
அமராவதி: ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டம், தடேப்பள்ளியில் புதிதாகக் கட்டப்பட்டு வந்த ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகக் கட்டடத்தை சந்திரபாபு நாயுடு தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு இடித்துத் தள்ளியிருப்பதாக கட்சித் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி குற்றம்சாட்டியுள்ளார்.
உயர் நீதிமன்ற உத்தரவை மதிக்காமல், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாகவும் ஜெகன்மோகன் கூறியிருக்கிறார்.
சந்திரபாபு நாயுடு, பழிவாங்கும் அரசியலை அடுத்தக் கட்டத்துக்குக் கொண்டு செல்கிறார். ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகம் கிட்டத்தட்ட கட்டி முடிக்கப்பட்டிருந்த நிலையில், ஒரு சர்வாதிகாரியைப் போல புல்டோசர்களைக் கொண்டு இடித்துதரைமட்டமாக்கியிருக்கிறார்கள் என்றும் அவர் தன்னுடைய எக்ஸ் வலைதளப் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார்.
சனிக்கிழமை காலை 5.30 மணிக்கு அலுவலகக் கட்டடம் இடிக்கப்பட்டுள்ளது.
தலைமை மண்டல மேம்பாட்டுக் கழகத்தின் நடவடிக்கையை எதிர்த்து, ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி சார்பில் வெள்ளிக்கிழமை ஆந்திர மாநில உயர் நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்ட நிலையில், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதகாவும் ஜெகன்மோகன் கூறியிருக்கிறார்.
அலுவலகக் கட்டடப் பகுதியில் எந்த ஒரு இடிப்புப் பணியையும் மேற்கொள்ளக் கூடாது என்று உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது. அந்த உத்தரவின் நகல் சிஆர்டிஏ அதிகாரிகளுக்கு, கட்சியின் வழக்குரைஞர் மூலம் கொடுக்கப்பட்டிருக்கிறது. அனைத்தையும் தாண்டி, கட்டடம் இடிக்கப்பட்டுள்ளது. இது நீதிமன்ற அவமதிப்பாகும் என குறிப்பிட்டுள்ளார்.
சந்திரபாபு நாயுடுவின் அடுத்த ஐந்து ஆண்டு கால ஆட்சி எப்படி இருக்கப்போகிறது என்பதற்கு உதாரணம்தான் இந்த சம்பவம் என்றும், சட்டம் ஒழுங்கு முற்றிலும் கெட்டுவிட்டது என்றும் ஜெகன்மோகன் குற்றம்சாட்டியிருக்கிறார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.