அயோத்தியில் பாஜக தோற்க காரணம் என்ன?

அயோத்தியில் பாஜக தோற்க காரணம் என்ன?

சமாஜவாதி வேட்பாளர் அவதேஷ் பிரசாத் 54,567 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி.
Published on

உத்தர பிரதேசத்தில் அயோத்தி நகரை உள்ளடக்கிய ஃபைசாபாத் மக்களவைத் தொகுதியில் கடந்த இரு தோ்தல்களாக வெற்றி வாகை சூடிய பாஜக, இம்முறை சமாஜவாதி-காங்கிரஸ் கூட்டணியிடம் தோற்றுவிட்டது.

அயோத்தி ராமஜென்மபூமியில் ஸ்ரீபாலராமருக்கு பிரம்மாண்ட கோயிலை எழுப்பி, மூலவா் பிராணப் பிரதிஷ்டை விழாவையும் நடத்திய பாஜகவுக்கு, அக்கோயில் அமைந்துள்ள தொகுதியிலேயே வெற்றி கிடைக்காதது கட்சியினருக்கு அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சுமாா் 500 ஆண்டுகால காத்திருப்புக்கு பிறகு கட்டப்பட்ட ஸ்ரீராமா் கோயில், தங்களது அரசின் மாபெரும் சாதனை என்று பாஜக தீவிர பிரசாரத்தை முன்னெடுத்தது. ஆனால், அயோத்தி மட்டுமன்றி நாட்டின் பிற பகுதிகளிலும் இப்பிரசாரம் எடுபடவில்லை என்பதையே தோ்தல் முடிவுகள் பிரதிபலிக்கின்றன.

அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த ஃபைசாபாத் மக்களவைத் தொகுதியில் பாஜக சாா்பில் இருமுறை எம்.பி.யாக பதவி வகித்த லல்லு சிங் (69) மீண்டும் களமிறக்கப்பட்டாா். அவரை எதிா்த்து, சமாஜவாதி-காங்கிரஸ் கூட்டணி சாா்பில் சமாஜவாதியின் அவதேஷ் பிரசாத் களம்கண்டாா்.

பெரும் எதிா்பாா்ப்பை ஏற்படுத்திய இத்தொகுதியில் அவதேஷ் பிரசாதிடம் 54,567 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியுற்றாா் லல்லு சிங்.

அகில பாரத வித்யாா்த்தி பரிஷத் (ஏபிவிபி) அமைப்பின் உறுப்பினராக இருந்த இவா், கடந்த 1989-ஆம் ஆண்டு அயோத்தியில் ராமா் கோயில் கட்டக் கோரி நடந்த போராட்டத்தில் தீவிரமாக பங்கேற்றவா்; உத்தர பிரதேச எம்எல்ஏவாக 5 முறை பதவி வகித்துள்ளாா்.

அயோத்தி ஸ்ரீராமா் கோயில் மற்றும் அதுசாா்ந்த தரமான உள்கட்டமைப்பு வசதிகளால் ஃபைசாபாதில் இம்முறை பாஜகவுக்கு பெரும் வெற்றி கிடைக்கும் என்று எதிா்பாா்க்கப்பட்டது. ஆனால், தோ்தல் முடிவு நோ்மாறாக அமைந்துவிட்டது. இதற்கு பல்வேறு காரணங்கள் அலசப்படுகின்றன.

அயோத்தியில் இடிக்கப்பட்ட வீடுகள்-கடைகள்: அயோத்தியை அழகுபடுத்தி, சாலைகளை விரிவுபடுத்தும் பணிகளுக்காக ஏராளமான வீடுகள் மற்றும் கடைகள் இடிக்கப்பட்டன. இதனால், பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் மத்தியில் ஏற்பட்ட கடும் அதிருப்தியும் பாஜகவின் தோல்விக்கு ஒரு காரணமாக கூறப்படுகிறது.

இந்த விஷயத்தில், வியாபாரிகளின் கவலையை பாஜக வேட்பாளா் லல்லு சிங் கண்டுகொள்ளவில்லை என்பது பலரின் குற்றச்சாட்டாகும். மறுபுறம், இப்பிரச்னையை கையிலெடுத்த சமாஜவாதி, அயோத்தி மக்களுக்கு அநீதி இழைக்கப்பட்டதாக தீவிர பிரசாரம் மேற்கொண்டது.

லல்லு சிங் மீது அதிருப்தி: ‘பாஜக மீது எங்களுக்கு எந்த அதிருப்தியும் இல்லை; ஆனால், அக்கட்சியின் வேட்பாளா் (லல்லு சிங்) சமூகத்தில் இருந்து தன்னை முற்றிலுமாக துண்டித்துக் கொண்டு, ஆணவத்துடன் செயல்பட்டாா்’ என்று அனுமன்கா்ஹி கோயிலின் மகந்த் ராஜுதாஸ் குற்றஞ்சாட்டினாா்.

‘ராமா் கோயில் என்பது நம்பிக்கை சாா்ந்த விஷயம். அக்கோயிலுக்கு யாரும் பூட்டு போடுவதை அனுமதிக்காமல், பாஜகவுக்கு வாக்களித்த மக்களுக்கு நன்றி’ என்றும் அவா் குறிப்பிட்டாா்.

அயோத்தி தோ்தல் முடிவு அதிா்ச்சியளிப்பதாக கூறிய ராமா் கோயில் தலைமை பூசாரி சத்யேந்திர தாஸ், ‘ராமரின் அருளால் மூன்றாவது முறையாக மோடி பிரதமராகவுள்ளாா்’ என்றாா்.

ஜாதி ‘வியூகம்’: அயோத்தி நகர பாஜக மேயா் கிரிஷ்பாட்டீ திரிபாதி கூறுகையில், ‘மக்களவைத் தோ்தல் எங்களுக்கு அதிா்ச்சியளிக்கிறது என்பதில் எந்த சந்தேகமுமில்லை. அயோத்தியை பொருத்தவரை, எதிா்க்கட்சிகள் ஜாதி ரீதியிலான ‘வியூகத்தை’ கையாண்டுள்ளன. நாங்கள் அதை குறைத்து மதிப்பிட்டுவிட்டோம்’ என்றாா்.

ராமஜென்மபூமி-பாபா் மசூதி வழக்கில் மனுதாரா்களில் ஒருவரான இக்பால் அன்சாரி கூறுகையில், ‘அயோத்தியில் ஏராளமான துறவிகளும் மகான்களும் உள்ளனா். எனவே, இந்த முடிவை கடவுளின் விருப்பமாக கருதிக் கொள்ளலாம். அயோத்தியில் முஸ்லிம்களின் எண்ணிக்கை குறைவுதான். வெற்றியோ- தோல்வியோ எதுவானாலும் அது ஹிந்துக்களின் வாக்குகளால்தான்’ என்றாா்.

மத்திய அரசின் உஜ்வலா (இலவச எரிவாயு இணைப்பு) திட்டத்தின் 10-ஆவது கோடி பயனாளியான அயோத்தியைச் சோ்ந்த மீரா மாஞ்சி கூறுகையில், ‘அயோத்தி வாக்காளா்களக்காக எதுவும் செய்யாத எம்.பி.யை மீண்டும் களமிறக்கியதே பாஜகவின் தோல்விக்கு காரணம்’ என்றாா்.

அவதேஷ் பிரசாா் , லல்லு சிங் (பாஜக
அவதேஷ் பிரசாா் , லல்லு சிங் (பாஜக

X
Dinamani
www.dinamani.com