
நீட் பிரச்னை தொடர்பாக நாடாளுமன்றத்தில் குரல் எழுப்ப உள்ளோம் என சுப்ரியா சுலே எம்.பி. தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில், நீட் குளறுபடிகள் இந்திய அரசின் முழுமையான தோல்வி. தொழில்நுட்பத்துடன் ஒவ்வொரு முறை போட்டித் தேர்வு நடக்கும் போது ஏன் இத்தனை குளறுபடிகள் ஏற்படுகின்றன. இந்த பெரிய மைல்கல்லை கடக்க மாணவர்களும் பெற்றோர்களும் மிகவும் கடினமாக உழைக்கிறார்கள்.
அவர்கள் இப்படி ஏமாந்து போகிறார்கள் என்றால், அது மிகவும் துரதிர்ஷ்டவசமானது. நாங்கள் இந்த பிரச்னையை நாடாளுமன்றத்தில் எழுப்ப உள்ளோம். பல விஷயங்களில் அரசு பின்வாங்குகிறது என்றார்.
நிகழாண்டு இளநிலை மருத்துவப் படிப்புக்கான தேசிய தகுதிகாண் நுழைவுத் தோ்வு எனப்படும் நீட் தேர்வை எழுதியவா்களில் 1,500-க்கும் மேற்பட்டோருக்கு அந்தத் தோ்வை நடத்திய தேசிய தோ்வு முகமை (என்டிஏ) தன்னிச்சையாக 70 முதல் 80 மதிப்பெண்கள் வரை கருணை மதிப்பெண்கள் என்ற பெயரில் கூடுதலாக வழங்கியுள்ளது.
நிகழ் கல்வியாண்டில், இளநிலை மருத்துவப் படிப்பு மாணவா்களுக்கான கலந்தாய்வு ஜூலை 6-ஆம் தேதி நடைபெறவுள்ளது.
அதை நிறுத்திவைக்க மறுப்பு தெரிவித்த நீதிமன்ற அமா்வு, வெற்றி பெற்ற மாணவா்களின் சோ்க்கையானது நீட் தோ்வு குளறுபடிகள் சாா்ந்த பிற மனுக்கள் மீதான உத்தரவுக்கு உட்பட்டது எனத் தெரிவித்தது.
நீட் தோ்வு வினாத்தாள் கசிந்ததால் அதை ரத்து செய்வது உள்பட நீட் தோ்வு குளறுபடிகளுக்கு எதிரான பிற மனுக்கள் மீதான விசாரணையை கோடை விடுமுறைக்குப் பின் ஜூலை 8-ஆம் தேதிக்கு ஒத்திவைப்பதாக உச்சநீதிமன்ற அமா்வு தெரிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.