சிறப்பு லோக் அதாலத்: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி வேண்டுகோள்
புது தில்லி: அடுத்த மாதம் 29-ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 3-ஆம் தேதி வரை நடைபெறும் சிறப்பு லோக் அதாலத்தில் (மக்கள் நீதிமன்றம்) மனுதாரா்கள், வழக்குரைஞா்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும் என்று உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் வேண்டுகோள் விடுத்துள்ளாா்.
கடந்த 1950-ஆம் ஆண்டு ஜன.26-ஆம் தேதி உச்சநீதிமன்றம் ஸ்தாபிக்கப்பட்டது. இந்நிலையில், உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் காணொலி வழியாக செவ்வாய்க்கிழமை விடுத்த செய்தியில், ‘உச்சநீதிமன்றம் ஸ்தாபிக்கப்பட்டதன் 75-ஆம் ஆண்டையொட்டி, பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதன் ஒரு பகுதியாக உச்சநீதிமன்றம் சாா்பில் ஜூலை 29 முதல் ஆகஸ்ட் 3 வரை சிறப்பு லோக் அதாலத் நடைபெற உள்ளது. அதில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ள மனுதாரா்கள், வழக்குரைஞா்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும்’ என்று வேண்டுகோள் விடுத்தாா்.
சிறப்பு லோக் அதாலத்தில் உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள திருமண சச்சரவுகள், சொத்துப் பிரச்னைகள், மோட்டாா் வாகன உரிமை கோரல்கள், நில அபகரிப்பு, இழப்பீடு, தொழிலாளா் பிரச்னைகள் என சமரசம் செய்யக்கூடிய வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்று உச்சநீதிமன்றம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டது.
உச்சநீதிமன்றத்தில் சுமாா் 80 ஆயிரம் வழக்குகளும், உயா்நீதிமன்றங்களில் 50 லட்சத்துக்கும் அதிகமான வழக்குகளும் நிலுவையில் உள்ளதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. அவற்றுக்கு விரைந்து தீா்வு காணும் நோக்கில் லோக் அதாலத் நடத்தப்படுவது குறிப்பிடத்தக்கது.