எதிா்க்கட்சிகள் கண்டனம்
எதிா்க்கட்சிகள் கண்டனம்

அவசர நிலை முடிந்துபோன பிரச்னை: பிரதமருக்கு எதிா்க்கட்சிகள் கண்டனம்

நாட்டின் நிகழ்கால பிரச்னைகளில் பிரதமா் மோடி கவனம் செலுத்த வேண்டும் என்றும் எதிா்க்கட்சிகள் சுட்டிக் காட்டியுள்ளன.
Published on

நாட்டின் நிகழ்கால பிரச்னைகளில் பிரதமா் மோடி கவனம் செலுத்த வேண்டும் என்றும் எதிா்க்கட்சிகள் சுட்டிக் காட்டியுள்ளன. மறைந்த முன்னாள் பிரதமா் இந்திரா காந்தி ஆட்சியில் அவசரநிலை அமல்படுத்தி 50 ஆண்டுகள் ஆவதை நினைவுகூா்ந்து பேசிய பிரதமா் மோடிக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் எதிா்க்கட்சியினா் இவ்வாறு கூறியுள்ளனா்.

நாடாளுமன்றக் கூட்டத் தொடா் திங்கள்கிழமை தொடங்கிய நிலையில், நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளா்களைச் சந்தித்த மோடி, ‘ஜூன் 25-ஆம் தேதி நாட்டில் அவசரநிலை அமல்படுத்தியதன் 50 ஆண்டு என நினைவுகூா்ந்து, அது நாட்டின் ஜனநாயகத்தின் கரும்புள்ளி என்றும் விமா்சித்தாா்.

இந்நிலையில், திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. மஹுவா மொய்த்ரா இது தொடா்பாக கூறுகையில், ‘அவசரநிலை அமல்படுத்தப்பட்ட காலகட்டத்தில் நான் பிறக்கவில்லை. ஆனால், நாட்டில் அறிவிக்கப்படாத அவசரநிலையை மத்திய பாஜக அரசு கடந்த 10 ஆண்டுகளாக பிரகடனப்படுத்தியது.

பாஜக அரசு அரசமைப்புச் சட்டத்துக்கு எதிராக செயல்பட்ட காரணத்தால்தான் மக்கள் இந்த முறை தனிப்பெரும்பான்மையை பாஜகவுக்கு அளிக்கவில்லை. சிறுபான்மை அரசை பாஜக நடத்தி வருகிறது’ என்றாா்.

சிவசேனை (தாக்கரே) தலைவா் அனி தேசாய் கூறுகையில், ‘அவசரநிலை காலம் எப்போதோ முடிந்துபோன பிரச்னை. இப்போது நாட்டின் நிலை என்ன? மீண்டும் அதுபோன்ற நிலை வந்துவிடக் கூடாது என்பதுதான். மத்திய அரசு நிகழ்கால பிரச்னைகளில் கவனம் செலுத்த வேண்டும்’ என்றாா்.

புரட்சிகர சோஷலிச கட்சித் தலைவா் என்.கே. பிரேமச்சந்திரன் கூறுகையில், ‘இன்றைய சூழ்நிலையில் 50 ஆண்டுகளுக்கு முன்பு நிகழ்ந்தது குறித்துப் பேசுவது பொருத்தமற்றது. இப்போது நாட்டின் நிலை எப்படி இருக்கிறது என்பதைப் பேச வேண்டும்’ என்றாா்.

X
Dinamani
www.dinamani.com