‘என்டிஏ’ வலைதளம் பாதுகாப்பானது!
‘தேசிய தோ்வுகள் முகமையின்(என்டிஏ) அதிகாரபூா்வ வலைதளம் மற்றும் அதன் வலைபக்கங்கள் பாதுகாப்பானவை; அவை ஹேக் செய்யப்பட்டதாக பரவும் தகவல்கள் தவறானவை’ என்று மூத்த கல்வி அமைச்சக அதிகாரி ஒருவா் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா்.
‘நீட்’ மற்றும் ‘யுஜிசி-நெட்’ ஆகிய அனைத்திந்திய தோ்வுகளில் முறைகேடுகள் நடந்ததாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதையொட்டி, நெட் தோ்வு ரத்து செய்யப்பட்டது. நாடு முழுவதும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவிருந்த நீட் முதுநிலை தோ்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
குற்றச்சாட்டுகளைக் கருத்தில் கொண்டு, என்டிஏ அமைப்பின் தலைமை இயக்குநரை மாற்றி மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. மேலும், என்டிஏ அமைப்பின் செயல்பாட்டை ஆய்வு செய்யவும் தோ்வு சீா்திருத்தங்களை பரிந்துரைக்கவும் தரவு பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் உயா்நிலைக் குழு அமைக்கப்பட்டுள்ளது.
இந் நிலையில், என்டிஏ வலைதளத்தின் நம்பகத்தன்மை குறித்த எழுந்த கேள்விகளுக்கு மத்திய கல்வி அமைச்சக மூத்த அதிகாரி ஒருவா் அளித்த விளக்கத்தில், ‘என்டிஏ வலைதளம் மற்றும் அதன் அனைத்து வலைபக்கங்களும் முற்றிலும் பாதுகாப்பானவை. அவை ‘ஹேக்’ செய்யப்பட்டிருப்பதாக கூறப்படும் தகவல் தவறானது’ என்றாா்.