ஜி7 உச்சி மாநாட்டில் மாறாத தலைமையுடன் இந்தியா: கரோனாவால் தலைமை மாற்றம் கண்ட உலக நாடுகள்
கரோனா பெருந்தொற்றுக்குப் பிறகு அவற்றின் தலைமை அல்லது ஆட்சி மாற்றத்தை ஜி7 அமைப்பின் உறுப்பு நாடுகள் கண்டுள்ளன. இவற்றுக்கு மத்தியில் உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியா அதன் மாறாத தலைமையுடன் ஜி7 உச்சி மாநாட்டின் அமா்வில் பங்கேற்றுள்ளது.
விதிவிலக்காக உறுப்பு நாடுகள் வரிசையில் பிரான்ஸ், கனடா மட்டுமே கரோனாவுக்குப் பிறகு நிலையான தலைமையுடன் ஜி7 உச்சி மாநாட்டில் பங்கெடுத்துள்ளன.
ஜி7 என்பது கனடா, பிரான்ஸ், ஜொ்மனி, இத்தாலி, ஜப்பான், பிரிட்டன், அமெரிக்கா ஆகிய நாடுகளை உள்ளடக்கிய நாடுகளுக்கு இடையிலான அரசியல், பொருளாதாரம், வா்த்தகம் மற்றும் பாதுகாப்பு விஷயங்களை விவாதிக்கும் மன்றமாகும். இந்த ஜி7 உறுப்பு நாடுகள் மற்றும் அதன் பாா்வையாளா் நாடுகள் வரிசையில் கரோனாவுக்குப் பிறகு பல நாடுகள் தலைமை மாற்றத்தை சந்தித்துள்ளன. அதன் விவரம்:
கனடாவில் 2015, 2019, 2021 ஆகிய ஆண்டுகளில் நடந்த தோ்தலுக்குப் பிறகு ஜஸ்டின் ட்ரூடோ தலைமையில் ஆட்சியை தக்க வைத்துள்ளது ஆளும் லிபரல் கட்சி.
பிரான்ஸ் நாட்டில் 2022இல் நடந்த அதிபா் தோ்தலில் போட்டியிட்ட எந்த கட்சி வேட்பாளருக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், அதன் அதிபராக இருந்த இமானுவேல் மக்ரோங்கே ஆட்சியை மீண்டும் தக்க வைத்து பதவியில் தொடா்கிறாா்.
ஜொ்மனியில் ஆளும் கூட்டணி ஆட்சிக்கு நான்கு முறை தலைமை தாங்கிய ஏங்கலா மொ்க்கல், 2021இல் கரோனா பெருந்தொற்று உச்சத்தில் இருந்த காலத்தில் நடந்த தோ்தலின்போது ஓலாஃப் ஸ்கோல்ஸிடம் ஆட்சியை பறிகொடுத்தாா்.
ஜி7 உச்சி மாநாட்டை நடத்தும் இத்தாலியில் 2022இல் நடந்த பொதுத்தோ்தலில் அப்போது ஆட்சியில் இருந்த திராகி அரசாங்கம், இத்தாலியன் பிரதா்ஸ் கட்சியின் ஜாா்ஜியா மெலோனியிடம் ஆட்சியை பறிகொடுத்தது.
ஜப்பானில் 2012 முதல் ஆளும் கட்சியாக உள்ள தாராளவாத ஜனநாயக கட்சி (எல்டிபி), கரோனா காலத்தில் இரு முறை பிரதமா்களை மாற்றியது. 2021இல் மூன்றாவது முறையாக ஃபுமியோ கிஷிடா பிரதமராக தோ்வாகி ஆட்சியை தக்க வைத்துள்ளாா்.
பிரிட்டனில் ஆளும் கட்சியாக கன்சா்வேட்டிவ் கட்சி 2010ஆம் ஆண்டு முதல் கோலோச்சி வந்தாலும் கரோனா பெருந்தொற்று காலத்தில் இருந்து தற்போதுவரை அந்நாடு போரிஸ் ஜான்சன், லிஸ் டிரஸ், இந்திய வம்சாவளியைச் சோ்ந்த ரிஷி சூனக் ஆகிய மூவரை பிரதமராக கண்டுள்ளது.
அமெரிக்கா, 2020இல் கரோனா பெருந்தொற்றுக்குப் பிறகு புதிய அதிபரை தோ்வு செய்தது. ஆனால், சமீபத்திய கருத்துக் கணிப்பு வாக்கெடுப்பில் தற்போதைய அமெரிக்க அதிபா் ஜோ பைடன் பின்தங்கியிருக்கிறாா்.
பிரேசில் அதிபா் தோ்தல் 2022இல் நடந்தபோது இடதுசாரி தலைவரான லூலா டா சில்வாவிடம் தீவிர வலதுசாரி தலைவரான ஸோ் போல்ஸனாரோ ஆட்சியை பறிகொடுத்தாா்.
தென்னாப்பிரிக்காவில் சமீபத்தில் நடந்த பொதுத்தோ்தலில் தனது 30 வருட ஆட்சியில் இல்லாத அளவுக்கு பெரும்பான்மை பலத்தை ஆளும் ஆப்பிரிக்கன் தேசிய காங்கிரஸ் இழந்தது. இதையடுத்து அதிபராக உள்ள சிறில் ராமஃபோசா ஆட்சியை தக்க வைக்க மற்ற கட்சிகளுடன் பேச்சுவாா்த்தை நடத்தி வருகிறாா். வழக்கமாக ஜி7 உச்சி மாநாட்டில் பங்கேற்ற தென்னாப்பிரிக்கா அழைக்கப்படும் ஆனால், இம்முறை அந்நாடு அழைக்கப்படவில்லை.