‘ஜோதிர்மத்’ எனப் பெயர் மாற்றப்படும் உத்தரகண்டின் ஜோஷிமத் நகரம்!
உத்தரகண்டில் உள்ள புராண நகரமான ஜோஷிமத் அதிகாரபூர்வமாக ஜோதிர்மத் என்று பெயர் மாற்றப்பட்டுள்ளது. மத்திய அரசின் ஒப்புதலைப் பெற்ற பிறகு இந்த முடிவை அம்மாநில அரசு அறிவித்துள்ளது.
ஓராண்டுக்கு முன்பு அளித்த வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில், உத்தரகண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி, சாமோலி மாவட்டத்தில் உள்ள ஜோஷிமத் தாலுகாவின் அதிகாரபூர்வ பெயரை ஜோதிர்மத் என்று மாற்றுவதாக அறிவித்தார்.
கடந்த ஆண்டு சாமோலி மாவட்டத்தில் உள்ள காட் என்ற இடத்தில் நடைபெற்ற விழாவின் போது உள்ளூர்வாசிகள் மற்றும் பல அமைப்புகளால் இந்த பெயர் மாற்றம் செய்வதாக முன்மொழியப்பட்டது.
2023 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இயற்கை பேரிடர்களால் பாதிக்கப்பட்ட பின்னர் பத்ரிநாத் கோயிலின் நுழைவுவாயிலான ஜோஷிமத் நகரின் உள்ளூர்வாசிகள், ஜோஷிமத்திற்கு ஜோதிர்மத் என்று பெயரிட நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வந்தனர்.
இதுகுறித்து முதல்வர் அலுவலக செய்தித் தொடர்பாளர் கூறுகையில், “முதல்வர் தாமி இந்த விஷயத்தை பரிசீலித்து, பெயரை மாற்ற முடிவு செய்துள்ளார். இந்த அறிவிப்பைத் தொடர்ந்து, முன்மொழிவு உருவாக்கப்பட்டு, இந்திய அரசுக்கு அனுப்பப்பட்டு, தற்போது ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது” என்றார்.
8 ஆம் நூற்றாண்டில் இந்தப் பகுதிக்கு வந்த ஆதி குரு சங்கராச்சாரியார் 'கல்ப விருக்ஷம்' என்ற அழியாத விருப்பத்தை நிறைவேற்றும் மரத்தின்கீழ் தியானம் செய்ததன் மூலம் ஞானத்தின் தெய்வீக ஒளியைப் பெற்றார்.
அதன் மூலம் ஜோதிஷ்வர் மஹாதேவின் ஆசீர்வாதத்துடன் அந்த இடத்திற்கு ஜோதிர்மத் என்று பெயர் வந்தது. ஆனால், பின்னர் அது ஜோஷிமத் என்று பிரபலமானது.
இதுகுறித்து ஜோஷிமத் வணிகர் மண்டல் தலைவர் ஜெய் பிரகாஷ் பட் கூறுகையில், “பொதுமக்களின் உணர்வுக்கேற்ப ஜோஷிமத்தின் உண்மையான பெயரான 'ஜோதிர்மத்' என மாற்றியமைக்க அரசு முடிவு செய்துள்ளது உள்ளூர் மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது” எனக் கூறியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.