ஆந்திர மாநிலத்தின் புதிய முதல்வராக தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு வரும் 12ம் தேதி பதவியேற்க உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆந்திர பிரதேசத்தில் மொத்தமுள்ள 175 தொகுதிகளில் தெலுங்கு தேசம் 135 இடங்களில் வெற்றி பெற்று பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கவுள்ளது. கூட்டணிக் கட்சிகளான ஜனசேனை 21, பாஜக 11 தொகுதிகளில் வென்றுள்ளது. ஆந்திரத்தை ஆட்சி செய்து வந்த ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் 11 இடங்களில் மட்டுமே வென்று படுதோல்வியை சந்தித்தது.
மேலும், மக்களவைத் தொகுதிகளிலும் 16 இடங்களை கைப்பற்றியுள்ள சந்திரபாபு நாயுடு, தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு அமைய முக்கிய கூட்டணிக் கட்சியாக உருவெடுத்துள்ளார். இந்த நிலையில் ஆந்திர மாநில முதல்வராக தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு ஜூன் 12ஆம் தேதி பதவியேற்க உள்ளதாக கட்சியின் தலைவர் கே ரகு ராம கிருஷ்ண ராஜு தெரிவித்துள்ளார்.
சந்திரபாபு நாயுடுவும், பவன் கல்யாணும் பிரதமர் மோடி மீது மிகுந்த மரியாதை வைத்துள்ளனர். ஆந்திர மாநிலத்துக்கு மத்திய அரசின் ஆதரவு அதிகம் தேவை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும் ஜூன் 12ஆம் தேதி மாலை 4.55 மணிக்கு நடைபெறும் சந்திரபாபு நாயுடு பதவியேற்பு விழாவில் பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்கலாம் எனக் கூறப்படுகிறது.