புதிய முதல்வருக்கு அரசு இல்லம் எங்கே? ஒடிஸாவில் நவீன் பட்நாயக்கால் ஏற்பட்ட நிலை!!

24 ஆண்டுகால நவீன் பட்நாயக் ஆட்சியால், புதிய முதல்வருக்கு வீடு தேடும் நிலை ஏற்பட்டுள்ளது.
நவீன் பட்நாயக்
நவீன் பட்நாயக்கோப்புப் படம்

ஒடிஸாவில் புதிதாக ஆட்சி அமைக்கும் முதல்வருக்கு அரசு இல்லம் தேடும் பணிகள் தீவிரமடைந்துள்ளதாகத் தெரிகிறது.

கடந்த 24 ஆண்டுகளாக மாநில ஆட்சி நிர்வாகத்தை ''நவீன் நிவாஸ்'' என்னும் வீட்டில் இருந்தபடியே முன்னாள் முதல்வர் நவீன் பட்நாயக் கவனித்து வந்ததால், தற்போது புதிதாக பொறுப்பேற்கவுள்ள முதல்வருக்கு அரசு இல்லம் தேடும் நிலை ஏற்பட்டுள்ளது. தற்போதுவரை ஒடிஸாவில் முதல்வருக்கு அரசு இல்லம் இல்லை.

இதனால், பாஜக சார்பில் புதிதாக பொறுப்பேற்கவுள்ள முதல்வர், தங்கியிருந்து ஆட்சி செய்ய அரசு சார்பில் இல்லம் தேடும் பணிகளை அம்மாநில பொது நிர்வாகத் துறை மேற்கொண்டுள்ளது.

ஒடிஸா மாநிலத்தில் மக்களவைத் தேர்தலுடன் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக பெரும்பான்மையுடன் (78) வெற்றி பெற்றது. பிஜு ஜனதா தளம் 51 இடங்களில் மட்டுமே வென்றது.

இதனால் நவீன் பட்நாயக்கின் 24 ஆண்டுகால ஆட்சி ஒடிஸாவில் முடிக்கு வந்துள்ளது. பாஜக அரசு இம்முறை ஆட்சி அமைக்கிறது.

பாஜக சார்பில் முதல்வர் யார்? என்பது குறித்து பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் இன்று (ஜூன் 11) ஆலோசித்து முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி மாநிலத்தில் 4 முறை எம்.எல்.ஏ.வாக இருந்த மோகன் மாஜி ஒடிஸாவின் புதிய முதல்வராக ஜூன் 12ஆம் தேதி பதவியேற்கவுள்ளார்.

இந்நிலையில், புதிய முதல்வர், எங்கிருந்து மாநிலத்தை ஆட்சி செய்வார் என்ற கேள்வி எழுந்துள்ளது.

கடந்த 24 ஆண்டுகளாக தனது சொந்த வீட்டில் இருந்தபடியே நவீன் பட்நாயக் ஆட்சி செய்தார். இதனால் அரசு இல்லம் என்ற ஒன்று ஒடிஸாவில் இல்லை.

இதனால் தற்போது பதவியேற்க இருக்கும் புதிய முதல்வர் ஆட்சி செய்ய வீடு அல்லது அதற்குரிய இடம் தேடும் பணிகளை, மாநில நிர்வாகத் துறை மேற்கொண்டுள்ளது. ஆனால், முதல்வர் விரைவில் பதவியேற்கவுள்ளதாலும் அதற்கு நேரமில்லை என்பதாலும், தற்போது உள்ள முதல்வர் குறைகேட்பு அலுவலகத்தை, புதிய முதல்வரின் தற்காலிக இல்லமாக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

ஒடிஸா மாநிலத்தின் முன்னாள் முதல்வர்களான ஜே.பி. பட்நாயக், கிரிதர் கமாங் ஆகியோர் ராஜ்பவன் மற்றும் ஏஜி ஸ்கொயர் இடையே உள்ள அலுவலகத்தில் இருந்தபடியே மாநில ஆட்சியை மேற்கொண்டனர். அதனை பின்னாளில் முதல்வர் குறைகேட்பு அலுவலகமாக மாற்றினார் நவீன் பட்நாயக்.

தற்போது அந்த முதல்வர் குறைகேட்பு அலுவலகம்தான், மாநில ஆட்சி நடத்தவுள்ள புதிய முதல்வரின் வீடாக மாறவுள்ளது. இறுதி உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்ட உடன், அங்கு மறுசீரமைப்பு பணிகள் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com