
புது தில்லி: அமலாக்கத் துறை சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பிணைக்கு எதிரான மனு மீதான விசாரணை முடிவடையும் வரை, தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவாலுக்கு பிணை வழங்கி விசாரணை நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு தில்லி உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.
கலால் ஊழலில் இருந்து உருவான பணமோசடி வழக்கில் தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவாலுக்கு ஜாமீன் வழங்கி தில்லி நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இதனை எதிர்த்து அமலாக்கத் துறை தில்லி உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தது. மனுவை விசாரித்த நீதிமன்றம், கேஜரிவாலுக்கு பிணை வழங்கியதை எதிர்த்து அமலாக்கத் துறை தொடர்ந்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை நிறைவடையும் வரை, பிணை வழங்கி விசாரணை நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதித்துள்ளது.
முன்னதாக, உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய மத்திய ஏஜென்சியை அனுமதிக்கும் வகையில் ஜாமீன் உத்தரவை 48 மணி நேரம் நிறுத்தி வைக்குமாறு அமலாக்க இயக்குநரகத்தின் வேண்டுகோளை சிறப்பு நீதிபதி நியய் பிந்து நிராகரித்தாா். ரூ.1 லட்சம் தனிப்பட்ட பத்திரத்தில் கேஜரிவாலை விடுவிக்க நீதிபதி உத்தரவிட்டிருந்த நிலையில், தில்லி உயர் நீதிமன்றம் இன்று இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
தில்லி அரசின் கலால் கொள்கை தொடர்புடைய பணமோசடி வழக்கில் முதல்வர் கேஜரிவால் அமலாக்கத் துறையால் கடந்த மார்ச் 21-ஆம் தேதி கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார்.
இதனிடையே, கேஜரிவால் மக்களவைத் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட ஜூன் 1-ஆம் தேதி வரை இடைக்கால ஜாமீன் வழங்கி உச்சநீதிமன்றம் கடந்த மே 10-ஆம் தேதி உத்தரவிட்டது. பின்னர், திகார் சிறையிலிருந்து வெளியேவந்த கேஜரிவால், தில்லி, பஞ்சாப், ஹரியாணா, மகாராஷ்டிரா, உத்தரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் தீவிரமாகத் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். தேர்தல் முடிவடைந்த நிலையில், அவர் மீண்டும் சிறையில் சரணடைந்தார். நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் தில்லியில் ஒரு தொகுதியில் கூட ஆம் ஆத்மி வெற்றிபெறவில்லை.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.