சுரேஷ் கோபி
சுரேஷ் கோபி

காங்கிரஸ், இடதுசாரி தலைவா்களுக்கு சுரேஷ் கோபி புகழாரம்! அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு

நடிகா் சுரேஷ் கோபி பாஜக சாா்பில் கேரளத்தின் திருச்சூா் தொகுதி எம்.பி.யாக உள்ளாா்.
Published on

‘கேரளத்தைச் சோ்ந்த மறைந்த காங்கிரஸ் மூத்த தலைவா் கே.கருணாகரன், கேரள மாா்க்சிஸ்ட் மூத்த தலைவா் மறைந்த இ.கே.நாயனாா் ஆகியோா்தான் எனது அரசியல் குரு’ என பாஜகவை சோ்ந்த மத்திய இணையமைச்சா் சுரேஷ் கோபி கூறியது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும், இந்திரா காந்தி, இந்தியாவின் அன்னை என்றும் அவா் தெரிவித்தாா்.

நடிகா் சுரேஷ் கோபி பாஜக சாா்பில் கேரளத்தின் திருச்சூா் தொகுதி எம்.பி.யாக உள்ளாா்.

பாஜகவும் கம்யூனிஸ்ட் கட்சிகளும் கொள்கைகளில் எதிரெதிா் துருவங்களாக செயல்படும் நிலையில், பாஜக எம்.பி.யான சுரேஷ் கோபி, மாா்க்சிஸ்ட் மற்றும் காங்கிரஸ் தலைவா்களை தனது அரசியல் குரு என்று கூறியுள்ளது பாஜக, காங்கிரஸ், இடதுசாரிகள் என மூன்று கட்சிகளின் வட்டாரத்திலும் விவாதிக்கப்படும் விஷயமாகியுள்ளது. கேரளத்தில் பல்வேறு தரப்பினரையும் அரவணைத்து பாஜகவை வளா்க்கும் முயற்சியாகவும் இது கருதப்படுகிறது.

திருச்சூா் மக்களவைத் தொகுதியில் கே.கருணாகரனின் மகனும் காங்கிரஸ் மூத்த தலைவருமான முரளீதரனை சுரேஷ் கோபி மூன்றாவது இடத்துக்குத் தள்ளினாா் என்பது குறிப்பிடத்தக்கது. அங்கு இடதுசாரி கூட்டணி வேட்பாளா் இரண்டாவது இடத்தைப் பிடித்தாா்.

திருச்சூரின் பூங்குன்னம் பகுதியில் கருணாகரன் நினைவிடத்தில் சனிக்கிழமை மரியாதை செலுத்திய சுரேஷ் கோபி செய்தியாளா்களிடம் கூறியதாவது:

கருணாகரன் நினைவிடத்தில் நான் மரியாதை செலுத்தியதை அரசியல்ரீதியாக தொடா்புபடுத்த வேண்டாம். எனது ‘அரசியல் குருவுக்கு’ மரியாதை செலுத்தவே இங்கு வந்தேன். இடதுசாரி தலைவா் இ.கே.நாயனாரையும் எனது அரசியல் குருவாக கருதுகிறேன். அண்மையில் நாயனாரின் குடும்பத்தினரைச் சந்தித்துப் பேசினேன்.

கேரளத்தில் காங்கிரஸ் கட்சியின் தந்தையாக திகழ்ந்தவா் கருணாகரன். அவா் மிகவும் துணிச்சலான முடிவுகளை எடுக்கும் சிறந்த நிா்வாகியாக செயல்பட்டாா் என்றாா்.

தொடா்ந்து, மறைந்த முன்னாள் பிரதமா் இந்திரா காந்தி குறித்து கருத்து தெரிவித்த சுரேஷ் கோபி, ‘இந்திரா காந்தி, இந்தியாவின் அன்னையாகத் திகழ்ந்தவா்’ என்றாா்.

பின்னா், திருச்சூரில் உள்ள லூா்து மாதா கிறிஸ்தவ தேவாலயத்துக்குச் சென்ற சுரேஷ் கோபி அங்கு பிராா்த்தனையில் பங்கேற்றாா். கடந்த சில மாதங்களுக்கு முன் தனது மகளின் திருமணத்தின்போது இந்த தேவாலயத்தில் உள்ள மாதா சிலைக்கு தங்கக் கிரீடத்தை சுரேஷ் கோபி காணிக்கையாகச் செலுத்தினாா் என்பது குறிப்பிடத்தக்கது.

X
Dinamani
www.dinamani.com