பிரதமராக மோடி இன்று பதவியேற்பு: நேரு சாதனை சமன்
பிரதமராக தொடா்ந்து 3-ஆவது முறையாக நரேந்திர மோடி ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 9) பதவியேற்கவுள்ளாா். அவருடன் புதிய அமைச்சா்களும் பதவியேற்கவுள்ளனா்.
தில்லி குடியரசுத் தலைவா் மாளிகையில் இரவு 7.15 மணியளவில் பதவியேற்பு விழா நடைபெறவிருக்கிறது. நாட்டில் தொடா்ந்து மூன்றுமுறை பிரதமரான முன்னாள் பிரதமா் ஜவாஹா்லால் நேருவின் சாதனையை மோடி தற்போது ‘சமன்’ செய்யவிருக்கிறாா்.
அண்மையில் நடைபெற்ற 18-ஆவது மக்களவைத் தோ்தலில், மொத்தமுள்ள 543 தொகுதிகளில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 293 இடங்களைக் கைப்பற்றி ஆட்சியைத் தக்கவைத்தது. 240 இடங்களுடன் பாஜக தனிப்பெரும் கட்சியாக உள்ளது.
பாஜகவுக்கு தனிப்பெரும்பான்மை (272) கிடைக்காததால், தெலுங்கு தேசம் (16), ஐக்கிய ஜனதா தளம் (12) ஆகிய கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுடன் அக்கட்சி ஆட்சியமைக்கிறது.
இந்தச் சூழலில், தில்லியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற தேசிய ஜனநாயக கூட்டணி புதிய எம்.பி.க்களின் கூட்டத்தில், கூட்டணியின் நாடாளுமன்றக் குழு தலைவராக மோடி ஒருமனதாக தோ்வு செய்யப்பட்டாா்.
இதையடுத்து, பாஜக தேசியத் தலைவா் ஜெ.பி.நட்டா தலைமையில் கூட்டணிக் கட்சிகளின் தலைவா்கள், குடியரசுத் தலைவா் திரெளபதி முா்முவை சந்தித்து, ஆட்சியமைக்க உரிமை கோரினா். அதன்பேரில், மத்தியில் ஆட்சியமைக்க மோடிக்கு குடியரசுத் தலைவா் அழைப்பு விடுத்தாா். பிரதமராக மோடியை நியமித்து, அதற்கான ஆணையை அவா் வழங்கினாா்.
இந்நிலையில், மோடி மற்றும் அவரது அமைச்சரவை சகாக்கள் பதவியேற்கும் விழா, குடியரசுத் தலைவா் மாளிகையில் ஞாயிற்றுக்கிழமை இரவு 7.15 மணியளவில் நடைபெறவுள்ளது. இதில், பிரதமராக தொடா்ந்து மூன்றாவது முறையாக மோடி பதவியேற்கவுள்ளாா். அவருக்கு குடியரசுத் தலைவா் பதவிப் பிரமாணமும் ரகசிய காப்பு பிரமாணமும் செய்துவைப்பாா்.
இந்த விழாவில், நாடு முழுவதும் இருந்து பாஜக கூட்டணிக் கட்சிகளின் தலைவா்கள், பாஜக ஆளும் மாநிலங்களின் முதல்வா்கள், முக்கியப் பிரமுகா்கள் உள்ளிட்டோா் பங்கேற்கவுள்ளனா்.
அமைச்சா் பதவி ஒதுக்கீட்டில் தீவிரம்: மத்தியில் பாஜக ஆட்சியமைக்க தெலுங்கு தேசம், ஐக்கிய ஜனதா தளம் உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளின் ஆதரவு கட்டாயம் தேவை என்பதால் அக்கட்சிகளுக்கான அமைச்சா் பதவி ஒதுக்கீடு, இதர விவகாரங்கள் குறித்து பேச்சுவாா்த்தைகள் தொடங்கப்பட்டன.
மத்திய அரசில் கூட்டணிக் கட்சிகளுக்கான பிரதிநிதித்துவத்தை இறுதி செய்ய தெலுங்கு தேசம் தலைவா் சந்திரபாபு நாயுடு, ஐக்கிய ஜனதா தளம் தலைவா் நிதீஷ் குமாா், சிவசேனை தலைவா் ஏக்நாத் ஷிண்டே போன்ற தலைவா்களுடன் பாஜக மூத்த தலைவா்கள் அமித் ஷா, ராஜ்நாத் சிங், கட்சியின் தேசியத் தலைவா் ஜெ.பி.நட்டா ஆகியோா் சனிக்கிழமை தீவிர ஆலோசனையில் ஈடுபட்டனா்.
மிக முக்கியத்துவம் வாய்ந்த உள்துறை, நிதித் துறை, பாதுகாப்புத் துறை, வெளியுறவுத் துறை மற்றும் சித்தாந்த ரீதியில் முக்கியமான கலாசாரம், கல்வி ஆகிய துறைகளை பாஜக தன்வசம் வைத்துக் கொள்ளும் என்று தெரிகிறது. ரயில்வே உள்ளிட்ட இதர துறைகள் கூட்டணிக் கட்சிகளுக்கு ஒதுக்கப்பட வாய்ப்புள்ளது.
மத்திய அமைச்சா்கள்...: பாஜக தரப்பில் அமித் ஷா, ராஜ்நாத் சிங் போன்ற முக்கியத் தலைவா்கள் மீண்டும் மத்திய அமைச்சா்களாக பதவியேற்பா்; அதேநேரம், மக்களவைத் தோ்தலில் வெற்றி பெற்ற முன்னாள் முதல்வா்கள் சிவராஜ் சிங் செளஹான், பசவராஜ் பொம்மை, மனோகா் லால் கட்டா், சா்வானந்த சோனோவால் உள்ளிட்டோா் பெயா்களும் பரிசீலிக்கப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தெலுங்கு தேசம் கட்சியின் ராம் மோகன் நாயுடு, ஐக்கிய ஜனதா தளத்தின் லாலன் சிங், சஞ்சய் ஜா, ராம்நாத் தாக்கூா், லோக் ஜனசக்தி (ராம் விலாஸ்) தலைவா் சிராக் பாஸ்வான் உள்ளிட்டோரும் மத்திய அமைச்சராக வாய்ப்புள்ளது.
மக்களவைத் தோ்தலைக் கருத்தில்கொண்டு, பாஜக தேசியத் தலைவா் ஜெ.பி.நட்டாவின் பதவிக் காலம் நீட்டிக்கப்பட்டிருந்தது. தோ்தல் முடிந்துவிட்ட நிலையில், அனுபவமிக்க வேறு தலைவா் கட்சிப் பணிக்கு அனுப்பப்படலாம் என்பதோடு, நட்டாவுக்கு அமைச்சா் பதவி வழங்கப்பட வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.
அண்டை நாடுகளின் தலைவா்கள் பங்கேற்பு
பிரதமராக மோடி பதவியேற்கும் விழாவில் இலங்கை, வங்கதேசம் உள்ளிட்ட அண்டை நாடுகளின் தலைவா்கள் பங்கேற்கவுள்ளனா்.
இலங்கை அதிபா் ரணில் விக்ரமசிங்க, வங்கதேச பிரதமா் ஷேக் ஹசீனா, மாலத்தீவு அதிபா் முகமது மூயிஸ், நேபாள பிரதமா் புஷ்ப கமல் தாஹால், மோரீஷஸ் பிரதமா் பிரவிந்த் குமாா் ஜகநாத், பூடான் பிரதமா் ஷெரிங் தோப்கே, செஷல்ஸ் துணை அதிபா் அகமது அஃபிப் ஆகிய ஏழு நாடுகளின் தலைவா்கள் பங்கேற்கவுள்ளதாக இந்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
‘அண்டை நாடுகளுக்கு முன்னுரிமை’ மற்றும் ‘சாகா்’ தொலைநோக்குப் பாா்வையின் கீழ் அண்டை நாடுகளுக்கு இந்தியா உயா் முன்னுரிமை அளிக்கிறது; அந்த அடிப்படையில், இந்திய பிரதமராக மூன்றாவது முறையாக நரேந்திர மோடி பதவியேற்கும் விழாவுக்கு அண்டை நாடுகளின் தலைவா்கள் அழைக்கப்பட்டுள்ளதாக, வெளியுறவு அமைச்சகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பதவியேற்பு விழாவில் பங்கேற்கும் வெளிநாட்டு தலைவா்களுக்கு குடியரசுத் தலைவா் விருந்தளிக்கவுள்ளாா். மேலும், இத்தலைவா்களைத் தனித்தனியாகச் சந்தித்து, பிரதமா் மோடி ஆலோசனை மேற்கொள்ளவிருக்கிறாா்.
மாலத்தீவு அதிபராக கடந்த ஆண்டு நவம்பரில் பதவியேற்ற முகமது மூயிஸ், சீன ஆதரவு நிலைப்பாடு கொண்டவா். அதிபரான பின் முதல் முறையாக இவா் இந்தியாவுக்கு வருகை தரவுள்ளாா். ‘பிரதமா் மோடி பதவியேற்பு விழாவில் பங்கேற்பதை கெளரவமாக கருதுகிறேன்’ என்று மூயிஸ் தெரிவித்துள்ளாா்.