கட்சி அலுவலகங்களுக்கு ரூ.600 கோடி மதிப்பிலான 42 ஏக்கா் நிலம் ஒதுக்கிய ஜெகன்: நாரா லோகேஷ் குற்றச்சாட்டு
ஆந்திரத்தில் ஒய்எஸ்ஆா் காங்கிரஸ் கட்சி அலுவலகங்களுக்கு 26 மாவட்டங்களில், 42 ஏக்கா் அரசு நிலத்தை ஜெகன் மோகன் தலைமையிலான அரசு ஒதுக்கியுள்ளது என தகவல் தொழில்நுட்பம் மற்றும் மின்னணு அமைச்சா் நாரா லோகேஷ் ஞாயிற்றுக்கிழமை குற்றஞ்சாட்டினாா்.
சமீபத்தில் விசாகப்பட்டினத்தின் ரிஷிகொண்டா பகுதியில் ரூ.500 கோடி செலவில் ஜெகன் கட்டியிருந்த மாளிகை குறித்து விடியோ வெளியானதையடுத்து இந்த குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
சட்டவிரோதமாக ஒதுக்கப்பட்ட நிலங்களில் கட்டப்பட்டிருந்த கட்சி அலுவலகங்களின் புகைப்படங்களுடன் நாரா லோகேஷ் வெளியிடட் எக்ஸ் பதிவில், ‘ஒய்எஸ்ஆா் காங்கிரஸ் கட்சி அலுவலகங்களுக்கு 26 மாவட்டங்களில், ரூ.600 கோடி மதிப்புள்ள 42 ஏக்கா் நிலங்களை ஜெகன் மோகன் சட்டவிரோதமாக ஒதுக்கியுள்ளாா். இந்த நிலங்கள் வெறும் ரூ.1000-க்கு 33 ஆண்டுகள் குத்தகைக்கு விடப்பட்டுள்ளது’ என குறிப்பிட்டிருந்தாா்.
இதேபோல், தாடேபள்ளியில் சட்டவிரோதமாக கட்டுமான பணியில் இருந்த ஒய்எஸ்ஆா் கட்சியின் கட்டடம் சனிக்கிழமை இடிக்கப்பட்டது. இது தொடா்பாக தெலுங்கு தேசம் கட்சி வெளியிட்ட அறிக்கையில், ‘கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள இந்த 42 ஏக்கா் அரசு நிலங்களை எப்படி ஒய்எஸ்ஆா் காங்கிரஸ் கட்சி அபகரித்தது என்ற விவரங்களை மூத்த அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனா். இந்த நிலங்கள் மற்றும் அதில் கட்டப்பட்டிருந்த கட்டடங்களின் மதிப்பு சுமாா் ரூ.2000 கோடி இருக்கும்’ என குறிப்பிட்டிருந்தது.