
மத்திய அமைச்சராக இருந்த ஸ்மிருதி இரானி, மக்களவைத் தேர்தலில் தோல்வி அடைந்த நிலையில், மாநிலங்களவை உறுப்பினராக நியமிக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதேபோல், கடந்த அமைச்சரவையில் அமைச்சர்களாக இருந்து மக்களவைத் தேர்தலை சந்தித்து தோல்வியடைந்த அர்ஜுன் முண்டா, ஆர்.கே. சிங் உள்ளிட்டோரும் மாநிலங்களவை எம்பியாக தேர்வு செய்யப்பட அதிக வாய்ப்புள்ளது.
பல்வேறு மாநிலங்ளில் இருந்து மாநிலங்களவை உறுப்பினர்களாக இருந்தவர்கள் மக்களவைக்கு தேர்வாகியிருப்பதால், அவர்களின் இடம் தற்போது காலியானதாகியுள்ளது. அந்த இடங்களை நிரப்ப விரைவில் தேர்தல் ஆணையம் அறிவிப்பை வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில், உ.பி.யில் ஸ்மிருதியும், ஜார்கண்டில் முண்டாவும், பிகாரில் ஆர்.கே.சிங்கும் தோல்வி அடைந்தாலும், அவர்களின் அரசியல் அனுபவம் கட்சிக்கு வலுசேர்க்கும் என்பதால் மாநிலங்களவை உறுப்பினர்களாக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
கடந்த மக்களவைத் தேர்தலில் அமேதி தொகுதியில் ராகுல் காந்தியை தோற்கடித்து மத்திய அமைச்சரானவர் ஸ்மிருதி இரானி. முண்டா, முன்னாள் முதல்வரும் கட்சியின் பழங்குடி சமூகத்தின் முகமாகவும் இருப்பவர்.
அதேபோல், மோடியின் கடந்த ஆட்சியில் எரிசக்தித்துறை அமைச்சராக இருந்த ஆர்.கே.சிங்கின் சிறந்த செயல்பாடு காரணமாக அவருக்கு வாய்ப்பு அளிக்க கட்சி முன்வந்துள்ளதாக பாஜக நிர்வாகி ஒருவர் தெரிவித்துள்ளார்.
ஏற்கெனவே, அஸ்ஸாம், பிகார், மகாராஷ்டிரம், ஹரியாணா, மத்திய பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் திரிபுரா மாநிலங்களில் காலியாக உள்ள மாநிலங்களவை பதவிகளுக்கான அறிவிக்கை மாநிலங்களவை செயலகம் வெளியிட்டுள்ளது.
இதற்கிடையே, அஸ்ஸாமில் இருந்து சர்பானந்தா சோனோவால், பிகாரில் விவேக் தாக்குர், ம.பி. ஜோதிராதித்ய சிந்தியா மற்றும் மகாராஷ்டிரத்தில் பியூஸ் கோயல் ஆகியோர் மக்களவை தேர்தலில் வெற்றி பெற்றுள்ளனர்.
அவர்களின் மாநிலங்களவை உறுப்பினர்கள் இடங்களும் தற்போது காலியாகியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.