
மத்தியப் பிரதேசத்தில் பழங்குடியினர் அதிகம் வசிக்கும் பகுதியான மாண்ட்லாவில் மாட்டிறைச்சி விற்பனைக்கு எதிரான நடவடிக்கையில் அரசு நிலத்தில் கட்டப்பட்ட 11 பேரின் வீடுகள் இடிக்கப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
நைன்பூரில் உள்ள பைன்வாஹி பகுதியில் இறைச்சிக்காக அதிகளவில் மாடுகள் சிறைப்பிடிக்கப்பட்டதாக வந்தத் தகவலையடுத்து இந்த நடவடிக்கையை மேற்கொண்டதாக மாண்ட்லா பகுதி காவல்துறை கண்காணிப்பாளர் ராஜத் சக்லேச்சா தெரிவித்தார்.
மேலும் அவர் பேசுகையில், “எங்கள் குழு இந்தப் பகுதிக்கு விரைந்தபோது வீடுகளின் பின்புறத்தில் 150 பசுக்கள் கட்டப்பட்டிருந்தன. அத்துடன், 11 குற்றவாளிகளின் வீடுகளிலுள்ள குளிர்சாதனப் பெட்டிகளில் இருந்த மாட்டிறைச்சியையும் கைப்பற்றியுள்ளோம். மேலும் ஒரு அறையிலிருந்து மாட்டின் கொழுப்பு, தோல் மற்றும் எலும்புகளையும் கைப்பற்றினோம்.
பிடிபட்டவை அனைத்தும் மாட்டிறைச்சி என்று உள்ளூர் அரசு கால்நடை மருத்துவர் மூலம் உறுதி செய்தோம். இரண்டாம் கட்ட டிஎன்ஏ பரிசோதனைக்காக மாதிரிகளை ஹைதரபாத்துக்கு அனுப்பியுள்ளோம். அது மட்டுமின்றி, குற்றவாளிகள் 11 பேரின் வீடுகள் அரசு நிலத்தில் கட்டப்பட்டிருந்ததால் அவை அனைத்தும் இடிக்கப்பட்டன.
பிடிபட்ட 150 பசுக்களும் கால்நடை காப்பகத்தில் வைக்கப்பட்டுள்ளன. சிலகாலமாக பைன்ஸ்வாஹி பகுதி பசு கடத்தலுக்கு மையமாக மாறியுள்ளது. மத்தியப் பிரதேசத்தில் பசுவதைக்கு 7 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை உள்ளது ” என்று அவர் கூறினார்.
கடந்த வெள்ளி (ஜூன் 14) இரவு பசுக்கள் மற்றும் இறைச்சியைக் கைப்பற்றிய பிறகு முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து, குற்றவாளிகளில் ஒருவர் மட்டுமே பிடிபட்டதால் மற்றவர்களை தேடும் பணி நடந்து வருவதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
அத்துடன், 2 குற்றவாளிகளின் குற்றப்பின்னணி குறித்தத் தகவல்கள் கிடைத்துள்ளதாகவும், மற்றவர்கள் மீது விசாரணை நடந்து வருவதாகவும், பிடிபட்ட அனைவரும் இஸ்லாமியர்கள் என்றும் காவல்துறையினர் கூறியுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.