’நாங்கள் தவறு செய்துவிட்டோம்’: கருத்துக் கணிப்பு குறித்து பிரசாந்த் கிஷோர்!

பாஜக வெற்றி குறித்து கருத்துக் கணிப்பில் தவறு செய்துவிட்டதாக தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் கூறியுள்ளார்.
பிரசாந்த் கிஷோர்
பிரசாந்த் கிஷோர்
Published on
Updated on
1 min read

தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் மக்களவைத் தேர்தல் முடிவுகளுக்கு முன்பு பாஜக 303 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மையில் ஆட்சியைப் பிடிக்கும் என்று தனது கருத்துக் கணிப்பினை வெளியிட்டிருந்தார்.

ஆனால், நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் பாஜக 240 இடங்களைப் பெற்று, தேசிய ஜனநாயகக் கூட்டணி மொத்தமாக 293 இடங்களைப் பெற்று ஆட்சியைத் தக்க வைத்திருக்கிறது. அதுபோல, காங்கிரஸ் 99 இடங்களில் வெற்றி பெற்று, இந்தியா கூட்டணி மொத்தமாக 234 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.

இதுகுறித்து தனியார் செய்தி நிறுவனத்துக்கு பேட்டி கொடுத்த பிரசாந்த் கிஷோர் தனது கருத்துக் கணிப்பு பொய்யானதை ஒப்புக்கொண்டார்.

அந்தப் பேட்டியில், ”என்னைப் போன்ற கருத்துக்கணிப்பாளர்கள் பாஜக வெற்றி பெறும் இடங்கள் குறித்து சில மதிப்பீடுகளை வைத்திருந்தோம். ஆனால், எண்ணிக்கையில் தவறு செய்துவிட்டோம்.

ஆனால், நாங்கள் தொடர்ந்து சொல்லி வந்ததைப் போல இந்தியா முழுக்க மோடிக்கு எவ்வித ஆதரவும் இல்லை. அவருடைய பிரபலத்தன்மையும், மோடி என்ற பிராண்டின் மீதான எதிர்பார்ப்பும் குறைந்துள்ளன.

பிரசாந்த் கிஷோர்
’இந்தியா கூட்டணி ஆட்சி... பொறுத்திருந்து பாருங்கள்’: மம்தா பானர்ஜி நம்பிக்கை!

கிராமப்புறப் பிரச்னைகள், வேலைவாய்ப்பின்மை மற்றும் பெருகிவரும் சமத்துவமின்மை போன்றவை மக்களைப் பெரிதும் பாதித்து வருகின்றன.

ஆனால், நாங்கள் முன்னரே சொன்னது போல அது மோடியின் மீதான பரவலான கோபமாக மாறவில்லை. மேலும், ஒன்றிணைந்த அங்கீகாரமான எந்தப் பெரிய எதிர்ப்புகளும் இல்லை. தற்போதைய இந்த நிலை இப்படியேத் தொடரும்” என்றார்.

மற்ற கருத்துக் கணிப்பாளர்களைப் போலவே தானும் இந்த மதிப்பீட்டில் பெரிய அளவில் தவறு செய்ததை ஒப்புக்கொண்ட அவர், பாஜகவின் வாக்கு எண்ணிக்கை சதவீதத்தைப் பொறுத்தவரை சென்ற தேர்தலில் இருந்த அதே அளவிலேயே இருப்பதாகவும் குறிப்பிட்டார்.

மேலும், “ஆம். நாங்கள் வாக்கு எண்ணிக்கையை கணிப்பதில் தவறு செய்துவிட்டோம்” என்றும் கூறினார்.

”காங்கிரஸ் இன்னும் வெகுதூரம் செல்ல வேண்டி இருக்கிறது. அதுவரை இந்தியாவின் பிரபலமான தலைவராக மோடியே இருப்பார்.

தற்போது ஆட்சியமைக்கவுள்ள தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி ஒரு முறையான கூட்டணியாக இல்லாமல், பெரும்பான்மையற்ற ஆட்சியாகவே தொடரும்” என்று பிரசாந்த் கிஷோர் பேசியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com