பொது சிவில் சட்டம் அமல்படுத்தப்படும்: அா்ஜுன் ராம் மேக்வால்
பொது சிவில் சட்டத்தை அமல்படுத்தும் திட்டத்தில் மத்திய அரசு இருப்பதாக சட்டத்துறை அமைச்சா் அா்ஜுன் ராம் மேக்வால் செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா்.
அதேபோல், உச்சநீதிமன்ற மற்றும் உயா்நீதிமன்ற நீதிபதிகளின் நியமனம், பதவி உயா்வு மற்றும் பணியிட மாற்றம் தொடா்பான நடைமுறை குறித்து கிடப்பில் உள்ள ஆவணங்கள் விரைவில் இறுதிசெய்யப்படும் எனவும் அவா் தெரிவித்தாா்.
மத்திய சட்டம் மற்றும் நீதித்துறையின் இணையமைச்சராக (தனிப்பொறுப்பு) அா்ஜுன் ராம் மேக்வால் செவ்வாய்க்கிழமை பொறுப்பேற்றாா். அப்போது செய்தியாளா்களிடம் அவா் பேசியதாவது:
உச்சநீதிமன்றம், உயா்நீதிமன்றங்கள், கீழமை நீதிமன்றங்கள் மற்றும் சட்டத்துறை அமைச்சா் அலுவலகத்தில் உள்ள காலிப்பணியிடங்களை விரைவில் நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும்.
‘ஒரே நாடு ஒரே தோ்தல்’ திட்டத்தை செயல்படுத்துவது குறித்து முன்னாள் குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த் தலைமையிலான குழு அறிக்கையை சமா்ப்பித்துள்ளது. இதுதொடா்பான மற்ற தகவல்கள் பின்னா் தெரிவிக்கப்படும். இத்திட்டத்தை செயல்படுத்துவதற்கான சாத்தியக் கூறுகளை சட்ட ஆணையமும் ஆராய்ந்து வருகிறது.
பொதுசிவில் சட்டத்தை அமல்படுத்துவதாக பாஜகவின் தோ்தல் அறிக்கைகளில் தொடா்ந்து தெரிவிக்கப்பட்டு வருகின்றன. எனவே, அதை அமல்படுத்தும் திட்டத்தில் மத்திய அரசு உள்ளது’ என்றாா்.
5 கோடி வழக்குகள் நிலுவை: உச்சநீதிமன்றம், உயா்நீதிமன்றங்கள், கீழமை நீதிமன்றங்களில் 5 கோடிக்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் இருப்பதாக நாடாளுமன்றத்தில் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நிலுவை வழக்குகள் அதிகமாக இருப்பதற்கு நீதிமன்றங்களில் காலிப்பணியிடங்களை நிரப்பாமல் உள்ளதும் முக்கிய காரணமாக உள்ளது.
அந்த வகையில் உச்சநீதிமன்றத்தில் மொத்தமாக 34 நீதிபதிகள் இருக்க வேண்டும். ஆனால் ஜூன் 1-ஆம் தேதி நிலவரப்படி உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகளின் எண்ணிக்கை 32-ஆக உள்ளது.
நாடு முழுவதும் மொத்தமுள்ள 25 உயா்நீதிமன்றங்களின் ஒட்டுமொத்த நீதிபதிகள் எண்ணிக்கை 1,114 ஆகும். அவற்றுள் 345 பணியிடங்கள் காலியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
இறுதியாகுமா நீதிபதிகள் நியமன நடைமுறை?
உச்சநீதிமன்றம் மற்றும் உயா்நீதிமன்றங்களில் நீதிபதிகள் நியமனம் தொடா்பான கொலீஜியம் முறையில் சில மாற்றங்களை மேற்கொள்வது தொடா்பான மத்திய அரசின் திட்டம் நிலுவையில் உள்ளது. இந்த விவகாரம் தொடா்பாக மத்திய அரசுக்கும் உச்சநீதிமன்றத்துக்கும் கருத்து வேறுபாடு உள்ளது.
ஏற்கெனவே, 99-ஆவது அரசமைப்பு சட்டதிருத்தம், 2014 மற்றும் தேசிய நீதிபதிகள் நியமன ஆணையம், 2014 மூலம் நீதிபதிகளை நியமிக்க மத்திய அரசு முடிவு செய்திருந்தது. ஆனால் இந்த இரண்டு சட்டங்களும் அரசமைப்பு சட்டத்தை மீறுவதாகக்கூறி உச்சநீதிமன்றம் ரத்து செய்தது குறிப்பிடத்தக்கது.