
நீட் தேர்வு முறைகேடு தொடர்பான பல தகவல்கள் தொடர்ந்து வெளியாகி வரும் நிலையில், தற்போது புதிய ரகசியம் ஒன்று வெளிப்பட்டுள்ளது.
அதாவது, முதல் முறை நீட் தேர்வெழுதும் போது மிகக் குறைந்த மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவிகள், அடுத்த முயற்சியில் நல்ல ரேங்க் பெற்று தற்போது அரசு மருத்துவக் கல்லூரிகளில் எம்பிபிஎஸ் பயின்று வருகிறார்கள். இது உண்மையிலேயே நடந்த மேஜிக்கா இல்லை நடத்தப்பட்ட மேஜிக்கா? என்பதுதான் கேள்வி.
அதாவது, முதல் முயற்சியில் இரண்டு லட்சம் ரேங்க் அளவில் இருந்த மாணவி, அடுத்த முயற்சியில் 8 ஆயிரம் ரேங்க் எடுத்து தற்போது மும்பையில் உள்ள மருத்துவக் கல்லூரியில் எம்பிபிஎஸ் பயின்று வருகிறார்.
அதுபோல, 2022ஆம் ஆண்டு 10 லட்சத்துக்கு மேல் ரேங்க் எடுத்த மாணவர் 2023ல் 13 ஆயிரம் ரேங்க் எடுத்து அரசு மருத்துவக் கல்லூரியில் பயின்று வருகிறார்.
இதுபோல, இரண்டாவது முறை முயலும் மாணவர்களுக்கு அதிஷ்டம் அடிப்பது எப்படி? அதுவும் நம்ப முடியாத அளவுக்கு ரேங்க் மாறுவது எப்படி, ஒரு ஆண்டு பிரேக் எடுத்து முழுக்க நீட் தேர்வுக்காகப் படிப்பது மட்டுமே இந்த ரேங்க் முன்னேற்றத்துக்குக் காரணமா? அப்படியில்லை என்கிறது முதற்கட்ட விசாரணைகள்.
சாட்சியம் துல்லியமாக இருக்கிறது. இரண்டாவது முறை அவர்கள் தேர்வெழுதியிருப்பது, அவர்களது சொந்த ஊர்களிலிருந்து வெகு தொலைவில், கேட்பாரற்றுக் கிடக்கும் ஊர்களில்.
பெலகாவியில் உள்ள ஒரு தேர்வு மையம், பாட்னாவிலிருந்து தொலைவில் அமைந்திருக்கும் ஒருதேர்வு மையம் என எந்த சப்தமும் இல்லாத ஒரு சில தேர்வு மையங்களைத்தான், இந்த இரண்டாவது அதிர்ஷ்டத்தில் எம்பிபிஎஸ் படித்து வரும் மாணவர்கள் தேர்வெழுதியிருக்கிறார்கள்.
இவ்வாறு, முதல் முறை குறைந்த மதிப்பெண் எடுத்து, இரண்டாது அதிர்ஷ்டத்தில் நல்ல ரேங்க் பெற்று எம்பிபிஎஸ் படித்து வரும் மாணவர்களின் தகவல்களை மத்திய அரசு திரட்டி வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த முறையும் இப்படி ஒரு காட்சி அரங்கேறியிருக்கிறது. நாட்டின் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த மாணவர்கள் குஜராத் மாநிலம் கோத்ராவில் தேர்வு மையத்தைத் தேர்ந்தெடுத்திருக்கிறார்கள். இந்த தேர்வு மையத்தில் நடந்த முறைகேடு தொடர்பாக விசாரணை நடத்திய காவல்துறையினர், தேர்வர்களுக்கு முறைகேட்டாளர்கள் ஒரு குறிப்பைக் கொடுத்திருக்கிறார்கள். தெரியாத கேள்விகளுக்கு விடையளிக்க வேண்டாம்.
தேர்வர்களிடமிருந்து எழுதப்படாத விடைத்தாள்களைப் பெற்ற முறைகேட்டாளர்கள், அதனை அவர்களே சரியான விடையை நிரப்பிக் கொடுத்துள்ளனர். இந்த முறைகேட்டில் ஈடுபட்டவர்கள், தேர்வர்களிடமிருந்து முன்பணமாக ரூ.1 லட்சம் பெற்றுள்ளனர். தேர்வு முடிவுகள் வந்த பிறகு ரூ.9 லட்சம் கொடுக்க பேரம் பேசப்பட்டுள்ளது.
இப்படி, நீட் தேர்வில் முறைகேடு என்பது ஏதோ, அங்கொன்றும், இங்கொன்றுமாக நடப்பதாக இருக்கவில்லை என்றும், இது நாடு முழுவதும் பல்வேறு விதங்களில் நடந்துகொண்டிருப்பதாகவும், தேசிய தேர்வு முகமை,உடனடியாக இதில் கவனம் செலுத்த வேண்டும் என்றே போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் மாணவர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்கள்.
இந்த ஆண்டு தேர்வு முறைகேடு தொடர்பான விசாரணையின்போது, கடந்த காலங்களில் நடந்த தேர்வு முறைகேடுகள் கண்டுபிடிக்கப்பட்டு வருவது, மேலும் மாணவர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கி வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.