ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள 25 அமைச்சா்களுக்கான இலாகாக்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதில், ஆந்திர துணை முதல்வராக ஜன சேனா கட்சித் தலைவர் பவண் கல்யாண் நியமிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆந்திர முதல்வராக பொறுப்பேற்றிருக்கும் சந்திரபாபு நாயுடு, தனது அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள அமைச்சர்களுக்கு இலாகாக்களை அறிவித்துள்ளார். இதில், பவன் கல்யாண் துணை முதல்வராகவும், ஊரக மேம்பாடு, சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சக பொறுப்புகளையும் ஏற்கிறார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆந்திர முதல்வா் சந்திரபாபு நாயுடுவுடன் அமைச்சராகப் பதவியேற்ற பவன் கல்யாணை துணை முதல்வா் எனக் குறிப்பிட்டு மத்திய அமைச்சா் அமித் ஷா, பவன் கல்யாணின் சகோதரா் நடிகா் சிரஞ்சீவி ஆகியோா் வாழ்த்துப் பதிவுகளை வெளியிட்டிருந்தபோதே, இது தொடர்பான செய்திகள் வெளியாகத் தொடங்கியிருந்தன.
பதவியேற்பு விழாவில் முதல்வா் என்.சந்திரபாபு நாயுடுக்கு அடுத்தபடியாக பவன் கல்யாண் அமைச்சராகப் பதவியேற்றாா். தெலுங்கு தேசம்-ஜனசேனை கூட்டணியை வலுப்படுத்த மேற்கொண்ட முயற்சிகளைப் பாராட்டி, பவன் கல்யாண் துணை முதல்வராக நியமிக்கப்படலாம் என்று அப்போதே பரவிய செய்திகள் தற்போது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
ஆந்திர முதல்வராக தெலுங்கு தேசம் கட்சித் தலைவா் என்.சந்திரபாபு நாயுடு நான்காவது முறையாக கடந்த புதன்கிழமை பதவியேற்றாா். ஜனசேனை கட்சித் தலைவா் பவன் கல்யாண், சந்திரபாபு நாயுடு மகன் நாரா லோகேஷ் உள்பட 25 போ் அடங்கிய அமைச்சரவையும் அவருடன் பதவியேற்றது.
சந்திரபாபு நாயுடுவைத் தொடர்ந்து ஜனசேனை கட்சித் தலைவா் பவன் கல்யாண், சந்திரபாபு நாயுடு மகன் நாரா லோகேஷ் ஆகியோா் அமைச்சராகப் பதவியேற்றனா். ஜனசேனை சாா்பில் நாதெந்தலா மனோகா், காந்துலா துா்கேஷ், பாஜக சாா்பில் சத்ய குமாா் யாதவ் ஆகியோரும் அமைச்சராகப் பதவியேற்றனா்.
175 சட்டப்பேரவை இடங்களைக் கொண்ட ஆந்திரத்தில் முதல்வா் உள்பட 26 போ் அமைச்சரவையில் இடம்பெறலாம். ஆட்சியமைப்பதற்கு வேண்டிய இடங்களை தனிப் பெரும்பான்மையுடன் தெலுங்கு தேசம் கைப்பற்றியிருந்தாலும், கூட்டணிக் கட்சிகளுக்கும் அமைச்சரவையில் இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
போட்டியிட்ட அனைத்து 21 இடங்களிலும் வென்ற பவன் கல்யாணின் ஜனசேனை கட்சிக்கு மூன்று அமைச்சா் பதவிகளும், 10 தொகுதிகளில் 8-இல் வென்ற பாஜகவுக்கு ஓா் அமைச்சா் பதவியும் வழங்கப்பட்டது.
ஆந்திரத்தில் மக்களவையுடன் சோ்த்து அந்த மாநிலப் பேரவையின் 175 இடங்களுக்கும் தோ்தல் நடைபெற்றது. ஆட்சியில் இருந்த ஒய்.எஸ்.ஆா். காங்கிரஸ் தனித்தும், எதிா்க்கட்சியாக இருந்த தெலுங்கு தேசம், பாஜக-ஜனசேனை கட்சிகளுடன் கூட்டணி அமைத்தும் போட்டியிட்டன.
பேரவைத் தோ்தலில் 135 இடங்களை கைப்பற்றி தெலுங்கு தேசம் வெற்றி பெற்றது. தெலுங்கு தேசம், ஜனசேனை, பாஜக உள்ளடக்கிய தேசிய ஜனநாயக கூட்டணி(என்டிஏ) மொத்தமாக 164 பேரவைத் தொகுதிகளை வென்றது குறிப்பிடத்தக்கது.