
டோமினோஸ் பீட்சா கிளையை தொடங்குவதற்கு உரிமம் பெற இணையத்தில் முயற்சித்த நபரிடம் இருந்து ரூ. 20.77 லட்சம் மோசடி செய்யப்பட்டுள்ளது.
பஞ்சாப் மாநிலம் லூதியானாவை சேர்ந்த தார்செம் சிங் கோகோனி(வயது 48) டோமினோஸ் பீட்சா கிளைக்கான உரிமத்தை பெறுவதற்காக இணையதளத்தில் ஆராய்ந்து வந்துள்ளார்.
அப்போது, டோமினோஸ் கிளை உரிமையாளர்களுக்கான அதிகாரப்பூர்வ வலைதளம் போன்ற ஒன்றை கண்டுள்ளார். அதன் தோற்றத்தை கண்டு அதிகாரப்பூர்வ வலைதளமென கருதி தொடர்ந்து கிளை பெறுவதற்கான விண்ணப்பத்தை பதிவு செய்துள்ளார்.
சிறிது நேரத்தில் கோகோனியை தொடர்பு கொண்ட ஒருவர், டோமினோஸ் பீட்சா நிறுவனத்தின் ஊழியரை போன்று அவரிடம் பேசியுள்ளார். மேலும், கிளை தொடங்குவதற்கான முறைகள், விதிமுறைகள் உள்ளிட்டவற்றை தத்துரூபமாக பேசியதுடன், உரிமத்தை தக்க வைத்துக் கொள்ள ரூ.20.77 லட்சம் முன்பணமாக கேட்டுள்ளார்.
கோகோனியும் அவரின் பேச்சை நம்பி ரூ.20.77 லட்சம் பணத்தை ஆன்லைன் மூலம் செலுத்தியுள்ளார். ஆனால், பணம் செலுத்திய பிறகு கோகோனியின் அழைப்பை அந்த நபர் எடுக்காத நிலையில், ஏமாற்றப்பட்டத்தை உணர்ந்து காவல் நிலைய சைபர் பிரிவில் புகார் அளித்துள்ளார்.
இதேபோன்று சிறிது நாள்களுக்கு முன்னதாக, லூதியானா பகுதியை சேர்ந்த ஹிதேஷ் குப்தா என்பவர், கார் ஷோரூப் உரிமத்தை பெறுவதற்காக தவறான வலைதளத்தில் தேடி ரூ. 65 லட்சத்தை பறிகொடுத்தார்.
காவல்துறையின் தீவிர விசாரணைக்கு பிறகு ஹிதேஷ் குமார் பறிகொடுத்ததில், ரூ. 23 லட்சம் வரை மீட்டுக் கொடுத்திருந்தனர்.
இதுபோன்ற மோசடிகளில் இருந்து பாதுகாத்துக் கொள்ள, நீங்கள் தேடுதலில் ஈடுபடும் வலைதளம் அதிகாரப்பூர்வமானதா என்பதை உறுதி செய்துகொள்ள வேண்டும். பணம் செலுத்துவதற்கு முன்பு அதிகாரப்பூர்வ எண்களை தொடர்பு கொண்டு உறுதி செய்து கொள்ள வேண்டும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.