

கன்னியாகுமரி விவேகானந்தா் மண்டபத்திற்கு சென்றிருந்த பிரதமர் மோடி, அங்கு 3 நாள் தியானம் மேற்கொண்டார். அதைத்தொடர்ந்து, பிரதமா் நரேந்திர மோடி சனிக்கிழமை மாலை தியானத்தை நிறைவு செய்தாா்.
விவேகானந்தா் மண்டபத்தில் தியானத்தை நிறைவு செய்த பிரதமா் மோடி, 133 அடி உயர திருவள்ளுவா் சிலையின் பாதத்தில் மாலையணிவித்து வணங்கினாா். அதனைத்தொடர்ந்து அங்கு அவர் தன் கைப்பட எழுதிய செய்தி என்ன? என்பதை அறிய பரவலாகப் பேராவல் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில், குமரி திருவள்ளுவர் சிலையில், பிரதமர் மோடி எழுதியது என்ன? என்ற தகவல் வெளியாகியுள்ளது.
”மாபெரும் துறவி திருவள்ளுவரின் காலடியில் நிற்பது சிறந்த அனுபவம். இலக்கியம் மற்றும் தத்துவவியலின் உச்சமாக இருப்பவர் திருவள்ளுவர்.
வாழ்வியல், சமூகம், கடமை, தர்மம் ஆகியவற்றை குறித்து திருக்குறளில் கூறப்பட்டுள்ள ஆழமான கருத்துகள் உலகமெங்கும் மக்களின் இதயங்களை வென்றுள்ளது.
சர்வதேச அளவிலான கூட்டங்களிலும், தேசிய அளவிலான கூட்டங்களிலும், திருக்குறளில் கூறப்பட்டுள்ள கருத்துகளை மேற்கோள் காட்டி பேசும் பாக்கியம் எனக்கு கிடைத்துள்ளது. மேலும், திருக்குறளை பல மொழிகளிலும் மொழிபெயர்த்து வெளியிடும் பாக்கியமும் கிட்டியுள்ளது எனக்கு.
’வளர்ச்சியடைந்த இந்தியா’ என்ற நம் இலக்கை அடைய திருவள்ளுவரின் எழுத்து உத்வேகமளிக்கிறது. இன்று, சர்வதேச பிரச்னைகளுக்கு தீர்வு காணுவதில், இந்தியா பெரும்பங்காற்ற வேண்டுமென்பதை நோக்கி உலகம் நம்மை திரும்பிப் பார்க்கிறது.
இந்த தருணத்தில், உலகளாவிய சிந்தனைகளை உள்ளடக்கிய ’திருவள்ளுவரின் காலத்தை வென்ற போதனைகள்’, அமைதி, மேம்பாடு, வளமை ஆகியவற்றை அடைவதற்கான உலகளாவிய செயல்பாட்டுக்கு முக்கிய பங்காற்றும்” என்று எழுதியுள்ளார் பிரதமர் மோடி.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.