விண்வெளியிலிருந்து செயற்கைக் கோள் எடுத்த ராமர் சேது பாலத்தின் புகைப்படம்

விண்வெளியிலிருந்து ராமர் சேது பாலத்தின் புகைப்படம்.. செயற்கைக் கோள் மூலம் எடுக்கப்பட்டது.
ESA photo - ஐரோப்பிய விண்வெளி மையத்தின் செயற்கைக்கோள் எடுத்த ராமர் சேது புகைப்படம்
ESA photo - ஐரோப்பிய விண்வெளி மையத்தின் செயற்கைக்கோள் எடுத்த ராமர் சேது புகைப்படம் Courtesy: ESA
Published on
Updated on
1 min read

இந்தியா - இலங்கை இடையே அமைந்துள்ள ராமர் சேது பாலத்தை, விண்வெளியிலிருந்து செயற்கைக்கோள் மூலம் எடுக்கப்பட்ட புகைப்படத்தை ஐரோப்பிய விண்வெளி மையம் பகிர்ந்துள்ளது.

ஆதாம் பாலம் என்று அழைக்கப்படும் ராமர் சேது பாலத்தை ஐரோப்பிய விண்வெளி ஆய்வு மையத்தின் கோப்பர்நிக்கஸ் சென்டினெல் - 2 செயற்கைக்கோள் புகைப்படம் எடுத்து ஆய்வு மையத்துக்கு அனுப்பியிருக்கிறது.

இந்தியா - இலங்கை இடையே, கடலுக்கடியில் 48 கிலோ மீட்டர் தொலைவுக்கு, இந்தியாவின் தென்கிழக்குத் தீவுப்பகுதியான ராமேஸ்வரம் தீவிலிருந்து, இலங்கையின் மன்னார் தீவுப்பகுதிக்கு இடையே பாறை மற்றும் மணல் அமைப்பு ஒன்று பாலம் போல அமைந்துள்ளது. இது ராமர் சேது பாலம் அல்லது ஆதாம் பாலம் என அழைக்கப்படுகிறது. மன்னார் வளைகுடாவை இரண்டாகப் பிரிக்கும் வகையில், தெற்குப் பகுதியில் அமைந்துள்ள இந்தியப் பெருங்கடலின் நுழைவு வாயிலைப் போன்று இப்பாலம் அமைந்துள்ளது.

இந்த பாலத்தின் பின்னணியில் பல நெடுங்கதைகள் கூறப்பட்டு வருகின்றன. இந்தியா - இலங்கை இடையேயான தரைப்பகுதியை சுண்ணாம்புப் பாறைகளைக் கொண்டு இணைக்கப்பட்டிருந்த அமைப்பின் எச்சங்கள் இவை என்றும் புவியியல் ஆய்வுகள் எடுத்துரைக்கின்றன.

வரலாற்று பதிவுகளின்படி, இந்த இயற்கையாக அமையப்பெற்ற பாலத்தின் வழியாக 15ஆம் நூற்றாண்டு வரை மக்கள் பயணம் செய்திருக்கிறார்கள் என்றும், அடுத்தடுத்த காலங்களில் ஏற்பட்ட இயற்கைப் பேரழிவுகளால் பாலம் சேதமடைந்து, பயன்படுத்த முடியாத நிலைக்குச் சென்றிருப்பதாகவும் ஐரோப்பிய விண்வெளி மையம் குறிப்பிட்டுள்ளது.

ஐரோப்பிய விண்வெளி மையம் மேலும் தெரிவித்திருப்பதாவது, ராமர் சேது பாலத்தில் இருக்கும் மண் அமைப்புகள் உலர்ந்து காணப்படுவதாகவும், இப்பகுதியில் கடற்பகுதி ஆழமற்று இருப்பதாாகவும் இங்கு கடலின் ஆழமே ஒன்று முதல் 10 மீட்டர் வரைதான், அதுவும் தெளிவான நீரோட்டத்தின்போது, கடல் ஆழம் தெளிவாகத் தெரிவதாகவும் சொல்லியிருக்கிறது.

130 சதுர கிலோ மீட்டர் பரப்பைக் கொண்டிருக்கும் மன்னார் தீவுப்பகுதி, இலங்கையின் முக்கிய நிலப்பரப்புடன் சாலை மேம்பாலம் மற்றும் ரயில் மேம்பாலம் மூலம் இணைக்கப்பட்டிருக்கிறது. இது அந்தத் தீவின் தெற்குமுனையிலிருந்து கண்கூடாகத் தெரிகிறது.

இந்தியப் பக்கத்தில், ஆதாம் பாலம் என்று அழைக்கப்படும் ராமர் சேது பாலம் இணைந்திருக்கும் ராமேஸ்வரம் தீவுப்பகுதியும் பாம்பன் பாலம் என அழைக்கப்படும் 2 கிலோ மீட்டர் தொலைவு கொண்ட பாலத்தின் மூலம் இந்தியாவின் முக்கிய நிலப்பரப்புடன் இணைக்கப்பட்டுள்ளது. இந்த தீவின் இரண்டு பெரிய நகரப்பகுதிகளில் ஒன்று பாம்பன், மற்றொன்று மேற்குத் திசையில் அமைந்திருக்கும் ராமேஸ்வரம்.

ஆதாம் பாலம் அமைந்திருக்கும் பகுதியை பாதுகாப்பதில், இருநாடுகளுமே முக்கியத்துவம் அளித்து வருகின்றன. அது மட்டுமல்லாமல், இந்த மணல் திட்டுக்களைக் கொண்ட பாலம் போன்ற அமைப்பு, அப்பகுதியைக் கடக்கும் பறவைகளுக்கு இனப்பெருக்கப் பகுதியாகவும் அமைந்துள்ளது. இது, திமிங்கலம், ஆமை என பல கடல்வாழ் உயிரினங்களின் இருப்பிடமாகவும் உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com