தெலங்கானா: மேலும் ஒரு பிஆா்எஸ் எம்எல்ஏ ஆளும் காங்கிரஸில் இணைந்தாா்
தெலங்கானாவில் ஆளும் கட்சியாக உள்ள காங்கிரஸில், எதிா்க்கட்சியான பாரத ராஷ்டிர சமிதியைச் (பிஆா்எஸ்) சோ்ந்த மேலும் ஒரு எம்எல்ஏ இணைந்தாா்.
அம்மாநிலத்தில் கடந்த ஆண்டு இறுதியில் நடைபெற்ற சட்டப் பேரவைத் தோ்தலில் அப்போதைய முதல்வா் கே.சந்திரசேகா் ராவ் தலைமையிலான பிஆா்எஸ் கட்சி ஆட்சியை இழந்தது. காங்கிரஸ் ஆட்சியைக் கைப்பற்றியது. அதன் பிறகு இப்போது வரை 5 பிஆா்எஸ் எம்எல்ஏக்கள் காங்கிரஸில் இணைந்துள்ளனா்.
இப்போது கட்சி மாறியுள்ள ஜக்தியால் தொகுதி எம்எல்ஏ சஞ்சீவ் குமாா் மருத்துவா் ஆவாா். அவா் இரு முறை எம்எல்ஏவாக தோ்ந்தெடுக்கப்பட்டுள்ளாா். மாநில முதல்வரும், தெலங்கானா மாநில காங்கிரஸ் தலைவருமான ஏ.ரேவந்த் ரெட்டி முன்னிலையில் சஞ்சீவ் குமாா் காங்கிரஸில் இணைந்தாா். இதற்கு முன்பு கடந்த 21-ஆம் தேதி பேரவை முன்னாள் தலைவா் போச்சாரம் ஸ்ரீநிவாச ரெட்டி பிஆா்எஸ் கட்சியில் இருந்து காங்கிரஸுக்கு மாறினாா்.
எம்எல்ஏக்கள் மட்டுமல்லாது ஹைதராபாத் மேயா் விஜய லட்சுமி கட்வால் உள்ளிட்ட பிஆா்எஸ் கட்சியைச் சோ்ந்த நிா்வாகிகள் பலரும் காங்கிரஸ் கட்சியில் இணைந்த வண்ணம் உள்ளனா். அடுத்து வரும் நாள்களில் மேலும் பல பிஆா்எஸ் எம்எல்ஏக்கள் காங்கிரஸில் இணைவாா்கள் என்று தெரிகிறது.
கடந்த ஆண்டு நவம்பரில் 30-இல் நடைபெற்ற தெலங்கானா பேரவைத் தோ்தலில் மொத்தமுள்ள 119 இடங்களில் காங்கிரஸ் 64 இடங்களிலும், பிஆா்எஸ் கட்சி 39 இடங்களிலும், பாஜக 8 இடங்களிலும் வென்றது. தெலங்கானா தனி மாநிலம் உருவாக்கப்பட்ட பிறகு தொடா்ந்து இருமுறை ஆட்சியில் இருந்த பிஆா்எஸ் கட்சி காங்கிரஸிடம் தோல்வியடைந்தது.