
கர்நாடகத்தின் கோலார் மாவட்டத்தில் உள்ள ராபர்ட்சன்பேட்டையில் பாரத் கோல்ட் மைன்ஸ் நிறுவனத்துடன் இணைக்கப்பட்ட 13 டெய்லிங் டம்ப்களில் பணிகளை தொடரும் மத்திய அரசின் முன்மொழிவுக்கு கர்நாடக அமைச்சரவை வியாழக்கிழமை ஒப்புதல் அளித்துள்ளது.
இந்தநிலையில் மூடிக்கிடந்த நிறுவனத்திடம் இருந்து 2,330 ஏக்கர் நிலத்தை தொழில்துறை நகரமாக மாற்ற கர்நாடக அரசும் கோரிக்கை விடுத்துள்ளது.
கோலார் மாவட்டத்தில் சுரங்கங்கள் மற்றும் கனிமங்கள் ஒழுங்குமுறை மேம்பாடு திருத்தச் சட்டத்தின்கீழ் சிறப்பு அனுமதி தேவை என்று குறிப்பிட்டு, இந்த முடிவுக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் எச்.கே. பாட்டீல் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
இதுகுறித்து அமைச்சர் எச். கே. பாட்டீல் கூறுகையில், “சுரங்கங்கள் மற்றும் கனிமங்கள் ஒழுங்குமுறை மேம்பாடு திருத்தச் சட்டத்தின் பிரிவு 17 ன் கீழ், கோலார் மாவட்டத்தில் உள்ள கோலார் தங்கச் சுரங்கத்தில் 1000 ஏக்கர் பரப்பளவில் 13 டெய்லிங் டம்ப்களில் பணிகளைத் தொடர மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.
1972 ஆம் ஆண்டு சுரங்கத் துறையின் கீழ் நிறுவப்பட்ட பொதுத்துறை நிறுவனமான கோலார் தங்கச் சுரங்க அலுவலகம், 2001 ஆம் ஆண்டில் பொருளாதார சிக்கல் காரணமாக தொழில்துறை மற்றும் நிதி மறுசீரமைப்பு வாரிய ஆணைத்தால் மூடப்பட்டது.
2013 ஆம் ஆண்டில் உலகளாவிய டெண்டரை வெளியிட உச்ச நீதிமன்றம் மத்திய அரசுக்கு அனுமதி அளித்த பிறகு, உள்நாட்டு தங்க உற்பத்தியை அதிகரிக்கும் நோக்கில், 2015 ஆம் ஆண்டில் பாரத் கோல்ட் மைன்ஸ் உள்பட பழைய சுரங்கங்களை புதுப்பிக்க முடிவு செய்தது.
2020 ஆம் ஆண்டில், மினரல் எக்ஸ்ப்ளோரேஷன் கார்ப்பரேஷன் நிறுவனம், பாரத் கோல்ட் மைன்ஸ் நிலத்தில் இயற்கை கனிமங்களை ஆராயத் தொடங்கியது. இதன் மூலம், கனிமங்கள் அல்லாத பகுதிகளை அடையாளம் கண்டு, கர்நாடக அரசுக்கு அந்த இடத்தில் 3,000 ஏக்கர் தொழில் பூங்காவை உருவாக்க திட்டமிட்டது.
இந்த தங்கச் சுரங்கத்தை மீண்டும் திறப்பதன் மூலம் வேலைவாய்ப்புகளை உருவாக்கலாம். மேலும், அந்தப்பகுதியில் தொழில் நகரம் அமைப்பதற்காக 2330 ஏக்கர் நிலத்தை மாநில அரசு சுரங்க நிர்வாகத்திடம் கேட்டுள்ளது.
2022 - 2023 ஆம் ஆண்டு வரை பாரத் கோல்ட் மைன்ஸ் நிறுவனம் கர்நாடக அரசுக்கு ரூ.75,24,88,025 நிலுவைத் தொகையாக செலுத்த வேண்டும். நிலத்திற்கான தொகையை இந்திய அரசிடம் கோரப்பட்டுள்ளது” என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.