வாக்குக் கணிப்பு பொய்த்துப்போவது முதல்முறையல்ல! ஏன்?

வாக்குக் கணிப்பு பொய்த்துப்போவதற்குக் காரணம்? ஓர் அலசல்
வாக்கு கணிப்பு
வாக்கு கணிப்பு
Published on
Updated on
2 min read

ஊடகங்களில் வெளியான தேர்தலுக்குப் பிந்தைய வாக்குக் கணிப்புகளுக்கும் தேர்தல் முடிவுகளுக்கும் இடையேயான வேறுபாடு எழுப்பிய கேள்விகள் ஏராளம்.

ஆக்ஸிஸ் - இந்தியா டுடே நடத்திய தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பில் பாஜக கூட்டணி 361 - 401 இடங்களைப் பிடிக்கும் என்று கணித்திருந்தது. ஆனால், 240 இடங்களைத்தான் பாஜக பெற்றிருந்தது.

ஆனால், இந்த ஒரு ஊடகத்தின் கருத்துக் கணிப்புதான் பொய்யானதா என்றால் இல்லை. ஒட்டுமொத்த வாக்கு கணிப்புகளுமே பொய்த்துப்போனதுதான் ஆச்சரியம்.

மக்களவைத் தோ்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு 350 இடங்களுக்கு மேல் கிடைக்கும் என்று தோ்தலுக்கு பிந்தைய வாக்கு கணிப்பு முடிவுகள் கூறியிருந்த நிலையில், அது பொய்த்துப் போயிருக்கிறது.

இப்படி, வாக்கு கணிப்பும் உண்மை நிலவரமும் இந்த அளவுக்கு வேறுபட்டிருப்பதற்குக் காரணம் என்ன? இந்த அளவுக்கு வேறுபாடு ஏற்படின் இந்த வாக்குக் கணிப்புகளுக்கு என்னதான் அவசியம்? என்பது போன்ற கேள்விகளும் சாதாரண மக்களிடையே எழுகிறது.

வாக்கு கணிப்பு
பயமுறுத்திய வாரணாசி: மோடியின் வாக்கு வித்தியாசம் சரிந்ததன் பின்னணி!

நாட்டில் மொத்தமுள்ள 543 தொகுதிகளுக்கு ஏழு கட்டங்களாக தோ்தல் நடத்தப்பட்டது. கடந்த சனிக்கிழமை நடைபெற்ற ஏழாவது மற்றும் இறுதிக்கட்ட வாக்குப் பதிவுக்கு பிறகு, தோ்தலுக்கு பிந்தைய வாக்கு கணிப்பு முடிவுகள் பல்வேறு ஊடக நிறுவனங்கள் மற்றும் முகமைகளால் வெளியிடப்பட்டன.

இக்கணிப்புகளில், ‘பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 350-க்கும் மேற்பட்ட இடங்களைக் கைப்பற்றி, மத்தியில் மீண்டும் ஆட்சியமைக்கும்’ என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால், தேர்தலில், இரண்டு கட்சிகளுக்கு இடையே மிகக் கடுமையான போட்டி இருக்கும்போது அதனை சரியாக கணிக்க முடியாது என்கிறார்கள் தேர்தல் பார்வையாளர்கள்.

இதுஒன்றும் புதிதல்ல என்றும், கடந்த 2004ஆம் ஆண்டு வாக்கு கணிப்புகள் பிரதமர் வாஜ்பாய் தலைமையில் தேசிய ஜனநாயகக் கூட்டணி பெரிய அளவில் வெற்றி பெறும் என்று கணித்திருந்ததாகவும் ஆனால், காங்கிரஸ் கூட்டணியை விட ஒரு சில தொகுதிகளில்தான் கூடுதலாக வெற்றி பெற்றிருந்தன என்கிறது புள்ளிவிவரங்கள்.

அவ்வளவு ஏன், மாநில தேர்தல்களின்போது, பிகார், உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் வாக்கு கணிப்புகளே மிகப்பெரிய தோல்வியை சந்தித்த வரலாறுகளும் உள்ளனவாம்.

என்ன தான் சொல்லப்பட்டது வாக்குக்கணிப்பில்?

பாஜக கூட்டணிக்கு 353 முதல் 383 வரையிலான இடங்களும் இந்தியா கூட்டணிக்கு 152 முதல் 182 வரையிலான இடங்களும் கிடைக்கும் என்று ஏபிபி-சி வோட்டா் வாக்கு கணிப்பில் கூறப்பட்டது.

இதேபோல், ரிபப்ளிக் டிவி-பி மாா்க், ஜன் கி பாத், இந்தியா டிவி-சிஎன்எக்ஸ், நியூஷ் நேஷன், டுடேஸ் சாணக்யா, டைம்ஸ் நவ்-இடிஜி ரிசா்ச், நியூஸ் 18 ஆகிய நிறுவனங்கள்-முகமைகளின் வாக்கு கணிப்புகளில் பாஜக கூட்டணி 350 முதல் 400 வரையிலான தொகுதிகளில் வெற்றி பெறும் என்று தெரிவிக்கப்பட்டது. தனிப்பெரும்பான்மைக்கு தேவையான (272) இடங்களைவிட அதிக தொகுதிகளில் பாஜக வெல்லும் என்ற கூறப்பட்ட நிலையில், அக்கணிப்புகள் பொய்த்துவிட்டன.

சரி ஏன் இப்படியாகிறது?

பாஜகவுக்கு வாக்களிக்காதவர்கள், யாருக்கு வாக்களித்தோம் என்று அளித்த தகவலில் முரண்பாடு இருக்கலாம் அல்லது வாக்கு கணிப்பானது வாக்களர்களிடமில்லாமல், பொதுமக்களிடம் எடுக்கப்பட்டிருக்கலாம். இந்தக் கட்சிக்கு வாக்களித்தோம் என்று சொன்ன பலரும் வாக்களிக்காதவர்களாகவும் இருக்கலாம், பொதுவாக வாக்கு கணிப்பானது வாக்குப்பதிவுக்குப் பிறகு வாக்களித்தவர்களிடம் எந்தக் கட்சிக்கு வாக்களித்தீர்கள் என்று கேட்டு கணிப்பை செய்வது. இதில் ஓரிடத்தில் தவறு நேர்ந்தாலும் ஒட்டுமொத்த கணிப்பும் தவறாகிறது.

இன்னும் சில நேரங்களில், சிலர் உண்மையான தகவலை அளிக்காமல், தவறான தகவல்களையும் அளிக்கலாம். இதனாலென்ன இருக்கிறது? என்ற கேள்வியுடன் ஏதோ ஒரு கட்சிக்கு தங்களது வாக்குகளை அளித்ததாகவும் தெரிவிக்க வழி இருப்பதாகவும் சிலர் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

அரசியல் பார்வையாளர்கள் சிலர் சொல்வது என்னவென்றால், வாக்கு கணிப்பு எவ்வாறு வந்தாலும், ஒரு ஆளும் கட்சியின் வெற்றி விகிதத்தைக் குறைத்துக் காட்ட எந்த ஊடகமும் தயாராக இல்லை. அதனால்தான் அவர்கள் மீதான நம்பிக்கையை இழக்கிறார்கள் என்கிறார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com