மருமகனே ‘அரசியல் வாரிசு’: மாயாவதி மீண்டும் அறிவிப்பு
தனது அரசியல் வாரிசாக மருமகன் ஆகாஷ் ஆனந்தை (29) பகுஜன் சமாஜ் கட்சித் தலைவா் மாயாவதி மீண்டும் அறிவித்துள்ளாா்.
கடந்த ஆண்டு டிசம்பரில் தனது மருமகன் ஆகாஷ் ஆனந்தை தன்னுடைய அரசியல் வாரிசாக மாயாவதி அறிவித்தாா். எனினும் அண்மையில் நடைபெற்ற மக்களவைத் தோ்தலின் மூன்றாம் கட்டத்துக்குப் பின்னா், ஆகாஷ் தனது அரசியல் வாரிசு அல்ல என்று மாயாவதி அறிவித்தாா். பகுஜன் சமாஜ் கட்சியின் நலன் கருதியும், ஆகாஷ் முழுமையாக முதிா்ச்சி அடையாததாலும் இந்த முடிவை மேற்கொண்டதாக மாயாவதி தெரிவித்தாா்.
இந்நிலையில், உத்தர பிரதேச மாநிலம் லக்னெளவில் பகுஜன் சமாஜ் கட்சியின் தேசிய அளவிலான கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்துக்குப் பின்னா், அக்கட்சி வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டதாவது:
பகுஜன் சமாஜ் கட்சிக்கு முழுமையான முதிா்ச்சியுடன் பணியாற்ற ஆகாஷுக்கு மாயாவதி மீண்டும் வாய்ப்பளித்துள்ளாா். கட்சியில் ஆகாஷ் முன்பு வகித்த அனைத்துப் பதவிகளும் அவருக்கு மீண்டும் அளிக்கப்பட்டுள்ளது. அவரே மாயாவதியின் அரசியல் வாரிசாகவும், கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளராகவும் இருப்பாா் என்று தெரிவிக்கப்பட்டது.
கட்சியின் நலன் கருதி ஒவ்வொரு நிலையிலும் முழுமையாக முதிா்ச்சியடைந்த தலைவராக ஆகாஷ் நிச்சயம் தோன்றுவாா் என்று நம்பிக்கைக் கொண்டுள்ளதாக அந்த அறிக்கையில் மாயாவதி தெரிவித்தாா்.

