
நிலச்சரிவுகளால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள வயநாடு மாவட்டத்தில் மீட்புப்பணிகள் துரிதகதியில் நடைபெற்று வருகின்றன. 2-வது நாளாக மீட்புப்பணி தொடருகிறது.
குழந்தைகள், பெண்கள் உள்பட 174 போ் உயிரிழந்துள்ளதாகக் களநிலவரங்கள் தெரிவிக்கின்றன. நிலச்சரிவுகளில் நூற்றுக்கணக்கானோரைக் காணவில்லை என்பதால் அங்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடுமென அஞ்சப்படுகிறது.
இதுவரை 160 பேரின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாகவும், மேலும், 191 பேரைக் காணவில்லை என்றும் களநிலவரங்கள் தெரிவிக்கின்றன.
இந்த நிலையில், நிலச்சரிவுகளால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளிலிருந்து இதுவரை 1,592 பேர் மீட்கப்பட்டுள்ளதாக கேரள முதல்வர் பினராயி விஜயன் இன்று(ஜூலை 31) செய்தியாளர்களுடன் தெரிவித்துள்ளார்.
வயநடு இயற்கை பேரிடர் தொடர்பாக இன்று(ஜூலை 31) கேரள கேபினட் அமைச்சர்களுடனான அவசர ஆலோசனைக் கூட்டத்துக்குப் பின் அவர் பேசியதாவது, மலைவாழ் மக்களை மாற்று இடத்திற்கு அழைத்து சென்றுள்ளோம். அவர்களுக்கு தேவையான உணவு உள்ளிட்ட வசதிகள் செய்து தரப்பட்டுள்ளன.
வயநாடு மாவட்டத்தில் தற்போது 82 நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த முகாம்களில் 2,000க்கும் மேற்பட்டோர் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
மேப்பாடி பகுதியில், 8 நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த முகாம்களில் 421 குடும்பங்களைச் சேர்ந்த 1,486 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
முண்டக்கை பகுதிக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு அங்கும், அட்டமலா, சூரல்மலா பகுதிகளிலும் மீட்புப்பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. இன்று கூடுதலாக 132 ராணுவத்தினர் மீட்புப் பணிகளுக்காக வந்தடைந்துள்ளனர். 2 ஹெலிகாப்டர்களும் பயன்படுத்தப்படுகின்றன.
மீட்கப்பட்டுள்ள உடல்களுக்கு நேற்றிரவிலும் பிரேதப் பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது. கோழிக்கோட்டிலும் தலசேரியிலும் இருந்து மருத்துவர்கள் குழு ஒன்றும் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளுக்கு வரவழைக்கப்பட்டுள்ளது என்று அவர் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.