
பைசாபாத்தில் இருந்து புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள சமாஜ்வாதி கட்சி எம்.பி அவதேஷ் பிரசாத், பாஜக ராமரின் உண்மையான சீடர் அல்ல என்றும், அவரது பெயரில் அரசியல் செய்து மக்களை ஏமாற்றுவதாகவும் குற்றம் சாட்டியுள்ளர்.
உச்ச நீதிமன்ற உத்தரவின் பேரில் அயோத்தியில் பிரமாண்ட ராமர் கோயில் கட்டப்பட்டு, ஜனவரி 22-ல் அதன் கும்பாபிஷேக விழாவுக்கு பிரதமர் நரேந்திர மோடி தலைமை தாங்கிய உத்தரப் பிரதேசத்தின் பைசாபாத் மக்களவைத் தொகுதியில் அவதேஷ் பிரசாத் 54,567 வாக்குகள் வித்தியாசத்தில் பாஜகவைச் சேர்ந்த லல்லு சிங்கை தோற்கடித்தார்.
இதுகுறித்து அவதேஷ் பிரசாத் கூறுகையில்,“அயோத்தியின் பெயரில் பாஜக அரசியல் செய்தது. அவர்கள் ராமரின் கண்ணியத்திற்கு எதிராக செயல்பட்டனர்.
மக்களவைத் தேர்தல் பிரசாரத்தின் போதும்கூட, பாஜக தலைவர்கள் ராமர் கோயில் கட்டிய பெருமையை மோடிக்கு வழங்கினார்கள். இந்த விவகாரமும் கட்சியின் முக்கிய தேர்தல் திட்டங்களில் ஒன்றாக இருந்தது.
ராமரைக் கொண்டு வந்தவர்களை நாங்கள் கொண்டு வருவோம் என்ற பாஜகவினர் கூறினார்கள். ஆனால், அவர்கள் (பாஜக) ராமரைக் கொண்டு வரவில்லை. இது அவர்களின் தவறான முழக்கம். இதனை பொதுமக்கள் நன்கு புரிந்து கொண்டுள்ளனர். ராமரை யாரும் அழைத்து வரவில்லை. ராமர் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன் வந்தவர். அனைவரின் இதயத்திலும் ராமர் இருக்கிறார். அவர் அனைவரின் நம்பிக்கையின் மையமாக இருக்கிறார். அவர்கள் (பாஜக) ராமர் பெயரில் அரசியல் செய்து நாட்டை ஏமாற்றிவிட்டனர். நாட்டை சீரழித்துவிட்டார்கள்.
நாட்டில் ராமராஜ்ஜியம் கொண்டு வரப்படும் என்று பாஜகவினர் வாக்குறுதி கொடுத்தனர். ஆனால், பாஜக ஆட்சிக் காலத்தில் பணவீக்கம், வேலையில்லாத் திண்டாட்டம் என அனைத்து வகையான பிரச்னைகளையும் மக்கள் எதிர்கொண்டனர்.
நான்கு ஆண்டு கால ராணுவ ஆள்சேர்ப்பு திட்டமான அக்னிபத் திட்டத்தின் மூலம் நமது நாட்டின் ராணுவம் அவமதிக்கப்பட்டுள்ளது. மத்தியில் ‘இந்தியா’ கூட்டணி அமைக்கப்பட்டால், அக்னிவீர் யோஜனா ஒழிக்கப்படும்” என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.