ரூ.1,749 கோடி: நாளந்தா பல்கலை.யை திறந்து வைத்தார் மோடி

ரூ.1,749 கோடியில் கட்டப்பட்ட நாளந்தா பல்கலை.யை திறந்து வைத்தார் பிரதமர் மோடி
நாளந்தா பல்கலையில் பிரதமர் மோடி
நாளந்தா பல்கலையில் பிரதமர் மோடி
Published on
Updated on
1 min read

நளந்தா: பிகார் மாநிலம் ராஜ்கிர் பகுதியில் ரூ.1,749 கோடியில் மீண்டும் உருவாக்கப்பட்ட நாளந்தா பல்கலைக்கழகத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று நடைபெற்ற விழாவில் திறந்து வைத்தார்.

உலகின் மிகப் பழமையான பல்கலைக்கழகம் என்ற பெருமையைப் பெற்ற நாளந்தா பல்கலைக்கழகம், மீண்டும் உருவாக்கப்பட்டு இன்று திறப்பு விழா கண்டுள்ளது.

பிகார் ஆளுநர் ராஜேந்திர வி. அர்லேகர், முதல்வர் நிதீஷ் குமார், வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் உள்ளிட்டோர் இவ்விழாவில் கலந்து கொண்டனர்.

இந்தப் பல்கலைக்கழகத்துக்கு அருகே, மிகப் பழமையான யுனெஸ்கோவால் உலக பழம்பெருமை வாய்ந்த தளம் என அடையாளம் காணப்பட்டு பாதுகாக்கப்பட்டு வரும் நாளந்தா பல்கலைக்கழகத்தினை பிரதமர் மோடி பார்வையிட்டார்.

ரூ.1,749 கோடியில் இரண்டு வளாகங்களாகக் கட்டப்பட்டிருக்கும் இந்த பல்கலையில் 40 வகுப்பறைகள் உள்ளன. இங்கு 1900 மாணவர்கள் அமர்ந்து கல்வி பயிலலாம். மாணவர் விடுதி, அரங்கம் என சர்வதேச தரத்துடன் இப்பல்கலை கட்டப்பட்டுள்ளது. இந்த கட்டடம் முழுக்க சூரிய ஒளியைப் பயன்படுத்தி மின்சாரம் தயாரிக்கும் திட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்டுள்ளது. இதற்குள் 100 ஏக்கர் பரப்பளவில் நீர்நிலைகள் உள்ளன.

கடந்த ஐந்தாம் நூற்றாண்டில் பல்வேறு கல்விப் பணிகளில் ஈடுபட்ட நாளந்தா பல்கலைக்கழகத்தில், உலகம் முழுவதிலுமிருந்து வந்த மாணவர்கள் கல்வி பயின்றுள்ளனர். 12ம் நூற்றாண்டில், நாட்டுக்குள் படையெடுத்து வந்தவர்களால், இந்தப் பல்கலைக்கழகம் சேதமடைந்தது குறிப்பிடத்தக்கது.

நாளந்தா பல்கலைக்கழக சட்டம் 2010ன்படி, இந்த பல்கலைக்கழகம் உருவாக்கும் பணிகள் தொடங்கின. முதற்கட்டமாக, 2014ஆம் ஆண்டு முதல் குறைவான மாணவர் எண்ணிக்கையில் இப்பல்கலைக்கழகம் செயல்பட்டு வருகிறது.

பண்டைய காலத்தில் கல்வியின் மூலம் உலக நாடுகளை இந்தியாவுடன் இணைக்கும் பாலமாகவும், அடித்தளமாகவும் நாளந்தா பல்கலைக்கழகம் விளங்கியிருக்கிறது. கி.பி.427ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு 12ஆம் நூற்றாண்டு வரை செயல்பட்ட இந்த பல்கலைக்கழகத்துக்கு தற்போது மீண்டும் புத்துயிர் கொடுக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com