ஒரு சம்பவத்தில் ஒட்டுமொத்த குடும்பமும்.. சிறுவன் தாய் கைதானதன் பின்னணி!

புணே கார் விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்காவது நபராக சிறுவனின் தாயும் கைதானார்.
விபத்தை ஏற்படுத்திய கார்
விபத்தை ஏற்படுத்திய கார்
Published on
Updated on
1 min read

புணே கார் விபத்து சம்பவத்தில், ஏற்கனவே சிறுவன், அவரது தந்தை, தாத்தா என மூன்று பேர் கைதான நிலையில், சிறுவனின் ரத்த மாதிரியை மாற்றிய குற்றத்தில் தாயும் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதில் மிக முக்கிய குற்றச்சாட்டு என்னவென்றால், சிறுவனின் ரத்த மாதிரியை குப்பையில் வீசிவிட்டு, தாய் தனது ரத்த மாதிரியை பரிசோதனைக்கு அனுப்புவதற்குக் கொடுத்துள்ளது காவல்துறை விசாரணையில் தெரிய வந்திருப்பதைத் தொடர்ந்தே அவர் கைது செய்யப்பட்டு இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவிருக்கிறார்.

இது குறித்து காவல்துறை ஆணையர் அமிதேஷ் குமார் கூறுகையில், விபத்து தொடர்பான விசாரணையில், சிறுவனின் ரத்த மாதிரியை மாற்றிவிட்டு, அதற்கு பதிலாக, தாயாரின் ரத்த மாதிரி பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது என்றார்.

விசாரணை நீதிமன்றத்திலும் காவல்துறையினர், இந் தகவலை தெரிவத்திருந்தனர். இதையடுத்து, சிறுவனின் தந்தை விஷாலை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரியிருந்தனர். மேலும், சிறார் சீர்திருத்தப் பளியில் வைக்கப்பட்டிருக்கும் சிறுவனிடம் விசாரணை நடத்தவும் காவல்துறையினருக்கு அனுமதி வழங்கப்பட்டது.

வழக்கமாக, பெற்றோர் முன்னிலையில்தான், சிறுவனிடம் விசாரணை நடத்த முடியும் என்பது சிறார் நீதிச் சட்டம்.

கடந்த மே 19-ஆம் தேதி மகாராஷ்டிர மாநிலம் புணேயில், 18 வயதுக்குள்பட்ட சிறுவன் மிக வேகமாக ஓட்டிச் சென்ற காா் மோதி தகவல் தொழில்நுட்பப் பணியாளா்கள் இருவா் உயிரிழந்தனா். இதைத்தொடா்ந்து அந்தச் சிறுவன் கைது செய்யப்பட்டாா்.

புணேயில் உள்ள அரசு மருத்துவமனையில் சிறுவனின் ரத்த மாதிரி பரிசோதிக்கப்பட இருந்த நிலையில், அந்த ரத்த மாதிரி குப்பைத் தொட்டியில் வீசப்பட்டது. அதற்குப் பதிலாக சிறுவனின் தாயாரின் ரத்த மாதிரி பரிசோதனைக்கு வைக்கப்பட்டது.

இந்த முறைகேடு தொடா்பாக அந்த மருத்துவமனை மருத்துவா்கள் அஜய் தவாரே, ஸ்ரீஹரி ஹல்னோா், பணியாளா் அதுல் காட்காம்ப்லே ஆகிய 3 பேரைக் காவல் துறை கைது செய்தது. சிறுவனின் தந்தையிடம் இருந்து பணம் பெற்றுக்கொண்டு ரத்த மாதிரியை மாற்றிய முறைகேட்டில் மருத்துவா்கள் ஈடுபட்டதாகக் குற்றஞ்சாட்டப்பட்டது.

சிறுவன் ஓட்டிய கார் விபத்துக்குள்ளானதும், குடும்ப கார் ஓட்டுநரை மிரட்டி, கார் ஓட்டுநர் இருக்கைக்கு வருமாறு கட்டாயப்படுத்தி, காவல்துறையிடமும் தானே காரை ஓட்டியதாக ஒப்புக்கொள்ளுமாறு வலியுறுத்திய குற்றச்சாட்டில் சிறுவனின் தாத்தாவும் கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com