
இந்தியாவின் பிரபல பாடகியான அல்கா யாக்னிக், தனக்கு அரிதான செவித்திறன் குறைபாட்டு பிரச்னை ஏற்பட்டுள்ளதாகவும், அதற்கு சிகிச்சை எடுத்து வருவதாகவும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
இந்திய மொழிகள் பலவற்றிலும் பாடியுள்ள 58 வயதான பாடகி அல்கா யாக்னிக், இதுவரை 1,000-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் 9,000-க்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடியுள்ளார்.
பிண்ணனி பாடகியாக 2 தேசிய விருதுகளை வென்றுள்ள அல்கா யாக்னிக், கடந்த 2022-ம் ஆண்டில் 15.3 பில்லியன் யூடியூப் பார்வைகளைப் பெற்று, கின்னஸ் உலக சாதனையில் உலகில் அதிகம் பேரால் கேட்கப்பட்ட பாடகர் என்று அங்கீகரிக்கப்பட்டுள்ளார்.
80,90-களில் மிகப் பிரபலமான ஏக் தோ தீன், சோலி கே பீச்சே க்யா ஹே, தால் சே தால் போன்ற பல பாடல்களைப் பாடியுள்ளார். தமிழில், ஓரம்போ திரைப்படத்தில் ஜி.வி.பிரகாஷ் இசையில் ‘இது என்ன மாயம்’ பாடலைப் பாடியுள்ள இவர், மேலும் சில பாடல்களையும் பாடியுள்ளார்.
இவர் நேற்று இரவு தனது இன்ஸ்டாகிராம் பதிவில், ’நான் சில வாரங்கள் முன்பு விமானத்தில் இருந்து வெளியேறும் போது திடீரென்று என்னால் எதையும் கேட்க முடியவில்லை. சில வாரங்கள் கழித்து கொஞ்சம் தைரியம் வந்ததால் இப்போது இதனை வெளியே சொல்கிறேன்.
எனக்கு வைரஸ் தாக்குதலால் செவிகளில் மிகவும் அரிதான உணர்திறன் நரம்பு பாதிப்பு ஏற்பட்டு கேட்கும் திறன் பாதிக்கப்பட்டுள்ளது என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர். தற்போது அதற்கான சிகிச்சை எடுத்து வருகிறேன்.
எனக்காக நண்பர்கள் மற்றும் ரசிகர்கள் அனைவரும் பிரார்த்தித்துக் கொள்ளுங்கள். உங்களுடைய ஹெட்ஃபோன்களில் இசையை மிக சத்தமாக வைத்துக் கேட்பதைத் தவிர்த்து எச்சரிக்கையுடன் இருங்கள்.
இதனை, உங்களிடம் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். உங்கள் அனைவரின் அன்புடன் நான் என் வாழ்க்கையில் மீண்டு வருவேன்” என்று பதிவிட்டுள்ளார்.
அதிக அளவு சத்தத்தைக் கேட்பது, நோய்த்தொற்று பாதிப்பு, தலையில் அடிபடுதல் அல்லது அதிர்ச்சியடைதல், வயோதிகம் போன்ற காரணிகளால் இந்த அரிய வகை செவி உணர்திறன் நரம்பு பாதிப்பு ஏற்பட வாய்ப்பிருப்பதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.