
மக்களவை எதிர்க்கட்சித் தலைவராக ராகுல் காந்தியை பதவியேற்க வலியுறுத்தி காங்கிரஸ் செயற்குழுக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இன்று நடைபெற்ற காங்கிரஸ் செயற்குழுக் கூட்டத்தில், அனைத்துத் தலைவர்களும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவராக ராகுல் காந்தியை பதவியேற்குமாறு வலியுறுத்தினர். அது தொடர்பான தீர்மானமும் நிறைவேற்றப்பட்டதாக மூத்த தலைவர் கே.சி. வேணுகோபால் தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் செயற்குழு கூட்டம் புது தில்லியில் இன்று கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தை தொடங்கி வைத்து கார்கே உரையாற்றினார்.
தொடர்ந்து, மக்களவைத் தேர்தல் பிரசாரத்தை மிகச் சிறப்பாக மேற்கொண்டதற்காக ராகுல் காந்திக்கு புகழாரம் சூட்டப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
பாரத ஒற்றுமை நடைப்பயணம் மற்றும் பாரத நீதி பயணம் என இரு நடைப்பயணங்களுக்கு தலைமைதாங்கி நடத்தி, ராகுல் காந்தி, காங்கிரஸ் கட்சிக்கு பலம் சேர்த்தார். இந்த நடைப்பயணங்கள் மூலம், ராகுல் தனது சிந்தனை மற்றும் ஆளுமை ஆகியவற்றை இந்த நாட்டுக்கு தெரியப்படுததும் வகையில் அமைந்தது, தேசிய அரசியலில் வரலாற்றுத் திருப்புமுனையாகவும், லட்சக்கணக்கான காங்கிரஸ் தொண்டர்கள் மற்றும் வாக்காளர்களிடையே மகத்தான நம்பிக்கையையும் ஏற்படுத்தியது என்று அந்த தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளது.
ராகுல் காந்தியின் தேர்தல் பிரசாரமானது ஒற்றைச் சிந்தனையுடன், கூர்மையான, குறிப்பிட்ட உக்தியோடு, இந்திய அரசியல் சாசனம் பற்றிய விவகாரங்களை, மற்ற யாரும் மேற்கொள்ள முடியாத வகையில் நடத்திக் காட்டினார்.
காங்கிரஸ் தேர்தல் வாக்குறுதிகளில் இடம்பெற்ற ஐந்து நியாயம், ஐந்து உறுதிமொழி திட்டம் அனைத்துத் தரப்பு மக்களிடையே ஒரு பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியிருந்தது என்றும் தீர்மானத்தில் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.
மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் பதவியை ராகுல் காந்தி ஏற்றுக்கொண்டாரா என்பது குறித்த கேள்விக்கு, விரைவில் அது தொடர்பான முடிவை எடுப்பார் என்று வேணுகோபால் பதிலளித்துள்ளார்.
காங்கிரஸ் கட்சியின் எழுச்சி ஆரம்பமாகியிருக்கிறது. நான்கு மாதங்களுக்கு முன்பு இருந்ததை விட, தற்போதைய காங்கிரஸ் செயற்குழுக் கூட்டம் முற்றிலும் புதிதாக மாறியிருக்கிறது என்றும் தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.