
நரேந்திர மோடி பிரதமராக பதவியேற்ற 2014 ஆம் ஆண்டுக்கு பிறகு இதுவரை 7 முறை ரயில் விபத்துகள் ஏற்பட்டதாகவும், அதில் பலரும் பலியானதாக காங்கிரஸ் கட்சி குற்றஞ்சாட்டியுள்ளது.
இதுகுறித்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தனது எக்ஸ் தளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “மேற்கு வங்கத்தில் கஞ்சன்ஜங்கா எக்ஸ்பிரஸ் விபத்தில் பலர் உயிரிழந்த செய்தி மிகவும் வருத்தமளிக்கிறது. அவர்களை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதுடன், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டும் என்று நம்புகிறேன். பாதிக்கப்பட்ட அனைவருக்கும், அவர்களது குடும்பத்தினருக்கு அரசு உடனடியாக முழு இழப்பீடு வழங்க வேண்டும்.
நிவாரணம் மற்றும் மீட்புப் பணிகளில் காங்கிரஸ் தொண்டர்கள் அனைத்து உதவிகளையும் செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன்.
ரயில் விபத்தினால் அப்பாவி மக்களின் உயிருக்கு பாதிப்பு ஏற்படுகிறது. இதற்கு யார் பொறுப்பு?. கடந்த 10 ஆண்டுகளில் அதிகரித்துள்ள ரயில் விபத்துகள் மோடி அரசின் நிர்வாகத் திறமையின்மை மற்றும் அலட்சியப்போக்கின் நேரடி விளைவாகும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், காங்கிரஸ் கட்சி தனது எக்ஸ் தளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளப் பதிவில், “கடந்த 2014 ஆம் ஆண்டு மே 26 ஆம் தேதி கோரக்பூரில் இருந்து ஹிசார் நோக்கிச் சென்ற எக்ஸ்பிரஸ் ரயில், வட இந்தியாவின் கலிலாபாத்தில் உள்ள சுரேப் ரயில் நிலையத்தில் நின்று கொண்டிருந்த சரக்கு ரயில் மீது மோதியதில் 25 பேர் பலியாகினர். மேலும், 50 பேர் காயமடைந்தனர்.
2016 ஆம் ஆண்டு நவம்பர் 20 ஆம் தேதி இந்தூர் - இராஜேந்திர நகர் விரைவு வண்டி இந்தூரிலிருந்து பாட்னாவுக்கு சென்று கொண்டிருந்தபோது அதிகாலை 3 மணி அளவில் தடம்புரண்டதில் சுமார் 150 பேர் உயிரிழந்தனர். மேலும், 150 பேர் காயமடைந்தனர்.
2017 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 23 ஆம் தேதி உத்தரப் பிரதேசத்தில் கைஃபியாத் எக்ஸ்பிரஸின் 9 பெட்டிகள் தடம் புரண்டதில் 70 பேர் காயமடைந்தனர். தில்லி நோக்கிச் செல்லும் கைஃபியத் எக்ஸ்பிரஸின் ஒன்பது பெட்டிகள் அவுரியா மாவட்டத்திற்கு அருகே புதன்கிழமை அதிகாலையில் தடம் புரண்டது.
2017 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 18 அன்று புரி- ஹரித்துவர் செல்லும் ரயில் விபத்துக்குள்ளானதில் 23 பலியாகினர். 60 பேர் காயமடைந்தனர்.
2022 ஆம் ஆண்டு ஜனவரி 13 ஆம் தேதி பைகனேர் - குவாஹத்தி விரைவு ரயில் விபத்துக்குள்ளானதில் 9 பேர் பலியாகினர். 36 பேர் காயமடைந்தனர்.
2023 ஆம் ஆண்டு ஜூன் 2 அன்று, ஒடிசாவின் பாலசோரில் கோரமண்டல் விரைவு ரயில் சிக்னல் கிடைக்காததால் எதிரே நின்று கொண்டிருந்த சரக்கு ரயில் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 290 பேர் உயிரிழந்தனர். 900-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
மேற்கு வங்கத்தின், டார்ஜிலிங் மாவட்டத்தில் உள்ள நியூ ஜல்பைகுரி அருகே கஞ்சன்ஜங்கா விரைவு ரயில் (வண்டி எண்: 13174) மீது பின்னால் வந்த சரக்கு ரயில் மோதி இன்று (ஜூன் 17) விபத்துக்குள்ளானது.
மேலும், இந்த விபத்தில் பலரும் பலியானதாக தகவல்கள் வெளியாகியுள்ளது” எனக் குறிப்பிட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.