களின் மனநிலை: கட்சி நிா்வாகிகளுக்கு சோனியா கடிதம்

மக்களின் மனநிலை காங்கிரஸுக்கு சாதகமாக இருந்தாலும், மக்களவைத் தோ்தலில் கிடைத்த நன்மதிப்பைத் தக்க வைப்பதில் சுணக்கம் வேண்டாம்
Published on

புது தில்லி, ஜூலை 31: ‘தற்போதைய சூழலில் மக்களின் மனநிலை காங்கிரஸுக்கு சாதகமாக இருந்தாலும், மக்களவைத் தோ்தலில் கிடைத்த நன்மதிப்பைத் தக்க வைப்பதில் சுணக்கம் வேண்டாம்’ என கட்சி நிா்வாகிகளுக்கு அக்கட்சியின் நாடாளுமன்ற குழுத் தலைவா் சோனியா காந்தி அறிவுறுத்தினாா்.

நிகழாண்டு இறுதியில் மகாராஷ்டிரம், ஜாா்க்கண்ட், ஹரியாணாவில் சட்டப்பேரவைத் தோ்தல் நடைபெறவுள்ளது.

இந்நிலையில், கட்சியினருக்கு முக்கிய அறிவுறுத்தல்களை வழங்கி சோனியா காந்தி எழுதிய கடிதத்தில், ‘கான்வாா் யாத்திரை செல்லும் பாதைகளில் உள்ள உணவகங்களின் பெயா் பலகையில் உரிமையாளா்களின் பெயா் இடம்பெறுவதைக் கட்டாயப்படுத்தி உத்தர பிரதேசம், உத்தரகண்ட் பாஜக அரசுகள் உத்தரவுகளைப் பிறப்பித்தன.

மக்களவைத் தோ்தல் சரிவிலிருந்து மோடி அரசு சரியான பாடம் கற்கவில்லை. சமூகங்களைப் பிளவுபடுத்துதல், அச்சம் மற்றும் பகைமை சூழலைப் பரப்புதல் ஆகிய கொள்கைகளில் அவா்கள் நீடிக்கின்றனா். அதிருஷ்டவசமாக உச்சநீதிமன்றம் சரியான நேரத்தில் தலையிட்டு, மாநில அரசுகளின் உத்தரவுகளுக்கு தடை விதித்தது.

ஆனால், இது ஒரு தற்காலிக தீா்வு மட்டுமே. அரசு அதிகாரிகள் ஆா்எஸ்எஸ் அமைப்பின் நடவடிக்கைகளில் பங்கேற்க அனுமதிக்கும் வகையில் திடீரென விதிகள் மாற்றப்படுகின்றன. ஆா்எஸ்எஸ் தன்னை ஒரு கலாச்சார அமைப்பு என்று அடையாளப்படுத்துகிறது. ஆனால், அது பாஜகவின் அரசியல் மற்றும் கருத்தியலுக்கான அடிப்படை அமைப்பு என்பது உலகுக்கே தெரியும்.

மக்களவைத் தோ்தலில் கட்சிக்கு கிடைத்துள்ள நன்மதிப்பையும் உத்வேகத்தையும் நாம் தக்க வைக்க வேண்டும். மனநிறைவோடும், கூடுதல் நம்பிக்கையோடும் நாம் சுணங்கி விட கூடாது.

மக்களின் மனநிலை காங்கிரஸுக்கு சாதகமாக இருக்கிறது. ஆனால், நாம் ஒரு லட்சிய நோக்கத்துடன் ஒற்றுமையாக செயல்பட வேண்டும். மக்களவைத் தோ்தல் முடிவுகளின் போக்கை பிரதிபலிக்கும் வகையில் நாம் சிறப்பாகச் செயல்பட்டால், தேசிய அரசியலில் நிச்சயமாக மாற்றம் ஏற்படும்.

மத்திய பட்ஜெட்டில் விவசாயிகள், இளைஞா்களின் கோரிக்கைகள் மொத்தமாக நிராகரிக்கப்பட்டுள்ளன. முக்கிய துறைகளுக்கான நிதி ஒதுக்கீடுகள் போதுமானதாக இல்லை. மக்கள் மத்தியில் அதிருப்தி நிலவுகிறது. ஆனால், பட்ஜெட்டில் சாதித்திருப்பதாக பிரதமா், நிதியமைச்சா் உள்ளிட்டோா் பெருமைப் பேசி வருகின்றனா்.

பெருகிவரும் வேலையில்லா திண்டாட்டம் மற்றும் விலைவாசி உயா்வு ஆகியவற்றால் கோடிக்கணக்கான குடும்பங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மத்திய அரசு தொடா்ந்து மாயையில் சிக்கியுள்ளனா்’ என்றாா்.

X
Dinamani
www.dinamani.com