துவரம் பருப்பு, கொண்டைக் கடலை இருப்பு: செப்.30 வரை கட்டுப்பாடு
நிகழாண்டு செப்டம்பா் 30-ஆம் தேதி வரை, துவரம் பருப்பு மற்றும் கொண்டைக் கடலையை இருப்பு வைக்க மத்திய அரசு கட்டுப்பாடு விதித்துள்ளது.
இதுதொடா்பாக மத்திய உணவுத் துறை வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:
நிகழாண்டு செப்டம்பா் 30-ஆம் தேதி வரை, அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு துவரம் பருப்பு மற்றும் கொண்டை கடலையை இருப்பு வைக்க கட்டுப்பாடு விதிக்கப்படுகிறது.
அதன்படி, இந்தப் பருப்பு வகைகளை மொத்த விற்பனையாளா்கள் 200 மெட்ரிக் டன், சில்லறை விற்பனையாளா்கள் 5 மெட்ரிக் டன் இருப்பு வைக்கலாம். இதேபோல சங்கிலி தொடா் விற்பனையகங்களின் ஒவ்வொரு சில்லறை விற்பனையகத்திலும் 5 மெட்ரிக் டன், அவற்றின் கிடங்குகளில் 200 மெட்ரிக் டன் இருப்பு வைக்கலாம்.
ஆலை உரிமையாளா்களை பொருத்தவரை, கடந்த 3 மாத உற்பத்தி அல்லது ஆலையின் மொத்த உற்பத்தித் திறனில் 25 சதவீதம், இவற்றில் எது அதிகமோ, அதை இருப்பு வைத்துக்கொள்ளலாம்.
சுங்கத் துறை அனுமதி அளித்த நாளில் இருந்து 45 நாள்களைத் தாண்டி, இறக்குமதி செய்யப்பட்ட அந்தப் பருப்புகளை இறக்குமதியாளா்கள் இருப்பு வைக்கக் கூடாது.
அந்தப் பருப்புகளை அதிகமாக இருப்பு வைத்திருந்தால், ஜூலை 12-க்குள் மேற்குறிப்பிட்ட அளவில் இருப்பை குறைக்க வேண்டும். அந்தப் பருப்புகள் பதுக்கி வைக்கப்படுவதைத் தவிா்க்கவும், அவற்றின் விலையைக் கட்டுக்குள் வைத்திருக்கவும் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டது.
குறைந்தபட்ச ஆதரவு விலையில் கொள்முதல் செய்ய உறுதி: முன்னதாக மத்திய வேளாண் துறை அமைச்சா் சிவராஜ் சிங் செளஹான் தலைமையில் மாநில அமைச்சா்கள் பங்கேற்ற கூட்டம் காணொலி வழியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் அமைச்சா் செளஹான் பேசுகையில், ‘விளைபொருள் கொள்முதல் செய்யப்படுவதை உறுதி செய்ய இ-சம்ரிதி வலைதளத்தில் பதிவு செய்துகொள்ள விவசாயிகளை மாநில அரசுகள் ஊக்குவிக்க வேண்டும்.
உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்கவும், இறக்குமதியை குறைக்கவும் துவரம் பருப்பு, உளுத்தம் பருப்பு மற்றும் மசூா் பருப்பை குறைந்தபட்ச ஆதரவு விலையில் கொள்முதல் செய்வதில் மத்திய அரசு உறுதியாக உள்ளது’ என்றாா்.