குடியரசுத் தலைவர் மாளிகையில் காணப்பட்டது சிறுத்தை அல்ல..!

குடியரசுத் தலைவர் மாளிகையில் உலாவியது சிறுத்தை அல்ல என தில்லி காவல்துறை விளக்கம்
குடியரசுத் தலைவர் மாளிகையில் காணப்பட்டது சிறுத்தை அல்ல..!

குடியரசுத் தலைவர் மாளிகையில், பிரதமர் மோடி பதவியேற்பு நிகழ்ச்சியின்போது காணப்பட்டது சிறுத்தை அல்ல, வீட்டில் வளர்க்கும் பூனை என்று தில்லி காவல்துறை விளக்கம் கொடுத்துள்ளது.

கடந்த ஞாயிறன்று நாட்டின் பிரதமராக நரேந்திர மோடியும், அவருடன் 71 பேர் மத்திய அமைச்சர்களாக பதவியேற்ற நிகழ்ச்சியின்போது குடியரசுத் தலைவர் மாளிகையில் சிறுத்தை போன்ற ஒரு விலங்கு நடமாடியதாக வெளியான விடியோவில் தெரிவது சாதாரணமாக வீட்டில் வளர்க்கும் பூனை என்று தில்லி காவல்துறை விளக்கம் கொடுத்துள்ளது.

குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெற்ற விழாவின் விடியோக்கள் சமூக வலைத்தளங்களில் பரவிய போது, அதில், குடியரசுத்தலைவர் மாளிகைக்குள் ஒரு விலங்கு கம்பீரமாக நடந்து போவது பதிவாகியிருந்தது. அதனைப் பார்க்க பூனை போலவும், நாய் போலவும் இல்லாததால் சிறுத்தையோ என்ற கேள்விகள் எழுந்தன.

இந்த நிலையில்தான், தில்லி காவல்துறை இது குறித்து விளக்கம் அளிக்க வேண்டியது ஏற்பட்டது. அதாவது, குடியரசுத் தலைவர் மாளிகையில் சிறுத்தை நடமாடுவது போன்ற செய்திகள் வெளியாகின. அது முற்றிலும் தவறு. இதுபோன்ற அடிப்படை ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை புறக்கணித்து விடுங்கள். அந்த செய்தி உண்மையல்ல. அந்த கேமராவில் பதிவானது வீட்டில் வளர்க்கப்படும் பூனைதான். இதுபோன்ற தேவையற்ற புரளிகளை பரப்ப வேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டுள்ளது.

நாட்டின் பிரதமராக நரேந்திர மோடி மூன்றாவது முறை பதவியேற்கும் விழா ஞாயிற்றுக்கிழமை குடியரசுத் தலைவர் மாளிகையில் வெகுச் சிறப்பாக நடைபெற்றது. அவருடன் 71 பேர் மத்திய அமைச்சர்களாகவும் பதவியேற்றுக்கொண்டனர்.

பிரதமா் மோடி பதவியேற்பு விழாவில் இலங்கை அதிபா் உள்பட 7 அண்டை நாடுகளின் தலைவா்கள் பங்கேற்றிருந்தனர். அது மட்டுமல்லாமல், அரசியல் பிரமுகா்கள், திரையுலக பிரபலங்கள் மட்டுமன்றி தூய்மைப் பணியாளா்கள், புதிய நாடாளுமன்றக் கட்டடம் கட்டும் பணியில் ஈடுபட்ட தொழிலாளா்கள், திருநங்கைகள் என பல்வேறு தரப்பைச் சோ்ந்த சுமாா் 9,000 போ் பங்கேற்றனா்.

இந்த நிகழ்ச்சியில் அழையா விருந்தாளியாக ஒரு விலங்கு குடியரசுத் தலைவர் மாளிகைக்குள் சுற்றி வரும் விடியோ வெளியானது நேற்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்து.

அதாவது, மேடையில், புதிதாக பதவியேற்றுக் கொண்ட எம்.பி.க்கள் கையெழுத்திடும் நிகழ்வு நடந்துகொண்டிருந்தபோது, ஒரு விலங்கு, குடியரசுத் தலைவர் மாளிகை வளாகத்துக்குள் அங்குமிங்குமாக உலாவிக்கொண்டிருந்தது. குறிப்பாக, பாஜக எம்.பி. துர்கா தாஸ் கையெழுத்திட்டுக்கொண்டிருக்கும்போது அந்த விலங்கு தெளிவாக விடியோவில் பதிவாகியிருந்தது.

அது என்ன சிறுத்தையா? இல்லை சாதாரண பூனைதானா? இல்லை நாயாக இருக்குமா? என விடியோவை பார்த்த பலரும் தங்களது கேள்விகளை எழுப்பியிருந்ததால் பரபரப்பு அதிகரித்தது. இந்த நிலையில்தான் அது பூனைதான் என விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com