
மக்களவைத் தேர்தல் வெற்றியைக் கொண்டாட அரசியல் கட்சிகளும், வேட்பாளர்களும் அதிக எண்ணிக்கையிலான லட்டுகளை ஆர்டர் கொடுத்துள்ளனர்.
உத்தரப் பிரதேசத்தில் தேர்தல் வெற்றியைக் கொண்டாடும் வகையில் அரசியல் கட்சிகளுக்கு 11 வகையான லட்டுகள் செய்யப்பட்டுள்ளன. இரவு முழுவதும் இப்பணி நடைபெறும் எனவும் இனிப்பக உரிமையாளர்கள் கூறுகின்றனர்.
மக்களவைத் தேர்தலில் பாதிவான வாக்குகள் நாளை (ஜுன் 4) எண்ணப்படுகின்றன. இதற்காக வாக்கு எண்ணும் மையங்களில் அனைத்து வகையான முன்னேற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.
இந்நிலையில், தேர்தலில் தங்கள் கட்சியின் வெற்றியைக் கொண்டாடுவதற்கும், வாக்காளர்களின் வெற்றியைக் கொண்டாடுவதற்கும் இனிப்புகளுக்கான ஆர்டர்கள் குவிந்து வருகின்றன. குறிப்பாக பல கடைகளில் லட்டுகளுக்கு ஆர்டர் குவிகின்றன.
தேர்தலையொட்டி கட்சிகளின் வெற்றியைக் கொண்டாட 11 வகையான லட்டுகள் தயாரிக்கப்படுவதாக இனிப்பக உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இது தொடர்பாக பேசிய உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த இனிப்பக உரிமையாளர் உமேஷ் குப்தா, ''கட்சிகளிடமிருந்து லட்டுக்கான முன்பதிவு அதிகரித்து வருகிறது. தங்கள் கட்சி வேட்பாளர்கள் நிச்சயம் வெற்றி பெறுவார்கள் என்ற நம்பிக்கையில் பல கட்சிகளைச் சேர்ந்தவர்களும் லட்டுகளுக்கு ஆர்டர் கொடுக்கின்றனர். தேர்தல் முடிவு தினத்தைக் கொண்டாடுவதற்காக 11 வகையான லட்டுகளை நாங்கள் தயாரித்து வருகிறோம். லட்டு தயாரிக்கும் பணிகளில் கூடுதல் பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இரவு முழுவதும் லட்டு தயாரிக்கும் பணிகள் நடைபெறும்'' எனக் குறிப்பிட்டார்.
தேர்தல் கருத்துக்கணிப்புகளின்படி பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி பெரும்பான்மை பெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பாஜகவைச் சேர்ந்த நிர்வாகிகள், கொண்டாட்டத்துக்கு தயாராகும் வகையில், இனிப்புகளையும் பட்டாசுகளையும் ஆர்டர் கொடுத்துள்ளனர்.
இந்தியா கூட்டணியைச் சேர்ந்தவர்களும், வெற்றி பெறும் நம்பிக்கையில் வெற்றிக் கொண்டாட்டத்துக்கு தயாராகி வருகின்றனர். தில்லியில் கூடுமாறு இந்தியா கூட்டணி கட்சி தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. தில்லியில், தேர்தல் வெற்றியை கொண்டாடுவதற்கான நடவடிக்கைகளை காங்கிரஸ் கட்சி மேற்கொண்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.