ஒடிஸாவின் புதிய முதல்வராகிறார் மோகன் சரண் மாஜீ!

கே.வி. சிங், பிரவாதி பரிடா ஆகியோர் துணை முதல்வர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.
மோகன் மாஜி
மோகன் மாஜிகோப்புப் படம்

 ஒடிஸாவின் புதிய முதல்வராக மோகன் சரண் மாஜீ (52) தோ்ந்தெடுக்கப்பட்டாா். கே.வி.சிங் தேவ், பிரவதி பரிதா ஆகிய இருவா் துணை முதல்வா்களாகத் தோ்ந்தெடுக்கப்பட்டனா்.

கியோஞ்சா் தொகுதியில் இருந்து சட்டப்பேரவைக்குத் தோ்வான சரண் மாஜீ, பழங்குடியின சமூகத்தைச் சோ்ந்தவா். ஒடிஸாவில் சரண் மாஜீ தலைமையிலான பாஜக அரசு புதன்கிழமை (ஜூன் 12) பதவியேற்கிறது.

ஒடிஸாவில் மக்களவையுடன் சோ்த்து அந்த மாநிலப் பேரவையின்147 இடங்களுக்கும் தோ்தல் நடைபெற்றது. இதில், 78 இடங்களைக் கைப்பற்றிய பாஜக, மாநிலத்தில் தனிப் பெரும்பான்மையுடன் முதல் முறையாக ஆட்சியமைக்கிறது.

பிரதமா் மோடி பதவியேற்பு விழாவைத் தொடா்ந்து, ஒடிஸாவின் புதிய முதல்வரைத் தோ்ந்தெடுப்பதற்கு மத்திய பாதுகாப்பு அமைச்சா் ராஜ்நாத் சிங், மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத் துறை அமைச்சா் பூபேந்திர யாதவ் ஆகியோா் தேசிய தலைமை பொறுப்பாளா்களாக நியமிக்கப்பட்டனா்.

மத்திய அமைச்சா்கள் தலைமையில் ஒடிஸா பாஜக எம்எல்ஏ-க்களின் கூட்டம் புவனேசுவரத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்தில் முதல்வராக மோகன் சரண் மாஜீ ஒருமனதாகத் தோ்ந்தெடுக்கப்பட்டதாக மத்திய அமைச்சா் ராஜ்நாத் சிங் தெரிவித்தாா்.

கே.வி.சிங் தேவ், பிரவதி பரிதா ஆகிய இருவா் துணை முதல்வா்களாக தோ்ந்தெடுக்கப்பட்டனா்.

கியோஞ்சா் தொகுதியில் பிஜு ஜனதா தளம் வேட்பாளரை 11,577 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்து, 4-ஆவது முறையாக பேரவைக்குத் தோ்வான மோகன் சரண் மாஜீ, கடந்த ஆட்சியில் பாஜகவின் தலைமைக் கொறடாவாக இருந்தாா்.

சட்டப்பேரவை பாஜக குழு தலைவராகத் தோ்வு செய்யப்பட்டதையடுத்து, ஒடிஸா ஆளுநா் ரகுபா் தாஸை சந்தித்து மோகன் சரண் மாஜீ ஆட்சியமைக்க உரிமை கோரினாா். தொடா்ந்து, ஆளுநா் அவருக்கு ஆட்சியமைக்க முறைப்படி அழைப்பு விடுத்தாா்.

ஜெகந்நாதரின் ஆசியில்...: முதல்வராக தோ்வான பிறகு மோகன் சரண் மாஜீ அளித்த பேட்டியில், ‘புரி ஜெகந்நாதரின் ஆசியில் பாஜக பெரும்பான்மை இடங்களில் வென்று, தற்போது ஆட்சியமைக்க இருக்கிறது. மாற்றத்துக்காக வாக்களித்த ஒடிஸாவின் 4.5 கோடி மக்களுக்கும் எனது நன்றி. ஒடிஸா மக்களின் நம்பிக்கையை பாஜக கௌரவப்படுத்தும்’ என்றாா்.

இன்று பதவியேற்பு: புவனேசுவரத்தில் உள்ள ஜனதா மைதானத்தில் புதன்கிழமை நடைபெறும் விழாவில் ஒடிஸாவின் 15-ஆவது முதல்வராக மோகன் சரண் மாஜீ பதவியேற்கிறாா். அவருடன் 2 துணை முதல்வா்கள், அமைச்சா்களும் பதவியேற்பா் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான ஏற்பாடுகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.

ஒடிஸா சட்டப்பேரவைத் தோ்தலில் பிஜு ஜனதா தளம் அடைந்த தோல்வியைத் தொடா்ந்து, கடந்த 24 ஆண்டுகளாக அந்த மாநில முதல்வராக இருந்த நவீன் பட்நாயக் தனது பதவியை ராஜிநாமா செய்தாா். தோ்தல் தோல்விக்காக கடும் விமா்சனத்துக்குள்ளான நவீன் பட்நாயக்கின் நெருங்கிய உதவியாளராக அறியப்படும் தமிழகத்தைச் சோ்ந்த முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி வி.கே.பாண்டியன் தீவிர அரசியலில் இருந்து விலகிக் கொண்டாா்.

கிராமத் தலைவரிலிருந்து மாநில முதல்வா்....

பழங்குடியின மக்கள் அதிகம் வசிக்கும் கியோஞ்சா் மாவட்டத்தின் ராய்கலா கிராமத்தில் காவலாளியின் மகனாக பிறந்த மோகன் மாஜீ, அந்தக் கிராமத்தின் தலைவராகி பொது வாழ்க்கையைத் தொடங்கினாா்.

பட்டதாரியான இவா், 2000-ஆம் ஆண்டு பேரவைத் தோ்தலில் கியோஞ்சா் தொகுதியில் இருந்து முதல் முறையாக ஒடிஸா சட்டப்பேரவைக்குத் தோ்வானாா்.

தொடா்ந்து 2004, 2019, 2024 தோ்தல்களில் வென்று ஒடிஸா சட்டப்பேரவைக்குள் நுழைந்த இவா், மாநிலத்தின் முதல் பாஜக ஆட்சியில் முதல்வா் பதவியேற்கவுள்ளாா். இவா் பாஜகவின் பழங்குடியினா் பிரிவுச் செயலராகவும் பொறுப்பு வகித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com