ராஜ்நாத் சிங் - சிவ்ராஜ் சிங்
ராஜ்நாத் சிங் - சிவ்ராஜ் சிங்

பாரதிய ஜனதாவின் புதிய தலைவர் யார்? ஆர்எஸ்எஸ் ஒரு பக்கம், அமித் - மோடி இன்னொரு பக்கம்!

பாரதிய ஜனதா கட்சித் தலைவர் பதவிக்கான போட்டி சூடுபிடித்துள்ளது.

பாரதிய ஜனதாவின் புதிய தலைவர் யார்? - ஆர்.எஸ்.எஸ். ஒரு பக்கமும் அமித் - மோடி இன்னொரு பக்கமும் அணி திரண்டிருப்பதாகக் கருதப்படுவதால் முடிவை அறிவதில் ஆர்வமாக இருக்கின்றனர் அனைவரும்.

உலகின் மிகப் பெரிய கட்சியான பாஜகவின் தலைவர் பதவிக்கான போட்டி விறுவிறுப்படைந்துள்ளது. தற்போதைய கட்சித் தலைவர் ஜே.பி. நட்டாவின் பதவிக் காலம் இன்னும் ஒரு வாரத்தில் - ஜூன் 30 ஆம் தேதியுடன் நிறைவடைகிறது.

அனைவரும் ஏற்றுக்கொள்ளும்படியான ஒருவரைத் தலைவர் பதவிக்குத் தெரிவு செய்வது தொடர்பாக ஆர்எஸ்எஸ் உடன் தொடர்ந்து பேசிக்கொண்டிருக்கிறது கட்சித் தலைமை.

தற்போது மத்திய அமைச்சர்களாக இருக்கும் ராஜ்நாத் சிங் அல்லது சிவ்ராஜ் சிங் சௌகான் ஆகிய இருவரில் ஒருவரைத் தெரிவு செய்யலாம் என்று ஆர்எஸ்எஸ் தலைமை குறிப்பாகத் தெரிவித்திருப்பதாகத் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அதாவது, இவ்விரு மத்திய அமைச்சர்களில் ஒருவர் தனது பதவியை ராஜிநாமா செய்துவிட்டு, கட்சித் தலைமைப் பதவியை ஏற்க வேண்டும் என்று சங் பரிவார் தலைமை விரும்புவதாகக் கூறப்படுகிறது.

ஆனால், பிரதமர் நரேந்திர மோடியும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவும், இவ்விரு மத்திய அமைச்சர்களில் யாரையும் விட்டுக் கொடுக்க விரும்பவில்லை என்று தெரிகிறது. மேலும், தலைமைப் பொறுப்புக்கு சிறப்பாகக் கட்சிப் பணியாற்றுகிற, கட்சியிலிருந்தே திறமைவாய்ந்த ஒருவரைக் கொண்டுவர வேண்டும் என்றும் கருதுகிறார்கள்.

தற்போது கட்சியின் தேசிய பொதுச் செயலாளர்களாக இருக்கும் வினோத் தாவ்டே அல்லது சுநீல் பன்சால் ஆகியோரில் ஒருவரைத் தலைமைப் பதவிக்குக் கொண்டுவர வேண்டும் என்பதாக மோடியும் அமித் ஷாவும் கருதுகின்றனர்.

நட்டா - வினோத் தாவ்டே - சுநீல் பன்சால்
நட்டா - வினோத் தாவ்டே - சுநீல் பன்சால்

வினோத் மற்றும் சுநீல் இருவருமே தங்களது திறமையை கட்சியின் வளர்ச்சியில் நிரூபித்திருப்பதும், இவர்களில் ஒருவர் கட்சித் தலைமைக்குப் பொருத்தமாக இருப்பார்கள் என்பதும் அமித் ஷா - மோடி ஆகியோரின் எண்ணம். இவர்களில் ஒருவரைக் கட்சித் தலைமைப் பொறுப்பை ஏற்கச் செய்வது மிக எளிதாக நடக்கும் என்றே எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், ஆர்எஸ்எஸ் அமைப்போ, மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த பாஜக தலைமைப் பதவிக்கு யாரை நியமிப்பது என்ற விவகாரத்தில் தங்களது கருத்து ஏற்கப்பட வேண்டும் என்று அழுத்தம் கொடுப்பதாகக் கூறப்படுகிறது. ஆனால், கட்சித் தலைமையை நியமனம் செய்யும் விவகாரத்தில், விட்டுக்கொடுக்க பிரதமர் நரேந்திர மோடி விரும்பவில்லை என்றும், வினோத் தாவ்டே அல்லது பன்சால் இருவரில் ஒருவர் விரைவில் பாரதிய ஜனதாவின் செயல் தலைவராக நியமிக்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது.

அதேவேளையில், ஆர்எஸ்எஸ் அமைப்புடன் தேவையற்ற மோதலைத் தவிர்க்கும் வகையில், கட்சித் தலைவர் நட்டாவின் பதவிக் காலத்தை இன்னும் சிறிது காலத்துக்கு நீட்டிக்கலாம் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

X
Dinamani
www.dinamani.com