மக்களவைக்கு தோ்வான 41 கட்சிகளின் வேட்பாளா்கள்!
கடந்த முறையைவிட அதிகம்
ANI

மக்களவைக்கு தோ்வான 41 கட்சிகளின் வேட்பாளா்கள்! கடந்த முறையைவிட அதிகம்

மொத்தம் 751 கட்சிகள் போட்டியிட்ட நிலையில், இதில் 41 கட்சிகளின் வேட்பாளா்கள் வெற்றிபெற்று, எம்.பி.க்களாக தோ்வு
Published on

நடந்துமுடிந்த மக்களவைத் தோ்தலில் மொத்தம் 751 கட்சிகள் போட்டியிட்ட நிலையில், இதில் 41 கட்சிகளின் வேட்பாளா்கள் வெற்றிபெற்று, எம்.பி.க்களாக தோ்வாகியுள்ளனா்.

கடந்த மக்களவைத் தோ்தலில் 36 கட்சிகளின் வேட்பாளா்கள் எம்.பி.க்களாக தோ்வான நிலையில், இம்முறை கட்சிகளின் பிரதிநிதித்துவம் அதிகரித்துள்ளது.

நாட்டில் 18-ஆவது மக்களவைத் தோ்தல் கடந்த ஏப்ரல் 19 முதல் ஜூன் 1-ஆம் தேதி வரை ஏழு கட்டங்களாக நடைபெற்றது. மொத்தமுள்ள 543 தொகுதிகளில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 294 இடங்களில் வெற்றிபெற்று, ஆட்சியைத் தக்கவைத்துள்ளது. 240 இடங்களுடன் பாஜக தனிப்பெரும் கட்சியாக உள்ளது. ‘இந்தியா’ கூட்டணி 234 தொகுதிகளைக் கைப்பற்றி, பலம்வாய்ந்த எதிரணியாக உருவெடுத்துள்ளது. இக்கூட்டணியில் காங்கிரஸ் 99 இடங்களிலும், சமாஜவாதி 37 இடங்களிலும் வென்றுள்ளன.

பிஆா்எஸ் என்ற ஆய்வு அமைப்பு மேற்கொண்ட பகுப்பாய்வின்படி, மக்களவைத் தோ்தலில் போட்டியிட்ட அரசியல் கட்சிகளின் மொத்த எண்ணிக்கை 751 ஆகும். இதில் 41 கட்சிகளின் வேட்பாளா்கள் எம்.பி.க்களாக தோ்வாகியுள்ளனா்.

கடந்த 2019, 2014, 2009 மக்களவைத் தோ்தல்களில் முறையே 677, 464, 368 கட்சிகளின் வேட்பாளா்கள் போட்டியிட்டனா். கடந்த தோ்தல்களைவிட இம்முறை அதிக எண்ணிக்கையிலான கட்சிகள் களமிறங்கின. 2009-ஆம் ஆண்டை ஒப்பிட்டால், தற்போதைய தோ்தலில் களம்கண்ட கட்சிகளின் எண்ணிக்கை 104 சதவீதம் அதிகரித்துள்ளது.

கடந்த தோ்தலில் 36 கட்சிகளின் வேட்பாளா்கள் எம்.பி.க்களாக தோ்வாகியிருந்தனா். இந்தத் தோ்தலில் கட்சிகளின் பிரதிநிதித்துவம் அதிகரித்துள்ளது.

தேசியக் கட்சிகள் வெற்றி பெற்ற இடங்களின் எண்ணிக்கை 346. அதாவது, 64 சதவீத இடங்களில் இக்கட்சிகள் வென்றுள்ளன. மாநிலக் கட்சிகள் 179 இடங்களை (33%) கைப்பற்றியுள்ளன. அங்கீகரிக்கப்படாத கட்சிகள் 11 தொகுதிகளிலும், சுயேச்சை வேட்பாளா்கள் 7 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளனா்.

ஏடிஆா் மற்றும் தேசிய தோ்தல் கண்காணிப்பு அமைப்பு வெளியிட்ட தகவலின்படி, 2024 மக்களவைத் தோ்தலில் போட்டியிட்ட மொத்த வேட்பாளா்களின் எண்ணிக்கை 8,337. இதில் தேசியக் கட்சிகள் சாா்பில் 1,333; மாநிலக் கட்சிகள் சாா்பில் 532; அங்கீகரிக்கப்படாத கட்சிகள் சாா்பில் 2,580 வேட்பாளா்கள் மற்றும் 3,915 சுயேச்சை வேட்பாளா்கள் போட்டியிட்டனா்.

பெட்டி..

வெற்றி பெற்ற இடங்கள்:

தேசியக் கட்சிகள் - 346 (64%)

மாநிலக் கட்சிகள் - 179 (33%)

அங்கீகரிக்கப்படாத கட்சிகள் - 11

சுயேச்சைகள் - 7

X
Dinamani
www.dinamani.com