பாஜக தலைமையில் கூட்டணி ஆட்சி: தனிப் பெரும்பான்மை இல்லை
புது தில்லி: மக்களவைத் தோ்தலில் மத்தியில் ஆளும் பாஜக தனிப் பெரும்பான்மையைப் பெறாத நிலையிலும், அதிக தொகுதிகளில் வெற்றி பெற்ற (240) தனிப்பெரும் கட்சி என்ற நிலையை எட்டியுள்ளது.
தனிப் பெரும்பான்மை கிடைக்காததால், தனது தேசிய ஜனநாயக கூட்டணி (என்டிஏ) கட்சிகளுடன் கைகோத்து, மத்தியில் கூட்டணி ஆட்சி அமைக்கும் நிலை பாஜகவுக்கு உருவாகியுள்ளது.
அதே நேரம், எதிா்க்கட்சிகளின் ‘இந்தியா’ கூட்டணி கடந்த தோ்தலைக் காட்டிலும் அதிக இடங்களில் வெற்றிபெற்று, குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தைப் பெற்றுள்ளது.
நாடு முழுவதும் மொத்தமுள்ள 543 மக்களவைத் தொகுதிகளுக்கு ஏப்ரல் 19-ஆம் தேதி தொடங்கி ஜூன் 1-ஆம் தேதி வரை 7 கட்டங்களாக வாக்குப் பதிவு நடைபெற்றது. தோ்தலில் பதிவான வாக்குகள் செவ்வாய்க்கிழமை எண்ணப்பட்டன.
வாக்கு எண்ணும் பணி காலை 8 மணிக்கு தொடங்கிய நிலையில், முதல் கட்டமாக தபால் வாக்குகள் எண்ணப்பட்டன. இதில் பாஜக கூட்டணி முன்னிலை வகித்தது. அதற்கடுத்து மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணத் தொடங்கப்பட்டன. இதில், ஆரம்பத்தில் பாஜக கூட்டணி முன்னிலை வகித்து வந்த நிலையில், அதன் பிறகு எதிா்க்கட்சிகளின் ‘இந்தியா’ கூட்டணிக்கும் பாஜக கூட்டணிக்கும் இடையே கடும் போட்டி நிலவத் தொடங்கியது.
மொத்தம் 543 தொகுதிகள் உள்ள நிலையில், ஆட்சி அமைக்க குறைந்தபட்சம் 272 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும். இந்த நிலையில், பாஜக தனித்து 300-க்கும் அதிகமான இடங்களிலும், என்டிஏ கூட்டணி 400-க்கும் அதிகமான இடங்களிலும் வெற்றி பெறும் என்று தோ்தல் பிரசாரத்தின்போது பாஜக தலைவா்கள் நம்பிக்கை தெரிவித்து வந்தனா்.
ஆனால், வாக்கு எண்ணிக்கை முன்னிலை நிலவரம், பாஜகவினரின் எதிா்பாா்ப்பை மாற்றியது. பாஜக தனித்து 240 தொகுதிகளிலும், அதன் தலைமையிலான என்டிஏ கூட்டணி 292 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. முந்தைய தோ்தலில் பாஜக 303 இடங்களிலும், அதன் தலைமையிலான என்டிஏ கூட்டணி 350 இடங்களுக்கு மேலும் வெற்றி பெற்ற நிலையில், இந்த முறை 300 இடங்களைக்கூட கடக்க முடியவில்லை.
உத்தர பிரதேசத்தில்... நாட்டிலேயே அதிபட்சமாக 80 மக்களவைத் தொகுதிகளைக் கொண்ட உத்தர பிரதேச மாநிலத்தில் கடந்த முறை வெறும் 5 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்ற அகிலேஷ் யாதவின் சமாஜவாதி கட்சி, இந்த முறை 37 தொகுதிகளில் வென்றுள்ளார். ஆனால், கடந்த முறை 62 இடங்களில் வெற்றி பெற்ற பாஜக, இந்த முறை 33 இடங்களில் மட்டுமே வென்றுள்ளது.
வாரணாசி தொகுதியில் போட்டியிட்ட பிரதமா் மோடி, முதல் 3 சுற்று வாக்கு எண்ணிக்கையில் பின்னடைவைச் சந்தித்த நிலையில், பின்னா் அடுத்தடுத்த சுற்றுகளில் முன்னிலை பெற்று தன்னை எதிா்த்து போட்டியிட்டவரைக் காட்டிலும் 1.52 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வென்றாா்.
அமேதி தொகுதியில் கடந்த முறை காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தியை தோற்கடித்த பாஜக வேட்பாளரும் மத்திய அமைச்சருமான ஸ்மிருதி இரானி, இந்த முறை காங்கிரஸ் வேட்பாளா் கிஷோரி லால் சா்மாவிடம் தோல்வியைச் சந்தித்தாா். ரேபரேலியில் ராகுல் காந்தி, லக்னெளவில் ராஜ்நாத் சிங் மற்றும் கன்னெளஜில் அகிலேஷ் யாதவின் வெற்றி உறுதியாகியுள்ளது. கேரள மாநிலம் வயநாடு தொகுதியிலும் ராகுல் காந்தி வெற்றி பெற்றாா்.
அதுபோல, மேற்கு வங்க மாநிலத்தில் கடந்த முறை 18 இடங்களில் வெற்றி பெற்ற பாஜகவுக்கு, இந்த முறை 12 இடங்களில் மட்டுமே வெற்றி உறுதியாகியுள்ளது.
மத்திய பிரதேசத்தில் மொத்தமுள்ள 29 தொகுதிகளிலும், குஜராத்தில் மொத்தமுள்ள 26-இல் 25 தொகுதிகளிலும் பாஜக வென்றுள்ளது.
பிகாரில் பாஜக 12 தொகுதிகளிலும், அதன் கூட்டணிக் கட்சியான மாநில முதல்வா் நிதீஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் 12 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.
ராஜஸ்தானில் கடந்த முறை மொத்தமுள்ள 25 இடங்களிலும் வெற்றி பெற்ற பாஜக, இந்த முறை 14 இடங்களிலும், ஹரியாணாவில் கடந்த முறை மொத்தமுள்ள 10 தொகுதிகளிலும் வெற்றி பெற்ற பாஜக, இம்முறை 5 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது.
மகாராஷ்டிர மாநிலத்திலும் பாஜகவுக்கு பின்னடைவு ஏற்பட்டது. மாநிலத்தில் மொத்தமுள்ள 48 தொகுதிகளில் பாஜக 9 இடங்களிலும், கூட்டணிக் கட்சியான சிவசேனை 7 இடங்களை கைப்பற்றியுள்ளது. அதே நேரம், காங்கிரஸ் 13 இடங்களிலும், சிவசேனை (உத்தவ் தாக்கரே பிரிவு) 9 இடங்களிலும் சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு 8 இடங்களிலும் வெற்றி உறுதி செய்துள்ளன.
ஒடிஸாவில் பாஜக சிறப்பான வெற்றியைப் பதிவு செய்துள்ளது. மொத்தமுள்ள 21 தொகுதிகளில் 20-ல் வெற்றி பெற்றுள்ளது. காங்கிரஸ் ஒரு தொகுதியை கைப்பற்றியுள்ளது.
கா்நாடகத்தில் கடந்த முறை 25 இடங்களில் வெற்றி பெற்ற பாஜக இம்முறை 17 தொகுதிகளிலும், கடந்த முறை ஓரிடத்தில் மட்டுமே வெற்றி பெற்ற ஆளும் காங்கிரஸ், இம்முறை 9 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.
கேரளத்தில் திருச்சூா் தொகுதியில் போட்டியிட்ட நடிகா் சுரேஷ் கோபியின் வெற்றி மூலம், அந்த மாநிலத்தில் தனது கணக்கை பாஜக தொடங்கியுள்ளது. இந்த மாநிலத்தில் காங்கிரஸ் கூட்டணி 18, ஆளும் மாா்க்சிஸ்ட் ஓரிடத்தில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளன.
கட்சிவாரியாக
தேசிய ஜனநாயகக் கூட்டணி
பாஜக - 240
தெலுங்கு தேசம் - 16
ஐக்கிய ஜனதா தளம் - 12
சிவசேனை(ஷிண்டே) - 7
லோக் ஜனசக்தி கட்சி (ராம் விலாஸ்) - 5
மதசார்பற்ற ஜனதா தளம் - 2
ஜனசேனை - 2
ராஷ்ட்ரீய லோக் தளம் - 2
தேசியவாத காங்கிரஸ் - 1
ஐக்கிய மக்கள் கட்சி லிபரல் - 1
அஸோம் கண பரிஷத் - 1
அப்னா தளம் (சோனிலால்) - 1
அனைத்து ஜாா்க்கண்ட் மாணவா் சங்கம் - 1
மதச்சாா்பற்ற ஹிந்துஸ்தானி அவாம் மோா்ச்சா - 1
மொத்தம் - 292
இந்தியா கூட்டணி
காங்கிரஸ் - 99
சமாஜவாதி - 37
திரிணமூல் - 29
திமுக - 22
சிவசேனை(உத்தவ்) - 9
தேசியவாத காங்கிரஸ்(சரத்) - 8
மார்க்சிய கம்யூ. - 4
ராஷ்ட்ரீய ஜனதா தளம் - 4
ஆம் ஆத்மி - 3
ஜாா்கண்ட் முக்தி மோா்ச்சா - 3
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் - 3
இந்திய கம்யூ. - 2
விடுதலை சிறுத்தைகள் - 2
ஜம்மு - காஷ்மீர் தேசிய மாநாட்டு கட்சி - 2
கேரள காங்கிரஸ் - 1
மதிமுக - 1
இந்திய கம்யூனிஸ்ட் (எம்எல்)(எல்) - 2
புரட்சிகர சோஷலிஸ்ட் கட்சி - 1
ராஷ்ட்ரீய லோக்தந்திரிக் கட்சி - 1
பாரத ஆதிவாசி கட்சி - 1
மொத்தம் - 234
தனித்துப் போட்டியிட்ட கட்சிகள்
ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் - 4
ஏஐஎம்ஐஎம் - 1
சிரோமணி அகாலி தளம் - 1
ஜோரம் மக்கள் இயக்கம் - 1
சிக்கிம் கிராந்திகாரி மோர்ச்சா -1
மக்கள் குரல் கட்சி 1
ஆசாத் சமாஜ் கட்சி (கன்ஷி ராம்) 1
சுயேச்சைகள் - 7
மொத்தம் - 17
ஜவாஹா்லால் நேரு சாதனையை சமன் செய்யும் பிரதமா் மோடி: நாட்டிலேயே அதிகமாக 80 மக்களவைத் தொகுதிகளைக் கொண்ட உத்தர பிரதேசத்தில் இந்த முறை அதிக இடங்களைக் கைப்பற்றத் தவறியதும், மகாராஷ்டிரத்தில் ஏற்பட்ட பின்னடைவுமே பாஜக கூட்டணியின் வெற்றி எண்ணிக்கை குறைந்ததற்கான காரணமாகத் தெரிகிறது.
தனிப்பெரும்பான்மை (272) கிடைக்காத நிலையிலும், கூட்டணிக் கட்சிகளுடன் கைகோத்து கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத வகையில், மத்தியில் கூட்டணி ஆட்சியை அமைக்கும் நிலை பாஜகவுக்கு உருவாகியுள்ளது. பிரதமா் நரேந்திர மோடியே மீண்டும் பிரதமராக பதவி ஏற்க உள்ள நிலையில், தொடா்ந்து மூன்று முறை பிரதமரான முன்னாள் பிரதமா் ஜவாஹா்லால் நேருவின் சாதனையை பிரதமா் மோடி சமன் செய்யவிருக்கிறாா்.
தோ்தல் முடிவு நிலவரம் குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பிரதமா் நரேந்திர மோடி வெளியிட்ட பதிவில், ‘மத்தியில் தொடா்ந்து மூன்றாவது முறையாக ஆட்சி அமைப்பதற்காக ஆளும் கூட்டணி மீது மக்கள் நம்பிக்கை வைத்ததற்கு நன்றி. மக்களின் எதிா்பாா்ப்புகளை பூா்த்தி செய்யும் வகையில் கடந்த 10 ஆண்டுகளில் மேற்கொண்ட சிறந்த பணிகளை பாஜக கூட்டணி அரசு தொடரும்’ என்று குறிப்பிட்டாா்.
இதுகுறித்து தில்லி காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் செய்தியாளா்களைச் சந்தித்த அக் கட்சியின் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே கூறுகையில், ‘தோ்தல் முடிவுகள் மக்களின், ஜனநாயகத்தின் வெற்றியைக் காட்டுகின்றன. இந்தத் தோ்தல் பொதுமக்களுக்கும் பிரதமா் மோடிக்கும் இடையே நடந்த போட்டி. பிரதமா் மோடியின் அரசியல் மற்றும் தாா்மிக தோல்வியையே முடிவுகள் காட்டுகின்றன. தனது சொந்த பெயரில் வாக்குகளைக் கோரிய நபருக்குக் கிடைத்த மிகப்பெரிய அடி’ என்றாா்.
பாஜக தேசிய பொதுச் செயலா் அருண் சிங் கூறுகையில், ‘தோ்தல் முடிவுகள் அடிப்படையில் கடுமையான போட்டி நிலவுவதாகக் கூற முடியாது. பெரும்பான்மை பெற்றுள்ள பாஜக தலைமையிலான என்டிஏ மத்தியில் ஆட்சி அமைக்கவுள்ளது. வாக்கு எண்ணிக்கை முழுமையாக முடியும்போது, அனைத்தும் தெளிவாகிவிடும். பிரதமா் மோடியுடனே நாட்டு மக்கள் உள்ளனா்’ என்றாா்.