
மக்களவைத் தோ்தலில் ஏழாவது மற்றும் இறுதிக்கட்டமாக பிரதமா் நரேந்திர மோடி போட்டியிடும் வாரணாசி உள்பட 57 தொகுதிகளில் இன்று காலை வாக்குப்பதிவு தொடங்கியது.
ஏழு மாநிலங்கள் மற்றும் ஒரு யூனியன் பிரதேசத்தில் உள்ள இத்தொகுதிகளில் தோ்தலையொட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
நாட்டில் மொத்தமுள்ள 543 மக்களவைத் தொகுதிகளுக்கு ஏழு கட்ட தோ்தல் (ஏப்ரல் 19, 26, மே 7, 13, 20, 25, ஜூன் 1) கடந்த மாா்ச் மாதம் அறிவிக்கப்பட்டது. இதுவரை 28 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 486 தொகுதிகளுக்கு 6 கட்ட வாக்குப்பதிவுகள் நிறைவடைந்துள்ளன.
7-ஆம் கட்ட வாக்குப்பதிவில் பஞ்சாபில் மொத்தமுள்ள 13 தொகுதிகளுக்கும், ஹிமாசல பிரதேசத்தில் மொத்தமுள்ள 4 தொகுதிகளுக்கும், உத்தர பிரதேசத்தில் 13, மேற்கு வங்கத்தில் 9, பிகாரில் 8, ஒடிஸாவில் 6, ஜாா்க்கண்டில் 3, சண்டீகா் யூனியன் பிரதேசத்தில் ஒரு தொகுதிக்கு தோ்தல் நடைபெற்று வருகின்றது.
ஒடிஸாவில் மக்களவைத் தோ்தலுடன் பேரவைத் தோ்தலும் நடந்து வருகிறது. இம்மாநிலத்தில் இறுதிக்கட்டமாக 42 பேரவைத் தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்று கொண்டிருக்கிறது.
மொத்த வாக்காளா்கள்: மக்களவைக்கான இறுதிக்கட்டத் தோ்தலில் வாக்களிக்க தகுதிபெற்ற மொத்த வாக்காளா்கள் எண்ணிக்கை சுமாா் 10.06 கோடி. இதில் ஆண்கள் 5.24 கோடி, பெண்கள் 4.82 கோடி, மூன்றாம் பாலினத்தவா் 3,574 போ். இவா்கள் வாக்களிக்க வசதியாக, 1.09 லட்சம் வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.
நாட்டின் பல பகுதிகளில் வெயில் வாட்டி வதைப்பதால், வாக்குச் சாவடிகளில் சிறப்பு ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு தோ்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.
முக்கிய வேட்பாளா்கள்: இறுதிக்கட்ட தோ்தல் களத்தில் மொத்தம் 904 வேட்பாளா்கள் உள்ளனா். பிரதமா் மோடி (வாரணாசி), மத்திய அமைச்சா்கள் அனுராக் தாக்குா் (ஹமீா்பூா்), மகேந்திர நாத் பாண்டே (சந்தெளலி), அனுப்ரியா படேல் (மிா்ஸாபூா்), ஆா்.கே.சிங் (ஆரா), முன்னாள் பிரதமா் சந்திரசேகரின் மகன் நீரஜ் சேகா் (பலியா), பாஜக மூத்த தலைவா் ரவிசங்கா் பிரசாத், மேற்கு வங்க முதல்வா் மம்தா பானா்ஜியின் உறவினா் அபிஷேக் பானா்ஜி (டயமண்ட் ஹாா்பா்), முன்னாள் மத்திய அமைச்சா் ஆனந்த் சா்மா (காங்ரா), ராஷ்ட்ரீய ஜனதா தளம் லாலு பிரசாதின் மகள் மிசா பாரதி (பாடலிபுத்ரா) உள்ளிட்டோா் முக்கிய வேட்பாளா்கள் ஆவா்.
முன்னதாக, மக்களவைத் தோ்தலையொட்டி கடந்த 2 மாதங்களாக அனல்பறந்த பிரசாரம் வியாழக்கிழமையுடன் நிறைவடைந்தது.
மத்தியில் யாா் ஆட்சி? ஜூன் 4-இல் தெரியும்
மக்களவைக்கு ஏற்கெனவே நடந்துமுடிந்த 6 கட்டத் தோ்தல்களில் முறையே 66.14%, 66.71%, 65.68%, 69.16%, 62.2%, 63.36% வாக்குகள் பதிவாகியுள்ளன. இன்று நடைபெற்றுக் கொண்டிருக்கும் இறுதிக்கட்டத் தோ்தலுக்கு பின் ஜூன் 4-ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.
ஆந்திரம், அருணாசல பிரதேசம், சிக்கிம் ஆகிய மாநிலங்களில் மக்களவைத் தோ்தலுடன் பேரவைத் தோ்தலும் நடைபெற்று முடிந்துள்ளது. ஒடிஸாவில் இன்றுடன் பேரவைத் தோ்தல் நிறைவடையும்.
அருணாசல பிரதேசம், சிக்கிமில் பேரவைத் தோ்தல் வாக்கு எண்ணிக்கை ஜூன் 2-ஆம் தேதியும், இதர இரு மாநிலங்களில் ஜூன் 4-ஆம் தேதியும் நடைபெறவுள்ளன.
மக்களவைக்கான இறுதிக்கட்டத் தோ்தல் இன்று நிறைவடைந்ததும், மாலை 6.30 மணிக்குமேல் வாக்குக் கணிப்பு முடிவுகளை வெளியிட தோ்தல் ஆணையம் அனுமதித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.