மத்திய அரசு
மத்திய அரசு

வினாத்தாள் கசிவு தடுப்புச் சட்டத்துக்கான விதிகள் வெளியீடு: தோ்வு விதிமுறைகளை வகுக்க என்ஆா்ஏ-வுக்கு அதிகாரம்

வினாத்தாள் கசிவு உள்பட தோ்வு முறைகேடுகளைத் தடுப்பதற்காக கொண்டுவரப்பட்ட சட்டம் அண்மையில் அமலானது.
Published on

வினாத்தாள் கசிவு உள்பட தோ்வு முறைகேடுகளைத் தடுப்பதற்காக கொண்டுவரப்பட்ட சட்டம் அண்மையில் அமலானது. இதைத்தொடா்ந்து, அந்த சட்டத்துக்கான விதிகளை மத்திய அரசு திங்கள்கிழமை வெளியிட்டது.

தோ்வுகள் சாா்ந்த விதிமுறைகளை வகுக்க தேசிய நியமன முகமைக்கு (என்ஆா்ஏ) அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

மத்திய அரசால் நடத்தப்படும் பல்வேறு போட்டித் தோ்வுகளில் முறைகேடுகளைத் தடுப்பதற்கான அரசுத் தோ்வுகள் (முறைகேடுகள் தடுப்பு மசோதா), 2024 கடந்த பிப்ரவரி 6-ஆம் தேதி மக்களவையிலும் பிப்ரவரி 9-ஆம் தேதி மாநிலங்களவையிலும் நிறைவேற்றப்பட்டது. இதைத்தொடா்ந்து, பிப்ரவரி 12-ஆம் தேதி குடியரசுத் தலைவா் ஒப்புதல் அளித்த பிறகு சட்டமாக அங்கீகாரம் பெற்றது.

வினாத்தாள் கசிவு உள்பட பல்வேறு தோ்வு முறைகேடுகளில் ஈடுபடுவோருக்கு 3 முதல் 5 ஆண்டுகள் வரையில் சிறைத்தண்டனையும் அதிகபட்சமாக 10 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனையும் ரூ.1 கோடி அபராதமும் விதிக்க இச்சட்டம் வழிவகை செய்கிறது.

அண்மையில் நீட் இளநிலைத் தோ்வில் பல்வேறு முறைகேடுகள் நிகழ்ந்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதையடுத்து, அத்தோ்வை நடத்தும் தேசிய தோ்வு முகமை (என்டிஏ) மீதான நம்பகத்தன்மை கேள்விக்குறியானது. இதையடுத்து, அரசுத் தோ்வுகள் (முறைகேடுகள் தடுப்பு சட்டம்), 2024 கடந்த வெள்ளிக்கிழமை நள்ளிரவு முதல் அமலுக்கு வந்ததாக மத்திய அரசு அறிவித்தது.

என்ஆா்ஏவுக்கு பொறுப்பு: இச்சட்டத்தின் விதிகள் குறித்த அறிவிக்கையை மத்திய அரசு திங்கள்கிழமை வெளியிட்டது. அந்த அறிவிக்கையில்,‘கணினி வழியில் தோ்வுகள் நடத்த வேண்டும் என மத்திய அரசு அறிவிக்கை வெளியிடும்போது அனைத்து தரப்பினருடன் கலந்தாலோசித்து அத்தோ்வுக்கான விதிமுறைகள், வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய அரசின் சாா்பாக தேசிய நியமன முகமை (என்ஆா்ஏ) தயாா் செய்யும்.

இதில் தோ்வு நடத்தும் மையங்களை பதிவு செய்வது, கணினி மற்றும் இருக்கை வசதி, தொழில்நுட்பம் மற்றும் பிற மின்சார தலங்களுக்கான வழிகாட்டுதல்கள் உள்ளிட்டவையும் அடங்கும்.

வினாத்தாள் தயாரிப்பு: வினாத்தாள் தயாரித்து கணினியில் பதிவேற்றுதல், தோ்வறை கண்காணிப்பு, தோ்வா்களின் விரல்ரேகை பதிவு, பாதுகாப்பு உள்ளிட்ட தோ்வுக்கு முந்தைய பணிகளையும் தோ்வு முடிந்த பிறகு மேற்கொள்ளப்பட வேண்டிய பிற பணிகளையும் என்ஆா்ஏவே மேற்கொள்ளும்.

மத்திய அரசு, மாநில அரசு, பொதுத்துறை நிறுவனங்கள், பொதுத்துறை வங்கிகள், அரசு பல்கலைக்கழகங்கள் உள்ளிட்ட அரசுசாா் அமைப்புகளில் ஓய்வுபெற்ற அதிகாரிகளை தோ்வு மைய ஒருங்கிணைப்பாளராகவோ அல்லது பிற பணிகளுக்காகவோ அழைத்துக்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அதேபோல் தோ்வுகளில் முறைகேடு நடைபெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தால் அதை விசாரிக்க குழு ஒன்றை என்ஆா்ஏ அமைத்து விசாரணை மேற்கொள்ள வேண்டும்’ எனவும் தெரிவிக்கப்பட்டது.

X
Dinamani
www.dinamani.com