வயநாடு தொகுதியில் ராஜிநாமா செய்கிறார் ராகுல் காந்தி!

வயநாடு தொகுதி எம்.பி. பொறுப்பை ராகுல் காந்தி ராஜிநாமா செய்ய முடிவு செய்துள்ளார்.
வயநாடு தொகுதியில் ராஜிநாமா செய்கிறார் ராகுல் காந்தி!
Published on
Updated on
1 min read

வயநாடு தொகுதி எம்.பி. பொறுப்பை ராஜிநாமா செய்ய முடிவு செய்துள்ளார் ராகுல் காந்தி.

காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே இல்லத்தில் அக்கட்சியின் நாடாளுமன்ற குழு தலைவர் சோனியா காந்தி, செயலாளர்கள் பிரியங்கா காந்தி, கே.சி. வேணுகோபால் ஆகியோருடனான ஆலோசனையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

ஆலோசனைக்குப் பிறகு மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.

அப்போது பேசிய மல்லிகார்ஜுன கார்கே,

''மக்களவைத் தேர்தலில் இரு தொகுதிகளில் போட்டியிட்டு ராகுல் காந்தி வெற்றி பெற்றார். விதிமுறைகளின்படி ஒரு தொகுதியை ராஜிநாமா செய்து, மற்றொரு தொகுதியின் பிரதிநிதியாக அவர் தொடர வேண்டும். அதற்கு ஜூன் 18ஆம் தேதி இறுதிநாள். (தேர்தல் முடிவுகள் வெளியாகி 14 நாள்களுக்குள் ஒரு தொகுதியை ராஜிநாமா செய்ய வேண்டும் என்பது விதிமுறை) ரேபரேலி தொகுதியில் ராகுல் காந்தி உறுப்பினராகத் தொடர கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. வயநாடு மக்களின் அன்பையும் அவர் பெற்றுள்ளார். வயநாட்டில் தொடர வேண்டும் என்பதே மக்களின் விருப்பம். ஆனால் சட்டம் அதற்கு இடமளிக்கவில்லை. பலகட்ட ஆலோசனைக்குப் பிறகு வயநாடு தொகுதியில் பிரியங்கா காந்தியை போட்டியிடவைக்க முடிவு செய்துள்ளோம். அவரும் அதற்கு இசைவு தெரிவித்துள்ளார்'' எனப் பேசினார் கார்கே.

அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களுடன் பேசிய ராகுல் காந்தி,

''வயநாடு தொகுதிக்கும் எனக்கும் இடையிலான உறவு உணர்வுப்பூர்வமானது. இந்த முடிவு சுலபமாக எடுக்கப்பட்டதல்ல. வயநாடு மக்களுக்காக தொடர்ந்து உறுதுணையாக நிற்பேன். வயநாடு தொகுதி மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகள் நிறைவேற பாடுபடுவேன்.

வயநாடு தொகுதியில் எனது சகோதரி பிரியங்கா காந்தி போட்டியிடுவார். தேர்தல் போரில் நிச்சயம் அவர் வெற்றி பெறுவார்.

தங்களுக்கு நாடாளுமன்றத்தில் 2 உறுப்பினர்கள் உள்ளதாக வயநாடு மக்கள் நினைக்க வேண்டும். ஒன்று நான். மற்றொருவர் எனது சகோதரி. வயநாடு மக்களுக்காக என் கதவுகள் என்றுமே திறந்திருக்கும்.

கடந்த 5 ஆண்டுகளாக வயநாடு மக்கள் கொடுத்த ஆதரவு, அன்பை மறக்கமாட்டேன். நானாக இருந்தாலும் சரி, எனது சகோதரியாக இருந்தாலும் சரி, வயநாடு மக்களின் உரிமைகளுக்காக தொடர்ந்து குரல் கொடுப்போம்'' எனப் பேசினார்.

வயநாட்டில் பிரியங்கா காந்தி போட்டி

பின்னர் செய்தியாளர்களுடன் பேசிய பிரியங்கா காந்தி, ''வயநாட்டில் போட்டியிடுவது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. வயநாட்டில் கடினமாக உழைத்து, என்னால் முடிந்த வரை மக்கள் பணியாற்றுவேன். ராகுல் காந்தி இல்லாததை வயநாட்டு மக்களை உணர விடமாட்டேன்.

ரேபரேலி, வயநாடு இரண்டு தொகுதிகளிலும் இருவரும் (ராகுல் - பிரியங்கா) பிரதிநிதிகளாக நிற்போம். ரேபரேலி தொகுதியில் எனது சகோதரருக்கு நான் உதவுவேன்'' எனக் குறிப்பிட்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Open in App
Dinamani
www.dinamani.com