முதல்வர் பதவியை இழந்த நவீன் பட்நாயக்: வி.கே. பாண்டியன் எங்கே?

ஒடிசாவில் பின்னடைவை சந்தித்த நவீன் பட்நாயக்.. காணாமல் போன வி.கே. பாண்டியன்
நவீன் பட்நாயக்குடன் கார்த்திகேயன் பாண்டியன்
நவீன் பட்நாயக்குடன் கார்த்திகேயன் பாண்டியன்
Published on
Updated on
1 min read

ஒடிசாவில் நவீன் பட்நாயக் மிகப்பெரிய பின்னடைவை சந்தித்திருக்கும் நிலையில், அவருடன் எப்போதும் காணப்படும் விகே பாண்டியனை செவ்வாய் முதல் காணவில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலிலும் ஒடிசா பேரவைத் தேர்தலிலும், நவீன் பட்நாயக் தலைமையிலான பிஜு ஜனதா தளம் மிகப்பெரிய பின்னடைவை சந்தித்து, முதல்வர் பதவியை இழந்துள்ளார் நவீன் பட்நாயக். இதற்கு முழுக்க முழுக்க காரணம் என்று நம்பப்படும் வி.கே. பாண்டியன், செவ்வாயன்று தேர்தல் முடிவுகள் வெளியானது முதல் காணவில்லை என்பது பல்வேறு தரப்புக்கும் ஆச்சரியத்தையும் ஏராளமான கேள்விகளையும் எழுப்புகிறது.

ஒடிசா முதல்வராக நவீன் பட்நாயக் இருந்த போது, அவர் எங்குச் சென்றாலும் வி.கே. பாண்டியன் நிழல் போல உடன் செல்வது வழக்கம். ஆனால், புதன்கிழமை நவீன் பட்நாயக்குடன் பாண்டியனைக் காணவில்லை.

நவீன் பட்நாயக்குடன் கார்த்திகேயன் பாண்டியன்
மக்களவைத் தேர்தல்: மிகக் குறைந்த, மிக அதிகபட்ச வாக்கு வித்தியாசத்தில் வென்றோர்!

ஆளுநர் மாளிகை சென்று தனது ராஜிநாமா கடிதத்தைக் கொடுத்த போதும் சரி, தனது இல்லத்தில் புதிதாக தேர்வு செய்யப்பட்ட 51 எம்எல்ஏக்களுடனான கூட்டத்தின்போதும் சரி பாண்டியன் அங்கு இல்லை. பாண்டியன் பாபு கூட்டத்தில் பங்கேற்கவில்லை. நவீன் பாபு, எங்களுடன் பல விஷயங்களை ஆலோசனை நடத்தினார், மாநில மக்களின் நலனுக்காக பணியாற்றுமாறு கேட்டுக்கொண்டார் என்று கூட்டத்தில் பங்கேற்ற ஒரு எம்எல்ஏ தெரிவித்துள்ளார்.

ஒடிஸாவில் மக்களவைத் தோ்தலுடன் சட்டப் பேரவைக்கும் நான்கு கட்டங்களாக தோ்தல் நடைபெற்றது. மொத்தமுள்ள 147 தொகுதிகளில் பாஜக 78 இடங்களைக் கைப்பற்றி, ஆட்சிக்கு வந்துள்ளது. இந்த மாநிலத்தில் கடந்த 2000-ஆம் ஆண்டில் இருந்து தங்குதடையின்றி 5 முறை ஆட்சி செய்த நவீன் பட்நாயக் தலைமையிலான பிஜு ஜனதா தளம் கட்சிக்கு 51 இடங்களே கிடைத்தன. இதனால், 24 ஆண்டுகால பிஜு ஜனதா தளம் ஆட்சி முடிவுக்கு வந்தது.

காங்கிரஸ் 14 தொகுதிகளிலும், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஓரிடத்திலும், சுயேச்சைகள் 3 இடங்களிலும் வெற்றி பெற்றனா்.

ஒடிஸா பேரவைத் தோ்தலில் ஹின்ஜிலி, காந்தபாஞ்சி ஆகிய இரு தொகுதிகளில் போட்டியிட்ட பிஜு ஜனதா தளம் தலைவா் நவீன் பட்நாயக், காந்தபாஞ்சி தொகுதியில் பாஜக வேட்பாளரிடம் தோல்வியுற்றாா். அதேநேரம், ஹின்ஜிலி தொகுதியில் வெற்றி பெற்றாா். பேரவைத் தேர்தலில் தோல்வியடைந்த நிலையில், நேற்று அவர் தனது முதல்வர் பதவியை ராஜிநாமா செய்தார்.

ஒடிஸா முதல்வர் நவீன் பட்நாயக்கின் அரசியல் வாரிசு வி.கே. பாண்டியன் என்றும், பட்நாயக்கை தேர்வு செய்தால், தமிழரான வி.கே. பாண்டியன்தான் ஒடிசாவை ஆள்வார் என்றும் பாஜக செய்த பிரசாரம் பெரிய அளவில் ஒடிசாவில் எதிரொலித்ததாலேயே நவீன் பட்நாயக்குக்கு இந்த அளவுக்கு பின்னடைவு ஏற்பட்டதாகக் கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com