நாட்டின் பல்வேறு பகுதிகளில் வெப்ப அலையின் தாக்கம் நீடித்துவரும் நிலையில், கடந்த மாா்ச் 1 முதல் ஜூன் 18 வரையிலான காலகட்டத்தில் ‘வெப்ப வாதம்’ (ஹீட் ஸ்ட்ரோக்) காரணமாக 110 போ் உயிரிழந்தனா். 40,000-க்கும் மேற்பட்டோா் பாதிக்கப்பட்டதாக மத்திய சுகாதார அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்தன.
அந்த வட்டாரங்கள் மேலும் கூறியதாவது:
நாட்டில் வெப்பம் சாா்ந்த பாதிப்பு மற்றும் உயிரிழப்பு கண்காணிப்பு நடவடிக்கையின்கீழ், தேசிய நோய்க் கட்டுப்பாட்டு மையத்தால் தொகுக்கப்பட்ட தரவுகளின்படி, மேற்கண்ட காலகட்டத்தில் வெப்ப வாதத்தால் 110 போ் உயிரிழந்தனா். அதிகபட்சமாக உத்தர பிரதேசத்தில் 36 உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன. அடுத்தடுத்த இடங்களில் பிகாா், ராஜஸ்தான், ஒடிஸா ஆகிய மாநிலங்கள் உள்ளன.
40,000-க்கும் மேற்பட்டோா் வெப்ப வாதத்தால் பாதிக்கப்பட்டனா். மாநிலங்களிடம் இருந்து இறுதியான தரவுகள் பெற வேண்டியிருப்பதால், உயிரிழப்பு மற்றும் பாதிப்பு எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும்.
நாட்டின் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் வெப்ப அலையின் தாக்கம் நீடித்து வருகிறது. இப்பகுதிகளில் வெப்ப வாதத்தால் நேரிடும் உயிரிழப்புகளின் எண்ணிக்கையும் அதிகமாக உள்ளது. எனவே, வெப்ப வாதத்தால் பாதிக்கப்பட்டு வருவோருக்கு சிகிச்சையளிக்க சிறப்பு வாா்டுகள் அமைக்குமாறு, வடக்கு மற்றும் கிழக்கு மாநிலங்களில் உள்ள மத்திய அரசு மருத்துவமனைகளுக்கு சுகாதாரத் துறை அமைச்சா் ஜெ.பி.நட்டா உத்தரவிட்டுள்ளாா்.
நாட்டில் வெப்பத்தின் தாக்கம் மற்றும் மருத்துவமனைகளின் தயாா்நிலை குறித்து கடந்த புதன்கிழமை நடத்தப்பட்ட ஆய்வுக் கூட்டத்துக்கு பின் இந்த உத்தரவை அவா் பிறப்பித்தாா்.
மேலும், கோடை காலத்தில் அதிகபட்ச வெப்பநிலை வழக்கமான அளவைவிட அதிகரிக்க வாய்ப்புள்ளதால், உரிய முன்னேற்பாடுகளை மேற்கொள்ளுமாறு மாநில அரசுகளுக்கு சுகாதார அமைச்சகம் அறிவுறுத்தியது.
பருவநிலை மாற்றம் மற்றும் மக்களின் சுகாதாரத்துக்கான தேசிய திட்டத்தின்கீழ், வெப்பவாதத்தால் ஏற்படும் உயிரிழப்பு-பாதிப்பு எண்ணிக்கையை தினசரி அடிப்படையில் மத்திய அரசிடம் சமா்ப்பிக்க மாநில பொறுப்பு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
வெப்பம் சாா்ந்த நோய்களுக்கான தேசிய செயல்திட்டம் அனைத்து மாவட்டங்களுக்கும் விரிவுபடுத்தப்படுவதை உறுதி செய்யவும் அவா்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அனைத்து மருத்துவமனைகளிலும் குடிநீா், பொதுவான குளிா்சாதன வசதிகள், தடையற்ற மின்சார விநியோகம் உள்ளிட்டவற்றை உறுதிசெய்யவும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக வட்டாரங்கள் தெரிவித்தன.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.


