
பிரிட்டனிலுள்ள புகழ்பெற்ற ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகம் தமிழ்நாட்டின் கோவிலிலிருந்து திருடப்பட்ட 500 ஆண்டுகள் பழமையான திருமங்கை ஆழ்வாரின் வெண்கலச் சிலையைத் இந்தியாவுக்கு திருப்பித் தர ஒப்புதல் தெரிவித்துள்ளது.
ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த அஷ்மோலியன் அருங்காட்சியகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ இந்திய உயர் ஆணையம் வைத்துள்ள கோரிக்கையின்படி, ஆஷ்மோலியன் அருங்காட்சியகத்திலுள்ள 16-ம் நூற்றாண்டைச் சேர்ந்தத் துறவி திருமங்கை ஆழ்வாரின் சிலையை ஒப்படைக்க ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக் கவுன்சில் ஆதரவு தெரிவிக்கிறது. இந்தமுடிவை அறக்கட்டளை ஆணையத்தின் ஒப்புதலுக்கு சமர்பிக்கிறோம்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
பன்னிரு ஆழ்வார்களில் ஒருவரான திருமங்கை ஆழ்வாரின் 60 செ.மீ உயரம் கொண்ட சிலையை கடந்த 1967-ல் கலெக்டர் ஜெ.ஆர்.பெல்மாண்ட்டின் சேகரிப்பில் இருந்து ஏல நிறுவனம் மூலம் வாங்கப்பட்டு ஆஷ்மோலியன் அருங்காட்சியகத்துக்குக் கொண்டு வரப்பட்டது.
கடந்தாண்டு நவம்பரில் ஒரு ஆராய்ச்சியாளர் இந்த பழமையான சிலையின் தோற்றம் குறித்து ஆராய்ந்ததாகவும், அதன் பின்னர் இந்திய உயர் ஆணையத்திற்கு இதுகுறித்துத் தெரிவிக்கப்பட்டதாகவும் அருங்காட்சியகம் கூறியுள்ளது.
ஏலத்தின் மூலம் இந்த சிலை அங்கு சென்றதை அறிந்த இந்திய அரசு, தமிழ்நாட்டின் கோவிலிலிருந்து திருடப்பட்டதாக அறியப்படும் இந்த சிலையை திரும்ப வழங்க பிரிட்டனிடம் கோரிக்கை வைத்தது.
உலகின் மிகவும் பிரபலமான கலை மற்றும் பழமையான கலைப்பொருட்களை வைத்திருக்கும் இந்த அருங்காட்சியகம், 1967-ல் நல்ல நம்பிக்கையின் பேரில் இந்த சிலையை வாங்கியதாகக் கூறுகிறது.
திருடப்பட்ட இந்திய கலைப்பொருட்கள் பிரிட்டனிலிருந்து இந்தியாவிற்கு மீட்டெடுக்கப்பட்ட பல நிகழ்வுகள் உள்ளன.
கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் ஆந்திராவிலிருந்து சுண்ணாம்பு கல்லில் செதுக்கப்பட்ட சிற்பம், தமிழ்நாட்டில் 17 ஆம் நூற்றாண்டில் செய்யப்பட்ட ’நவநீத கிருஷ்ணர்’ வெண்கல சிற்பம் ஆகியவை விசாரணைக்குப் பின் பிரிட்டனிலிலுள்ள இந்திய உயர் ஆணையரிடம் ஒப்படைக்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.