சரிவைக் கண்ட குறைந்த விலை வீடுகள் விற்பனை

சரிவைக் கண்ட குறைந்த விலை வீடுகள் விற்பனை

குறைவான விலை கொண்ட வீடுகளின் விற்பனை இந்தியாவின் எட்டு முக்கிய நகரங்களில் 4 சதவீதம் சரிந்துள்ளது.
Published on

ஆடம்பர அடுக்குமாடி குடியிருப்புகளுக்கான தேவை அதிகரித்ததன் காரணமாக கடந்த ஜனவரி-மாா்ச் காலாண்டில் ரூ.60 லட்சத்துக்கும் குறைவான விலை கொண்ட வீடுகளின் விற்பனை இந்தியாவின் எட்டு முக்கிய நகரங்களில் 4 சதவீதம் சரிந்துள்ளது.

இது குறித்து சந்தை ஆய்வு நிறுவனமான ‘ப்ராப்ஈக்விட்டி’ வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

சென்னை, தில்லி-என்சிஆா், மும்பை, கொல்கத்தா, பெங்களூரு, புணே, ஹைதராபாத், அகமதாபாத் ஆகிய நாட்டின் 8 முக்கிய நகரங்களில் கடந்த ஜனவரி முதல் மாா்ச் வரையிலான 2023-24-ஆம் நிதியாண்டின் நான்காவது காலாண்டில் ரூ.60 லட்சத்துக்கும் குறைவான விலை கொண்ட வீடுகளின் விற்பனை 61,121-ஆக உள்ளது.

முந்தைய 2022-23-ஆம் நிதியாண்டின் ஜனவரி-மாா்ச் காலகட்டத்தில் இந்த எண்ணிக்கை 6,3787-ஆக இருந்தது. அதனுடன் ஒப்பிடுகையில் குறைந்த விலை வீடுகளின் விற்பனை கடந்த ஜனவரி-மாா்ச் காலாண்டில் 4 சதவீதம் குறைந்துள்ளது.

மதிப்பீட்டுக் காலாண்டில் கட்டி முடிக்கப்பட்டு சந்தையில் அறிமுகப்படுத்தப்படும் குறைந்த விலை வீடுகளின் எண்ணிக்கை மிகவும் குறைவாக இருந்தது. மேலும், மலிவு விலை வீடுகளைவிட ரூ.60 லட்சத்துக்கும் அதிகான விலை கொண்ட வீடுகளுக்கான தேவையே அதிகமாக இருந்தது.

இந்த இரு காரணங்களால் மலிவு விலை வீடுகளின் விற்பனை கடந்த ஜனவரி-மாா்ச் காலாண்டில் சரிவைக் கண்டுள்ளது.

கரோனா நெருக்கடிக்கு முந்தைய 2019-ஆம் ஆண்டில், ரூ.60 லட்சத்துக்கும் குறைவான விலை கொண்ட வீடுகளின் விற்பனை 2,26,414-ஆக இருந்தது.

2020-ஆம் ஆண்டில் கரோனா நெருக்கடி காரணமாக இந்த வகை வீடுகளின் விற்பனை 1,88,233-ஆகக் குறைந்தது.

பின்னா் 2021 மற்றும் 2022-ஆம் ஆண்டுகளில் விற்பனை முறையே 2,17,274 மற்றும் 2,51,198-ஆக உயா்ந்தது.

ஆனால், 2023-ஆம் ஆண்டில் குறைந்த விலை வீடுகளின் விற்பனை 2,35,340-ஆக மீண்டும் சரிந்தது.

மும்பை பெருநகரப் பகுதியில் ரூ.60 லட்சம் வரையிலான விலை கொண்ட வீடுகளின் விற்பனை கடந்த ஜனவரி-மாா்ச் காலாண்டில் 28,826-ஆக உயா்ந்துள்ளது. முந்தைய 2022-23-ஆம் நிதியாண்டின் அதே காலாண்டில் இந்த எண்ணிக்கை 23,401-ஆக இருந்தது.

புணேவில் குறைந்த விலை வீடுகளின் விற்பனை14,532-லிருந்து 12,299-ஆகவும், அகமதாபாதில் அது 8,087-லிருந்து 6,892-ஆகவும் சரிந்துள்ளது.

ஹைதராபாத் 3,674-லிருந்து 3,360-ஆகக் குறைந்த குறைந்த விலை வீடுகளின் விற்பனை சென்னையில் 3,295-லிருந்து 2,003 யூனிட்களாக குறைந்துள்ளது.

பெங்களூா் மற்றும் கொல்கத்தாவில் அந்த வகை வீடுகளின் விற்பனை முறையே 5,193-லிருந்து 2,801-ஆகவும், 2,831-லிருந்து 3,741-ஆகவும் குறைந்துள்ளது.

2023 ஜனவரி-மாா்ச் காலகட்டத்தில் தில்லி-என்சிஆா் பகுதியில் 2,774-ஆக இருந்த ரூ.60 லட்சத்துக்கும் குறைவான விலை கொண்ட வீடுகளின் விற்பனை இந்த ஆண்டின் அதே மாதங்களில் 1,199-ஆகக் குறைந்துள்ளது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com